ஒரு ஊரில் ஒரு ஓநாய் இருந்ததாம்...
அந்த ஓநாய்க்கு ஆட்டுக்குட்டிகளின் மாமிசம் ரொம்ப பிடிக்குமாம்... அதனால் அந்த
ஓநாய் இறந்த ஒரு ஆட்டுக்குட்டியின் தோலை எடுத்து தன்மேல் போர்த்தி, மேய்ப்பன் இல்லாத
நேரம் பார்த்து ஒரு ஆட்டு மந்தைக்குள்ளே புகுந்ததாம்... விபரம் புரியாத ஆட்டுக்குட்டிகளுக்கிடையே
இணக்கமாக தங்கி அவற்றில் ஒவ்வொன்றையாக கொன்று தின்ன ஆரம்பித்ததாம்.... எங்கும் பாற்கடலென
நிலவொளி பரவிக்கிடக்கும் ஓர் இரவில், பனி பெய்யும் மேகங்கள் தாழ்ந்திறங்கும்
நேரத்தில் மேய்ப்பன் திரும்பி வந்தானாம். தனது ஆட்டுக்குட்டிகளின் எலும்புகளைப்
பார்த்து கதறி அழுது, தான் பொறுப்பற்று விட்டுப் போனதாலேயே அந்த அப்பிராணிகள்
உயிரிழந்தன என்று தவித்து, துயரமான ஒரு பாடலை பாடத்துவங்கினானாம். இரவின் ஆழ்ந்த
நிசப்தத்தில் இடிமுழக்கம்போல் ஒலித்த அப்பாடலின் கனத்தில் பயந்து நடுங்கிய ஓநாய்
அங்கிருந்து ஓடிப்போய் தலைமறைவுக்கு இடம் தேடியதாம்... இடமேதும் கிடைக்காமல் இறுதியில்
அது மனிதனின் இதயத்தில் புகுந்து, அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டதாம்...
காலம்காலமாக இருக்கும் ஒரு
நீதிக்கதைக்குமேல் நான் போர்த்திய ஒரு கட்டுக்கதை இது. ஆறுவயதான என் மகளுக்கு இதை
நான் சொல்லும்போது அவளுக்கே நன்றாகத் தெரிகிறது இது ஓநாய் குறித்தோ ஆட்டுக்குட்டி
குறித்தோ மேய்ப்பன் குறித்தோ உள்ள கதை அல்ல என்பது! ஓநாயும் ஆடுகளும்
ஆட்டுமந்தையும் நிலவொளி பரவிய அந்த இரவும் நிஜமாக இருக்கக் கூடியவைதான் என்றாலும்,
அவற்றின் வழியாக சொல்லப்படும் கருத்து அது எதுவுமல்ல என்பது ஒரு குழந்தைக்கே எளிதில்
தெரிவது. ஒரு ஓநாய் ஆட்டுத்தோல் போர்த்தி மாறுவேடம் போடுமா?
மேய்ப்பன் ஏன் ஆடுகளை அப்படி விட்டுப் போனான்? ஆடுகள் கொலை செய்யப்பட்டதைக் கண்டு
அவன் ஏன் பாட்டு பாடினான்? ஏன் அவனால் அந்த ஓநாயை பிடிக்க முடியவில்லை? ஒரு ஓநாய் மனிதனின்
இதயத்தில் புகுவது எப்படி? என்றெல்லாம் ஒருபோதும் என் மகள் கேள்வி கேட்க மாட்டாள்.
மாயை அல்லது பொய்த்தோற்றத்திற்கும்
யதார்த்தத்திற்கும் இடையே நடக்கும் வினோதமான விளையாட்டுதான் தனக்கு பிடித்தமான திரை
உத்தி என்று அகிரா குரொசாவா சொல்லியிருக்கிறார். தனது பல படங்கள் வழியாக அதை
விளக்கியுமிருக்கிறார். அதீத யதார்த்தம் என்றோ மீ யதார்த்தம் என்றோ இந்த உத்தியை வகை
வகுக்கலாம். இதில் கலைப்படங்கள், வணிகப்படங்கள் என்கிற பாகுபாடுகள் எதுவுமில்லை.
மேலோட்டமான காரண ஆய்வுகளுக்குப்
பொருந்தாத, முரண்பாடாகத் தோன்றக்கூடிய உருவகங்களின் அணிவகுப்பு தான் அத்தகைய
திரைப்படக் காட்சிகள். பாத்திரங்களின் மன ஓட்டங்களும் மனப் பிராந்திகளுமெல்லாம் அவற்றில்
காட்சியாக்கமாக விரிகின்றன. படிமங்களாக, உவமைகளாக, குறியீடுகளாக கவிதையிலும் இலக்கியத்திலும்
கையாளப்படும் இந்த உத்தியை, உலக சினிமாவின் சிறந்த ஆசான்களான பெர்க்மேன், புனுவேல்
போன்ற பலர் எழுபதாண்டுகளுக்கு முன்பிருந்தே கையாண்டு வந்திருக்கிறார்கள். தமிழ்
வணிக சினிமாவுக்குள் முதன்முதலாக ஆற்றலுடன் இதைச் சாத்தியப்படுத்திக் காட்டிய
திரைப்படம் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.
மனிதனின் ஆழ்மன உணர்வுகளை
காட்சிப்படுத்துவதற்கே தொடர்ச்சியாக முயன்ற பெர்க்மேன் ஓநாயின் மணிநேரம் (Hour of the Wolf) என்று ஒரு படமே எடுத்திருக்கிறார்!
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற தலைப்பிலேயே அது ஒரு யதார்த்தப் படமில்லை என்பதை
தெளிவாக சொல்லியிருக்கிறார் மிஷ்கின். மிஷ்கினின் எந்தவொரு படத்தையுமே யதார்த்தப்
படம் என்று சொல்ல முடியாது. யதார்த்தப் படங்கள் எடுப்பதில் அவருக்கு நாட்டமுமில்லை.
யதார்த்தமும் நாடகப் பாணியும் ஓங்கிய இசையும் நடன அமைப்பும் கூடியாட்டத் தன்மையும் இடை
கலந்து வருபவை அவரது படங்கள். ஆனால் யதார்த்தப் படங்கள் என்று சொல்லப்படுபவையில்
இங்கு பயன்படுத்தப்படும் யதார்த்தத்திற்கு முற்றிலும் புறம்பான ஷேக்ஸ்பியர்
காலத்து நாடக உத்தியான மனக்குரல் (Mind
voice) போன்றவற்றை மிஷ்கின் எப்போதுமே
தவிற்கிரார்!
மிஷ்கின் குரொசாவாவின் அதி
தீவிர ரசிகர். குரொசாவா பற்றி பேசுமிடத்தில் தன்னைப் பற்றி பேசுவதைக்கூட விரும்பாதவர்.
குரொசாவா, தர்காவ்ஸ்கி போன்றவர்களெல்லாம் மிக அரிதான ரத்தினக்கற்களைப் போன்றவர்கள்
என்றும் அவர்களை ஒரளவுக்கு புரிவதற்கே நமக்கு இன்னும் பல பதிற்றாண்டுகள் தேவைப்படும்
என்றும் சொல்பவர் அவர்! அவர்களின் தரத்திற்கு நம்மால் என்றைக்குமே படங்களை எடுக்க
முடியாது என்பது மிஷ்கினின் கருத்து. அவரே ஒப்புக்கொள்வதுபோல் ஓநாயும்
ஆட்டுக்குட்டியும் குறைகளற்ற படம் அல்ல. ஆனால் உலக சினிமாவின் அற்புத இயக்குநர்கள்
வெகுதூரம் நடந்து சென்ற பாதையின் துவக்கத்தில், முதல் அடி எடுத்து வைப்பதற்கான மிஷ்கினின்
முயற்சிதான் இப்படம்.
முன்முடிவுகள் எதுவுமே இல்லாமல்
திரைப்படங்களை பார்க்கும் எளிய மனம் கொண்ட பார்வையாளர்களையும் உண்மையான சிந்தனைத்திறன்
கொண்டவர்களையும் ஒரேபோல் கவர்ந்தது ஓநாயும் ஆட்டுக்குட்டியும். உலகம்
முழுவதுமிருந்து பலதரப்பினைச் சார்ந்தவர்கள் ஊடகங்களிலும் பொதுவெளிகளிலும் பதிவு செய்த
கருத்துக்களும், தனிப்பட்ட முறையில் எனக்கு வந்த பல்லாயிரக்கணக்கான மடல்களும் அழைப்புகளும் அதன் அழியா சாட்சியங்கள். குடும்பத்துடன் திரையரங்கில் வந்து ஓநாயும்
ஆட்டுக்குட்டியும் பார்த்த இயக்குநர் பாலா என்னிடம் சொன்னார் “மிஷ்கின்
அசாத்தியமான இயக்குநர். அவர் போன்று இன்னொருவர் இங்கில்லை. தமிழ் சினிமாவுக்கு
கிடைத்த பெரும் வரம் அவர்” என்று!
கலைரீதியாக பெருமளவில்
கொண்டாடப்பட்டு, ஏற்கத்தகுந்த வணிக வெற்றியையும் பெற்ற ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் பணியாற்றிய தருணங்கள் ஒவ்வொன்றும் என்னை
மேலும் பணிவான, சுயநலமும் தற்பெருமையும் அற்ற மனிதனாக மாற்றியவை! யதார்த்தம் என்று நினைக்கக் கூடிய சூழல்களுக்குமேல் கட்டப்பட்ட அதீத யதார்த்தம்தான்
இப்படம் என்பது போலவே இதன் படப்பிடிப்புக்கு நடுவே நிகழ்ந்த பல சம்பவங்களும்
மிகுந்த கற்பனைத் தன்மையுடன் தான் இருந்தன!
காவல் துறையின் குற்ற விசாரணைப் பிரிவில் அதிகாரியாக வரும் எனது பாத்திரம், ஆணையரின்
அலுவலகத்தில் அவரிடமும் அவரது நண்பரான மருத்துவரிடமும் வாதிடும் காட்சிதான்
முதன்முதலில் படமாக்கப்பட்டது. ஒரு பக்கத்துக்குமேல் வரும் வசனத்தை மனப்பாடம்
செய்து ஒரே எடுப்பில் பேசவேண்டும்! அத்துடன் உணர்ச்சிகள் திடமாகவும் வலுவாகவும் வெளிப்பட
வேண்டும்! காட்சிகளை எப்போதுமே நீளமாக எடுக்கும் மிஷ்கினின் சிக்கலான
காட்சியமைப்பு வேறு! ஒன்று சரி வரும்போது எனக்கு இன்னொன்று தவறிவிடும். திரையில் இப்போதிருக்கும்
காட்சியை விட சிறப்பாக அமைந்த சில எடுப்புகள் இருந்தன! ஆனால் அவற்றின் கடைசிப்
பகுதிகளில் எனது முன் அனுபவமின்மையால் தவறுகள் நடந்து விட்டன! 62ஆவது எடுப்பு தான்
திரையில் இப்போது நீங்கள் பார்க்கும் அந்த காட்சி! அதைப் படமாக்கிய பின்னர்
மிஷ்கின் என்னைக் கட்டியணைத்தார். அன்றைக்கு என்னால் சாப்பிடவோ தூங்கவோ
முடியவில்லை. சிபிசிஐடி லால் ஆக நான் என்னை உணரத் துவங்கியிருந்தேன்!
அந்த நாட்களில் நான் பாடக
நடிகர் சந்திரபாபுவின் பாடல்களை கேட்ட வண்ணமே இருந்தேன். எனது வீட்டிலும்
வாகனத்திலும் எப்போதும் சந்திரபாபு பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருந்தன.
அப்பாடல்கள் ஒவ்வொன்றும் கேட்கும்போது அந்த மகா கலைஞனின் அலாதியான மேதமையும் அவரது
துயரமான வாழ்க்கையும் என் மனதை அலைக்கழித்துக் கொண்டேயிருந்தன. ஓநாயும்
ஆட்டுக்குட்டியும் படத்தின் கடைசிக் காட்சிகளில் வரும் அந்த கல்லறைத்
தோட்டத்திற்குள்ளே படப்பிடிப்பிற்காக நுழையும்போது மிஷ்கின் என்னை ஒரு கல்லறையின் பக்கம்
அழைத்து சென்றார். பதின்பருவத்தை எட்டிய அவரது மகளும் கூடவே இருந்தாள். மிஷ்கின்
அக்கல்லறையத் தொட்டு முத்தமிட்டார். அப்போதுதான் நான் அதைக் கவனித்தேன். அது
சந்திரபாபுவின் கல்லறை! ”அப்பா வணங்கும் ஒரு மாபெரும் கலைஞனின் கல்லறை
இது. தொட்டுக் கும்பிட்டுக்கோ” என்று மகளையும் கும்பிட
வைத்து என்னை அங்கே தனியாக விட்டுச் சென்றார் மிஷ்கின். என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. ஒரு மணிநேரத்துக்கும்
மேல் சந்திரபாபுவைப் பற்றி யோசித்தபடியே கண்ணீருடன் நான் அங்கு
நின்றுகொண்டிருந்தேன்.
அந்த கல்லறைத்
தோட்டத்திற்குள் பல இரவுகளை நாங்கள் கழித்தோம். கல்லறைகளுக்குமேல் அமர்ந்து,
அங்கேயே உண்டு, தாங்க முடியாத கொசுத்தொல்லைக்கு நடுவேயும் அவ்வப்போது எதாவது ஒரு
கல்லைறைக்கு மேலே படுத்து கண்ணயர்ந்து...! இறந்து போனவர்கள் நம்மை எதுவும் செய்ய
மாட்டார்கள். ஒரு இரவில் கல்லறைத் தோட்டத்திற்கு பின்னாலிருக்கும் புதர்கள் மண்டிய
இடத்தில் மனிதர்களின் எலும்புகள் வீசப்பட்டிருப்பதைக் கண்டேன். புதிய புதைகுழிகள்
தோண்டும்போது கிடைத்த பழைய மனிதற்களின் எலும்புகள்!
ஸ்ரீ நடிக்கும் கதாநாயகப் பாத்திரம்,
எனது உதவியாளனை அடித்து விழவைத்து எங்கள் துப்பாக்கிகளை பலவந்தமாக எடுத்து
அங்கிருந்து தப்பிக்கும் காட்சி படமாக்கப்பட்ட இரவு மறக்க முடியாதது. முதலில் ஓநாயால்
கட்டிப் போடப்பட்டிருக்கும் ஸ்ரீயை நான் கட்டறுத்து விடவேண்டும். அதற்கு சற்று
முன்புதான் அங்கேயே கண்தெரியாத ஒரு பாத்திரத்தை நான் தெரியாமல் சுட்டுக்
கொல்கிறேன். அந்த காட்சியின் உணர்வில் திளைத்து நிற்கிறார் மிஷ்கின்!
ஸ்ரீயின் கைக்கட்டை அறுக்க
என்னிடம் கொடுத்த கத்திக்கு கூர்மையே இல்லை! காட்சி படமாக்க ஆரம்பித்துவிட்டார்கள்!
பாலாஜி ரங்காவின் கேமரா என் பக்கம் வரும் முன் நான் ஒரு உதவி இயக்குநரிடமிருந்த தொட்டால்
வெட்டும் ஒரு சிறிய வெட்டுச் சாதனத்தை வாங்கினேன். எடுப்பின்போது ஸ்ரீயின் கை
அறுந்திடக்கூடாது என்ற கவனத்தில் எனது விரலை நான் மோசமாக அறுத்து விட்டேன்.
கொட்டிய ரத்தம் காட்சி எடுப்பை சிக்கலாக்கியது. படப்பிடிப்பு தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அன்று எனக்குப் பிறந்த நாள்!
தனது பாத்திரத்திற்கு வலிமை
சேர்க்க ஸ்ரீ எடுத்த முயற்சிகள் அலாதியானது. பெரும்பாலான நேரங்களில் சாப்பிடாமல்,
தண்ணீர் கூடக் குடிக்காமல் அப்பாத்திரத்தின் மனநிலையிலேயே வாழ்ந்துகொண்டிருந்தார்.
மிஷ்கின் சொல்லிக்கொடுக்கும் விஷயங்களை கனக் கச்சிதமாக உள்வாங்கி நடிக்கும் ஆற்றலை
எப்போதுமே வெளிப்படுத்தினார். அப்பாத்திரத்தின் முழுநிறைவுக்காக தனது உடலையும்
மனதையும் மிகவும் வருத்தினார். ரயில் பாலத்திலிருந்து கயிற்றில் தொங்கி
கீழிறங்கும் காட்சியில் கையில் அணிந்திருந்த உறை கிழிந்து அவரது
உள்ளங்கையிலிருக்கும் தோல் உரிந்துபோனது. ஆரம்பக் காட்சிகளில் பலமுறை தன்னை விட
இருமடங்கு எடை கொண்ட மிஷ்கினை தோளில் தூக்கியெடுத்து நடந்து படிக்கட்டுகள் ஏறினார்!
மிஷ்கினின் வலங்கையான இணை
இயக்குநர் புவனேஷ் கண்தெரியாத இருபது பேரை அழைத்து வந்தார். அவர்கள் வரும்போது ஒரு
மூலையில் அமர்ந்து அன்று அவர்கள் பாடி நடிக்க வேண்டிய பாடலின் வரிகளை
எழுதிக்கொண்டிருந்தார் மிஷ்கின். அரைமணி நேரத்தில் மேற்கத்திய செவ்வியல்
இசையமைப்பாளர் அண்டோனின் ட்வோர்ஷாக் அமைத்த ஸ்டபாட் மாடெர் எனும் இசையை மையமாக
வைத்து ’போகும் பாதை தூரமில்லை,
வாழும் வாழ்க்கை பாரமில்லை’ எனும் பாடலை உருவாக்கினார். அது அந்த
பார்வையற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கத் துவங்கினார். அவர்களில் யாருமே நன்றாகப்
பாடக்கூடியவர்கள் அல்ல என்பதை உணர்ந்த பின்னரும் மிகுந்த பொறுமையுடனும்
நேசத்துடனும் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார்.
அப்போது மிஷ்கினிடம் நான்
பேட்ரிக் ரொசாரியோவைப் பற்றிச் சொன்னேன். அவரும் கண் பார்வையற்றவர். அக்கார்டியன்
எனும் இசைக் கருவியை மிகச்சிறப்பாக இசைக்கக் கூடியவர். எனது ’இசையின் தனிமை’ புத்தக வெளியீட்டு விழாவில் ஆரம்ப இசை வழங்கியபோது
மிஷ்கினும் அவரை பார்த்திருக்கிறார். உடனடியாக அவரை அழைத்து வரும்படி சொன்னார்.
அவர் வந்துசேரும் வரை காத்திருந்து அந்த கண்தெரியாதவர்களின் பாடலுக்கு அக்கார்டியன்
வாசிப்பவராக அவரையும் நடிக்க வைத்து, அவரது இசையின் துணையுடன் அக்காட்சியை பதிவு
செய்தார். பின்னர் குரல் பதிவின்போது பேட்ரிக்கை ஒலிப்பதிவு கூடத்திற்கு வரவழைத்து
அப்பாடலின் அசல் வடிவத்தைப் பதிவு செய்தார். திரையில் தனது நடிப்பை ‘பார்ப்பது’ மிகவும் சந்தோஷமாகயிருந்தது என்று பேட்ரிக் பின்னர் என்னிடம் சொன்னார்.
வடபழனியில்
உள்ள ஒரு மாபெரும் அடுக்குமாடி அங்காடித் தொகுதியின் வாகனங்கள் நிறுத்தும்
நாங்காவது அடித்தளத்தில்தான் படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. அங்கு
பதிவான அந்த சண்டைக் காட்சியின்போது மிஷ்கினின் கால்கள் பல இடத்தில் காயம்பட்டன. அக்கால்களை
வைத்துக்கொண்டே அந்த பெண்மணியையும் குழந்தையையும் தோளில் தூக்கி
ஓடிக்கொண்டேயிருந்தார்! படப்பிடிப்பின் கடைசி நாளில் மிஷ்கின் நடித்த ஓநாய்
பாத்திரம் இறந்துவிழும் காட்சி படமாக்கப்படும்போது கார்த்தி எனும் குழந்தையாக நடித்த
சைதுப் பாப்பா மயக்கமாகி விழுந்தாள். அந்த காட்சியின் உக்கிரம் அக்குழந்தையின்
மனதை அவ்வளவு பாதித்திருந்தது. காவல் துறையினராக நடித்துக் கொண்டிருந்த சில
நண்பர்களும் மயக்கம்போட்டு விழுந்தனர்!
ஒரு சாதாரண
திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் வசதிகளோ பாதுகாப்புகளோ எதுவுமில்லாமல்
எடுத்து முடிக்கப்பட்ட படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்! மிஷ்கின் பாயும் மின்
ரயிலிலிருந்து கீழே குதிக்கும் காட்சி எடுக்கப்பட்டதும் மிகக்குறைவான பாதுகாப்பு
ஏற்பாடுகளுடன் தான். அன்றும் தனது மகளுடன் படப்பிடிப்புக்கு வந்தார் மிஷ்கின். அக்காட்சிகளில்
நான் இல்லாதபோதிலும் என்னையும் வரவழைத்தார். ”இன்றிரவு முழுவதும் என்னுடன் இருங்கள்” என்றார். பாயும் ரயிலிலிருந்து குதித்து அவர் கீழே விழப்போகும்
இடத்தில் தடுப்பு மெத்தைகள் போடப்பட்டிருந்தன. ஒத்திகைக்காக ரயில்
ஓட்டப்பட்டபோதுதான் ரயிலின் அசுர வேகம் எனக்கு விளங்கியது. அந்த வேகத்தில்
ரயிலிலிருந்து குதித்தால் தடுப்பு மெத்தைகளின்மேல் தான் அவர் விழுவார் என்பதற்கு
எந்த உத்தரவாதமும் இல்லை!
நாலாபக்கமும்
துருத்தி நிற்கும் கனமான இரும்பு தூலங்களும் உத்தரங்களும்! அதைச்சுற்றி கடும்
காரைச் சுவர்கள். ஒரு நொடியில் எதுவும் நடக்கக் கூடும். தனது கலையில் யார்
அறிவுரைகளையுமே ஏற்றுக்கொள்ள மாட்டார் மிஷ்கின் என்பதை நன்கு தெரிந்திருந்தும் ’பயிற்சி பெற்ற நகல்
நடிகரை வைத்து எடுக்கலாமே’ என்று பலவீனமான குரலில் சொன்னேன்.
அதற்கு அவர் சிரித்தபடியே ”இதைச் சொல்லவா உங்களை
வரச் சொன்னேன்? எனக்கு எதாவது நடந்தாலும் என் மகளுக்கு நீங்களெல்லாம்
இருக்கிறீர்கள் என்ற மன நிம்மதிக்காகத் தானே” என்று சொல்லி ரயிலேறினார். சில நொடிகளில்
அதிவேகத்தில் பாயும் ரயிலிலிருந்து அவர் கீழே குதித்தார். எனது மனம் ஒருகணம்
உறைந்துபோனது. மெத்தை மேல் விழுந்து எழுந்து நின்றார். ஆபத்தான குதிப்புகளை
தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறார் மிஷ்கின். பெரும்பாலும் அவர் தடுப்பு மெத்தைகளின்மேல்
விழுவதேயில்லை. இருந்தும் எழுந்து வந்துகொண்டேயிருக்கிறார்... அடுத்த குதிப்புக்கு ஆயத்தமாக...
ஓநாய்க்களின் நிழல்படாத இதயத்துடன்....