20130610

உலகக் கவிதை 2 - ஆதாம் - ஃபெதரீகோ கார்ஸியா லோர்கா

ஆதாம் (Adam)
ஃபெதரீகோ கார்ஸியா லோர்கா
நாடு : ஸ்பெயின்
மூல மொழி : ஸ்பானியம்
ஆண்டு : 1932

லோர்கா கொலை செய்யப்பட்ட பின் அவரது சடலம் கூட கிடைக்கவில்லை. ஆனால் இன்று ஸ்பெயின் நாட்டின் தேசிய அடையாளமாக அவர் கருதப்படுகிறார். 1932ல் ஸ்பானிய மொழியில் அவர் எழுதியது ஆதாம் எனும் கவிதை. இக்கவிதை மனிதனின் பிறப்பையும் உயிர்வாழ்தலையும் பற்றியது. மொழியாக்கம் செய்வதற்கு கடினமான கவிதை. லோர்கா எழுதிச்செல்லும் பல மறைகுறியீடுகளை பொருள் விளக்கம் செய்வது எளிதல்ல. இருந்தும் ஆதாம் கவிதையைப் பற்றியான எனது புரிதலை இங்கு மொழியாக்கம் செய்ய முயல்கிறேன்.  

மரமாகக் குவியும் குருதி
உதயத்தை ஊறவைக்கிறது
புதிதாகப் பிறந்த பெண்
தேம்பி அழுகிறாள்
அவளது கதறல்கள்
ரணத்திற்குள் பாய்ந்த கண்ணாடிக் கீற்றுகள்
ஜன்னல் சட்டத்தில்
விலா எலும்புகளின் கோட்டுச் சித்திரம்

பகல்வெளிச்சம் தன்னை நிலைநாட்டி வெற்றிபெறுகிறது 
கட்டுக்கதைகளின் வெண்ணிற எல்லைகள் கரைந்துபோகிறது
ஆப்பிளின் மந்தமான குளிரைத் தொட
ரத்தக்குழாய்களில் கொந்தளிப்பு சுழற்கிறது

களிமண்ணின் காய்ச்சலுக்குள் ஒரு ஆதாம்
கனவு காண்கிறான் 
தனது கன்னத்தின் நாடித்துடிப்பின்மேல்
பாய்ந்தோடிவரும் ஒரு வெண் குழந்தையை

வெந்த மண்ணினால் கறுத்துப்போன இன்னொரு ஆதாம்
கனவு காண்கிறான்
பாலினமற்ற நிலவின் விதையில்லாக் கற்களை
வெளிச்சத்தின் குழந்தையை எரிப்பதற்கு தீமூட்ட.....

தமிழில் : ஷாஜி