20140718

மதன் மோகன் மற்றும் நௌஷாத் – வெகுஜன இசையை மதிப்பிடுதல் பற்றி




தன்னுடைய வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின்போது லதா மங்கேஷ்கர் அவர் அதுவரை பாடிய பாடல்களிலிருந்து மிகச்சிறந்த பத்து பாடல்களை தேர்வுசெய்து வெளியிட்டார். அதில் நௌஷாத், எஸ் டி பர்மன், அனில் பிஸ்வாஸ் ஆகியவர்களின் எந்தப்பாடலும் இடம் பெறவில்லை! ஆனால் அதில் சலில் சௌதுரி, ரோஷன், வசந்த் தேசாய் போன்றோர் இருந்தனர். அத்தொகுப்பில் இரண்டுமுறை தெரிவுசெய்யப்பட்ட ஒரே இசையமைப்பாளர் மதன் மோகன்.

இந்தி திரையுலகின் சிறந்த இசையமைப்பாளர் யார் என்று கேட்டால் மதன் மோகனின் பெயரை எத்தனைபேர் சொல்லக்கூடும்? வெகுஜன மத்தியில் மிக மிக அபூர்வமாகவே அவர் குறிப்பிடப்படுகிறார். ரோஷன் பெயர் இன்னும் அபூர்வம். சூப்பர் ஹீரோ ரிதிக் ரோஷனின் தாத்தா என்றால் சிலர் நினைவுகூரக்கூடும். அதேசமயம் நௌஷாத் போன்றவர்கள் அடைந்த புகழ் மிகமிக பெரிது. அவர் மறைந்தபோது எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் அவரைப்பற்றிய பலமடங்கு பெரிதுபடுத்தப்பட்ட பிம்பம் முன்வைக்கப் பட்டதைத்தான் கண்டேன்.

திரை இசை என்பது மிகநுட்பமானது. அதே சமயம் மிகமிக பிரபலமானதும் வேகமாக மாறுவதும்கூட. ஆகவே தெளிவான திறனாய்வுகளோ கச்சிதமான மதிப்பீடுகளோ இங்கு உருவாவதில்லை. வெற்றியும் புகழும் பல்வேறு காரணங்களை ஒட்டி உருவாகி வருகின்றவை. அவ்வெற்றியின் பக்கவிளைவாக நாளிதழ்களில் மேலோட்டமாக எழுதிக்குவிக்கப்படும் கட்டுரைகள் மூலம் சில பிம்பங்கள் உருவாகி அவை விவாதிக்கப்படாமல் அப்படியே நினைவில் நிலைபெறுகின்றன. இதனால் மதிப்பீடுகளை விட பிரமைகள்தான் அதிகமும் நம்மிடம் வாழ்கின்றன.

பொதுவாக செவ்வியல் கலைகளைப்பற்றி மட்டும்தான் அறிவுபூர்வமாகத் திறனாய்வுசெய்து பேசவேண்டும் என்று ஒரு நம்பிக்கை உலகமெங்கும் இருந்தது. பிரபல கலைகளான சினிமா, வணிக எழுத்து முதலியவை அறிஞர்களால் உதாசீனம்செய்யப்பட்டு நாளிதழ்களின் பத்தி எழுத்தாளர்களுக்கு விடப்பட்டன. அவர்களுக்கோ கலை சார்ந்த அளவுகோல்கள் ஏதுமில்லை. அந்த காலகட்டத்தில் பொதுவாக எந்த மனச்சித்திரம் உள்ளதோ அதையே அவர்களும் பிரதிபலிக்கிறார்கள். 1960களில் மார்க்ஸிய திறனாய்வாளரான அண்டோனியோ கிராம்ஷியின் சிறைக் குறிப்புகள் ஆங்கிலத்தில் வெளியானதை ஒட்டித்தான் பிரபல கலை இலக்கியங்களை திறனாய்வுசெய்வது இன்றியமையாதது என்ற எண்ணம் மேலைநாடுகளில் உருவானது. இன்று ஊடகங்களில் பிரபல கலைகள் விரிவாகவே ஆய்வுசெய்யப்படுகின்றன.

ஆனால் இந்தியாவில் பலசமயம் நடப்பது என்னவென்றால் ஏற்கனவே மேலோட்டமான இதழாளர்களால் எழுதப்பட்ட செய்திகளை மூலத்தகவலாகக் கொண்டு அதே மதிப்பீடுகளை மீண்டும் முன்வைத்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. சீரான முறைமை கொண்ட புது ஆய்வுகள் நிகழ்த்தப்படுவதில்லை. அத்துடன் பெரும்பாலான எழுத்துக்கள் ஒரு கடந்தகால ஏக்க மனநிலை சார்ந்து அந்தரங்க மதிப்பீடுகளாக முன்வைக்கப்படுகின்றன. எதையும் மதிப்பிடும்போது தெளிவான புறவயமான அளவுகோல்களும் உணர்ச்சிவசப்படாத நோக்கும் தேவை. அது நம் பிரபலக்கலைகள் பற்றிய ஆய்வுகளில் இன்னும் காணப்படுவதில்லை. இதன் விளைவாக வெற்றி பெற்ற நடுத்தரக் கலைஞர்கள் மிதமிஞ்சி புகழப்படுவதும் மேதைகள் மறக்கப்படுவதும் இங்கு சாதாரணமாக உள்ளது.

மதன் மோகன் அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்குரிய அங்கீகாரத்தைப் பெறவில்லை. இன்று தேர்ந்த இசைவிற்பன்னர்கள் அவரை ஒரு பெருநிகழ்வு என்று கருதினாலும் இந்தியாவில் பரவலாக அவர் அறியப்படவில்லை. சலில் சௌதுரி, ரோஷன் போன்றோருக்கும் இதே நிலைதான் உள்ளது. ஆனால் நௌஷாதை எடுத்துக் கொள்வோம். 1940ல் பிரேம் நகர் என்ற படத்தின் வழியாக அவர் இசையமைப்பாளரானார். அடுத்த நான்குவருடங்கள் அவர் ஏறத்தாழ ஒரு டஜன் படங்களுக்கு இசையமைத்தார். 1942ல் நயீ துனியா படத்தில் அவர்தான் நடிகை சுரைய்யாவை பாடகியாக அறிமுகம் செய்தார். அக்கால படங்களில் எத்தனை பாடல்கள் இருக்கும் என நாம் அறிவோம். நௌஷாதின் உக்கிரமான ரசிகர்களால்கூட அவற்றிலிருந்து ஒரு பாடலைக்கூட சுட்டிக்காட்ட முடியாது. 1944ல் ரத்தன் என்னும் வெற்றிப்படத்தில் 'அகியா மிலா கே ஜியா பர்மா கே' வருவது வரை நௌஷாத்தின் கேட்கத்தக்க ஒரு பாடலுக்காக காத்திருக்கவேண்டியிருந்தது. அங்கிருந்து தொடங்கும் அவரது இசைப்பயணத்தில் எத்தனை படங்கள்! எத்தனை பாடல்கள்! இன்று ஒரு வெறிபிடித்த நௌஷாத் ரசிகரால்கூட 90க்கும் கீழான பாடல்களை மட்டும்தான் அவரது 'சிறந்த' பாடல்களாக சுட்டிக்காட்ட முடிகிறது!

நௌஷத்தின் வியப்பூட்டும் வெற்றியின் ரகசியம் என்ன? நடுத்தரமான அவரது இசை ஏன் அத்தனை பரவலாக அங்கீகாரம் பெற்றது? ஒன்று, அவரது மெட்டுகள் முற்றிலும் மரபான ராகங்களின் அடிப்படையில் மிக எளிமையாக அமைக்கப்பட்டவை. எல்லாருக்கும் அவை கேட்டபாடல்களை நினைவூட்டும். யாரும் அவற்றை எளிதில் பாடிக்கொள்ள முடியும். அத்துடன் மிகப்பெரிய படநிறுவனங்களும் நடிகர்களும் இணைந்து உருவாக்கிய வெற்றிகரமான பெரிய படங்களுடன் தன்னை மிக கவனமாக இணைத்துக் கொண்டார் நௌஷாத். அவரது இசைக்கு எப்போதுமே உச்சகட்ட விளம்பரமும் மிகச்சிறப்பான வினியோகமும் கிடைத்தன. அவரது பாடல்கள் சிறப்பாக படமாக்கப்பட்ட உணர்ச்சிகரமான காட்சிகளுடன் இணைந்து, பெரும் நட்சத்திரங்களால் வாயசைக்கப்பட்டன.

நௌஷாதின் கணக்கில் 26 வெள்ளிவிழாப்படங்கள் 9 பொன்விழாப்படங்கள் 3 வைரவிழாப்படங்கள் உள்ளன. அன்றைய பெரும் நட்சத்திரம் திலீப் குமாரின் நெருங்கிய நட்புக்குரியவராக விளங்கிய நௌஷாத் அவரது பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தார். நௌஷாத் அவரது மிகச்சிறந்த படமாகக் குறிப்பிடுவது முகள் ஏ அசம். அக்காலகட்டத்து பெரும்வெற்றிப்படமான இது சமீபத்தில் டிஜிட்டல் வண்ணத்தில் மீண்டும் திரையிடப்பட்டு வெற்றி பெற்றது. எக்காலத்திலும் ஒளிமங்காத முகள் ஏ அசம், மதர் இந்தியா போன்ற படங்களில் பங்குபெறுவதும் அக்காட்சிகளின் இசையை அமைக்கநேர்வதும் அதிருஷ்டமேயாகும். இன்று கேட்கும்போது முகள் ஏ அசம் படத்தில்வரும் 'ப்யார் கியா தோ டர்னா க்யா' அல்லது 'மொஹபத் கி ஜூட்டீ கஹானீ பே ரோயே' போன்ற பாடல்களில் காலத்தை வெல்லும் கலையம்சமாக என்னதான் இருக்கிறது என்று கண்டுகொள்ள முடியவில்லை!

மிகச்சாதாரணமான மெட்டுகள், மிகமிகச் சாதாரணமான இசைகோர்ப்பு. இப்பாடல்கள் ஏதேனும் சிறு படத்தில் சேர்க்கப்பட்டிருந்தால் எவராலும் கவனிக்கப்பட்டிருக்காது என்பது உறுதி. இன்னொரு குறைத்து மதிப்பிடப்பட்ட இசையமைப்பாளரான குலாம் முகம்மத் பக்கீசா படத்துக்கு அமைத்த இசை இதைவிட பலமடங்கு மேலானது என்று உறுதியாகக் கூறுவேன். ஏறத்தாழ 12 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த பக்கீசா வெளிவந்தபோது குலாம் முகம்மது உயிருடன் இருக்கவில்லை. நௌஷாதை விட மிகவும் மேலான இசையமைப்பாளராக இருந்தும் குலாம் முகம்மது பிழைப்புக்காக நௌஷதுக்கு உதவியாளராக பணியாற்றி வந்தார்!

நௌஷாதுக்கு புகழ்மாலைகள் சூட்டி நாளிதழ்கள் வெளியிடும் கட்டுரைகளில் குறிப்பிடப்படும் முக்கியமான ஓர் அம்சம் அவர் முகம்மது ரஃபியின் சிறந்த சாத்தியங்களை முழுக்க வெளிக்கொணர்ந்தார் என்பதாகும். இதுகூட ஒரு கற்பனையே. மதன் மோகன், லக்ஷ்மிகாந்த் பியாரேலால், சங்கர் ஜெய்கிஷன், எஸ் டி பர்மன், ரவி, ஓ பி நய்யார் போன்றவர்கள் கூட நௌஷாதைவிட அதிகமாக முகமது ரஃபியின் குரலுக்கு புதிய புதிய பாதைகளை திறந்து கொடுத்தவர்கள் என்பதை பல பாடல்களை உதாரணமாகக் காட்டி நிறுவமுடியும்.

லதா மங்கேஷ்கருக்கு மட்டுமில்லாமல் முகமது ரஃபிக்கும் மகத்தான பாடல்களை அளித்தவர் மதன் மோகன். ரங்க் ஔர் நூர் கி பாராத் (படம்: கஸல்- 1964), கபீ ந கபீ மற்றும் சாவன் கி மஹீனே மே (படம்: ஷராபீ- 1965), ஆப் கே பஹலூம் மெ ஆ கர் (படம்: மேரா சாயா- 1966), தும்ஹாரி சுல்ப் கெ சாயே மே (படம்: நௌ நிஹால்- 1967), யே துனியா யே மெஹபில் (படம்: ஹீர் ரான்ஜா- 1971) போன்றவை உடனடியாக நினைவில் எழும் பாடல்கள்.

காலம் அனைவரையும் விட கறாரான திறனாய்வாளன் என்பார்கள். இன்று பிறரைவிட மதன் மோகன் மேலெழுந்து வருவதைக் காண்கிறேன். திரை இசைபற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நான்கு பாடல்கள் பேசப்பட்டால் அதிலொன்று மதன்மோகனின் பாடலாக இருக்க்கிறது. பாடல் போட்டி நிகழ்ச்சிகளில் புதிய பாடகர்கள் நீதிபதிகளை கவர மதன் மோகன் பாடல்களைப் பாடுகிறார்கள். இன்று மதன் மோகன் பெயரைச்சொல்வது விஷயமறிந்தவர் என்பதற்கான அடையாளமாகியுள்ளது!

ஏன் ஒரு மேதை புறகக்ணிகப்படுகிறார்? பல காரணங்கள். முதல் விஷயம், இசை என்பது மிக நுட்பமான ஒன்றானதால் அதை கூர்ந்து கேட்டு ரசிப்பவர்கள் எப்போதும் எண்ணிக்கையில் குறைவு என்பதுதான். சாதாரணமாக மக்கள் அதிகம் பேசப்படுவதையும் ஏற்கனவே தெரிந்ததையும்தான் ரசிக்கிறார்கள். இசை ரசனையில் பிற விஷயங்கள் கலந்துள்ளன. இரண்டாவதாக அந்த மேதையின் தனிப்பட்ட குணங்கள் அவனை அன்னியப்படுத்துகின்றன.

மதன்மோகனின் வாழ்க்கையையே கவனிப்போம். அவரது காலகட்டத்தில் திரை இசை சில முகாம்களாகவே உருவாக்கப்பட்டது. இசையமைப்பாளார்களுடன் நடிகர்கள் படத்தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் ஆகியோர் அடங்கியது அம்முகாம். அது பெரும்பாலும் நிலைபெற்றுவிட்ட ஒரு அமைப்பாக இருக்கும். தேவ் ஆனந்தின் நவ்கேதன் நிறுவனம் எஸ் டி பர்மன் மற்றும் ஆர் டி பர்மன் ஆகியோரையே இசையமைப்பாளராகக் கொண்டிருந்தது. ராஜ்கபூருக்கு சங்கர்-ஜெய்கிஷன். திலீப் குமார் போன்ரவர்களுக்கு நௌஷாத். மதன் மோகன் அல்லது சலில் சௌதுரி போன்றவர்கள் மாபெரும் கலைஞர்கள் என இவர்களில் பலருக்குத் தெரியும் என்றாலும் குழுவை உடைக்க அவர்கள் விரும்பவில்லை. ராஜ் கபூர் தேவ் ஆனந்த் போன்றவர்கள் மதன் மோகனின் நண்பர்களாக இருந்தும்கூட அவர்கள் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. ராஜ் கபூர் சத்யம் சிவம் சுந்தரம் படத்துக்காக மதன் மோகனை அழைத்ததாகவும் அவ்வாய்ப்பு பின்பு ஏதோ காரணத்தால் நழுவிச்சென்றதாகவும் சொல்லப்படுகிறது. ஆகவே மதன் மோகனின் எண்பது சதவீத இன்னிசை மெட்டுகள் உப்புசப்பில்லாத குட்டிப்படங்களின் அரைவேக்காட்டுக் காட்சிகளுக்கு பின்னணியாக ஒலிக்க நேர்ந்தது. (சலில் சௌதுரியின் கதையும் அதே தான்!).

மதன் மோகனின் இன்னொரு சிறப்பம்சம் அவர் மிகநுட்பமான இசையமைப்பாளர் என்பது. தன் இசையை நௌஷாத் போல ஜனரஞ்சகமாக்க அவர் முயலவில்லை. தன் இன்னிசைமெட்டுகள் மீது அவருக்கு பெரும் மதிப்பு இருந்தது. கஸல் பாணியில் அமைந்த மிகச்சிறந்த பாடல்களை அவர் தந்திருக்கிறார். ஆனால் அவர் அவற்றை கஸல்களாக அமைத்ததேயில்லை. காதல்பாடல்களாகவும் சோகப்பாடல்களாகவும் முற்றிலும் மாற்றிக் கொடுத்திருக்கிறார். கஸலில் அவர் அளிக்கும் இந்த நுண்ணிய மாற்றமே அவரது சிறந்த பங்களிப்பாகும். அதாலத் படத்தின் 'ஜமீன் ஸே ஹமே ஆஸ்மா பர்', நீலே ஆகாஷ் படத்தில் வரும் 'ஆப் கோ பியார் சுபானே கி புரீ ஆதத் ஹே' போன்ற பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம். மேம் சாப் படத்தில் வரும் 'தில் தில் ஸே மிலா கர்' போல மேலைநாட்டு மெட்டுகளையும் கையாண்டிருக்கிறார் என்றாலும் கஸல்பாணி தான் அவரது சிறப்பு.

நௌஷாத் பலமுறை சொன்னதுண்டு, மதன் மோகன் இசையமைத்த அண்பட் படத்தின் 'ஆப் கி நஜரோன் னே ஸம்ஜா' மற்றும் 'ஹை இசீ மே பியார் கி ஆப்ரூ' பாடல்கள், தனது மொத்த இசைச் சாதனைக்கு நிகரானவை என்று. ஆனால் அதை அவர் மதன் மோகன் உயிருடன் இருக்கும்போது சொல்லவில்லை. (ஆப் கி நஜரோன் னே ஸம்ஜா ஒரு லிஃப்டில் ஐந்தாம் மாடியை நோக்கிச் செல்லும்போது சில நிமிடங்களில் உருவான மெட்டு). எஸ் டி பர்மன், ''மதன் மோகனின் ஹீர் ரான்ஜா படத்தில் வரும் பாடல்களுக்கு பாதியளவுக்கு நுட்பமான ஒரு பாடலைக்கூட என்னால் அமைக்க முடிந்ததில்லை'' என்று சொன்னார். லதா மங்கேஷ்கரும் மதன் மோகனும் நிகரற்ற ஒரு இணைவு என்று ஓ பி நய்யார்  சொன்னார். மதன் மோகன் இறந்தபின் பல இசையமைப்பாளர்கள் அவரது பெயரை மிகுந்த மதிப்புடன் சொல்ல ஆரம்பித்தனர் என்பது வேறு கதை!

தன் இசை வெற்றிபெற்றும் அந்தப்படம் படுதோல்வி அடையும் தருணங்களை தொடர்ந்து பார்த்த மதன் மோகன் மிகுந்த மனத்தளர்ச்சி அடைந்திருந்தார். அவரது பல சிறந்த பாடல்கள் மிக அபத்தமாக யாரென்றே தெரியாதவர்களால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக இன்று ஒரு பெரும்படைப்பாக கருதப்படும் பாடலான 'வோ பூலீ தாஸ்தான்'. இந்தி திரையுலகின் 50 சிறந்த இசைவெற்றிப் படங்களின் பட்டியலில் மதன் மோகனின் ஒருபடம்கூட இருப்பதில்லை! அவரது முதல் வெள்ளிவிழாப்படம் ராஜ் கோஸ்லாவின் வோ கௌன் தி. அதில் 'னைனா பர்ஸே' போன்ற மிகச்சிறந்த பாடல்கள் இருந்தன. அடுத்த வெள்ளிவிழாப்படமும் ராஜ் கோஸ்லாவுடையதுதான். மேரே சாயா. ஆனால் அடுத்த படத்துக்கு ராஜ் கோஸ்லா லக்ஷ்மிகாந்த் பியாரேலாலை தேடிச்சென்றார். காரணம் மதன் மோகனுடன் ஏற்பட்ட மோதல்.

மதன் மோகன் மேதைகளுக்கு இயல்பான முறையில் அதீத தன்முனைப்பு கொண்டவர் என்று சொல்லப்படுகிறது. தன் கலையில் விட்டுக்கொடுக்காத தன்மையும் எவரிடமும் தலைவணங்காத குணமும் அவரிடம் இருந்தது. அதேசமயம் மனிதர்களிடம் மிகுந்த மதிப்புடனும் கனிவுடனும் பழகுபவர் அவர் என்பதற்கு ஆதாரமாக ஏராளமான நிகழ்ச்சிகள் உள்ளன. 

உதாரணமாக, சேதன் ஆனந்த் ஹகீகத், ஆக்ரீ கத் என்று இரு படங்களை ஒரே சமயம் தயாரித்தபோது இரண்டுக்கும் இசையமைக்கும்படி மதன் மோகனைக் கேட்டுகொண்டார். தன் நண்பரான கய்யாமுக்கு ஆக்ரீ கத் படத்தை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அந்த சமயத்தில் மிக கஷ்டத்தில் இருந்த கய்யாம் அப்படத்தின் மூலம் பெரும்வெற்றிபெற்றார்.
ஏ வி எம் நிறுவனம் தமிழ்படமான குமுதத்தை 1962ல் பூஜா கி பூல் என்றபேரில் இந்தியில் எடுத்தபோது, தமிழில் ராஜேஸ்வரி பாடி புகழ்பெற்ற மியாவ் மியாவ் பூனைக்குட்டி என்ற பாடலின் மெட்டை அப்படியே இந்தியிலும் சேர்கும்படி அதன் இசையமைபபளராக இருந்த மதன் மோகனிடம் தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டார். எவ்வித மேட்டிமை உணர்ச்சியும் இல்லாமல் மதன் மோகன் அப்பாடலை சேர்த்துக்கொண்டார். இந்தியில் 'மீயோ மீயோ மேரி சகி' என்ற அப்பாடலை லதா மங்கேஷ்கர் பாடினார்.

மதன் மோகனின் சொந்தவாழ்க்கையும் மேதைகளுக்கே உரிய அலைபாய்தல்கள் கொண்டது. அவரது அப்பா ராய் பகதூர் சுன்னி லால் 1930களின் முக்கியமான தயாரிப்பாளர். பாம்பே டாக்கீஸ் மற்றும் ஃபிலிமிஸ்தான் போன்ற நிறுவனங்களின் பாகஸ்தர். மதன் மோகன் தந்தையால் டெராடூனில் ராணுவப்பள்ளிக்கு அனுப்ப்பபட்டார். அங்கிருந்து டெல்லியில் நியமனமானார். தந்தையை மறுத்து ராணுவத்தை உதறி வெளியேறிய மதன்மோகன் லக்னோ சென்று ஆல் இண்டியா ரேடியோவில் சேர்ந்தார். உஸ்தாத் ஃபயாஸ் கான், உஸ்தாத் அலி அக்பர் கான், ரோஷன் ஆரா பேகம், பேகம் அக்தர், சித்தேஸ்வரி தேவி, தலத் மெஹ்மூத் போன்ற முக்கியமான இசைக்கலைஞர்கள் சூழ்ந்த இசைமையமாக விளங்கியது அக்கால லக்னோ வானொலி நிலையம். இறுதிவரை அப்பெரும் கலைஞர்களின் தீவிரமான செல்வாக்கு மதன் மோகனின் இசையில் இருந்தது.

1940களின் இறுதியில் பம்பாய்க்கு வந்த மதன் மோகன் எஸ் டி பர்மன், ஷ்யாம் சுந்தர் போன்றோரின் உதவியாளராக இருந்தார். அவரது முதல் இசையமைப்பு 1950ல் வெளிவந்த ஆங்கேன் படத்திற்கு. இப்படமே ஒரு மேதையின் வரவைக்காட்டுவதாக அமைந்தது. லதா மங்கேஷ்கர்- மதன் மோகன் குழு இப்படத்திலேயே வெற்றிகரமாக உருவாகிவிட்டது. மதன் மோகனின் எல்லா படங்களிலும் லதா பாடினார். லதாவின் குரல் இனிமை வழியாக மதன் மோகன் அடைந்த உச்சம் என்பது திரையிசையில் மிக அபூர்வமாக நிகழ்வதாகும்.

லதா மங்கேஷ்கர், முகமது ரஃபி மட்டுமல்லாமல் பிற முக்கிய பாடகர்களையும் மதன் மோகன் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார். ஏ வி எம்மின் ஃபாய் பாய் படத்தில் கீதா தத் பாடிய 'ஏ தில் முஜே பதா தே', தேக் கபீரா ரோயா படத்தில் மன்னா டே பாடிய 'கௌன் ஆயா மெரே மன் கீ த்வாரே', மத்ஹோஷ் படத்தில் தலத் மெஹ்மூத் பாடிய 'மெரீ யாத் மே தும் னா ஆன்ஸூ பஹானா', மேம் சாப் படத்துக்காக கிஷோர் குமார் பாடிய 'தில் தில் ஸே மிலா கர் தேக்கோ', அவரே மன் மௌஜி படத்தில் பாடிய 'ஜரூரத் ஹை ஜரூரத் ஹை', மேரே ஸாயா படத்தில் ஆஷா போன்ஸ்ளே பாடிய 'ஜூம்கா கிரா ரே', சோட்டே பாபு படத்துக்காக ஹேமந்த் குமார் பாடிய 'லே லே தர்த் பராயா' போனவை அக்கலைஞர்களின் தனிச்சிறப்பை வெளிக்கொணர்ந்த சிறந்த பாடல்கள்.

மதன் மோகன் மரபிலிருந்து எடுத்தவற்றையெல்ல்லாம் தன் ஆளுமைக்குள் கொண்டுவந்து மறு ஆக்கம் செய்தே பயன்படுத்தியிருக்கிறார். பெரும்பாலான இசைக்கலைஞர்களுக்கு அவர்களுக்கு மிகப்பிடித்த, அவர்கள் அதிகமாகப் பயன்படுத்தக்கூடிய சில ராகங்கள் இருக்கும். மதன் மோகனுக்கு அப்படி ஏதுமில்லை. ராகத்தின் கட்டுக்குள் அடங்கி முறையாக இசையமைப்பது தான் அவரது வழக்கம் என்றாலும் அவரது செவ்வியல் சார்பு அவருள் இருந்து இயல்பாகவே வெளிப்பபட்ட ஒன்றுதான். இசையில் மிகுந்த பரவசத்துடன் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது அவரது வழக்கம். 'னைனோ மெ பத்ரா சாயே' பாடலின் இசைசேர்ப்பின்போது ஒரு இசைக்கலைஞர் தவறான நோட்டை தொடர்ந்து வாசித்தமையால் ஆத்திரமடைந்து அவர் பாடல் பதிவகத்தின் கண்ணாடித்தடுப்பை உடைத்தாரென்று சொல்லப்படுகிறது.

வெகுஜனக்கலையின் தளத்தில் ஒரு மேதை தோற்றுப்போகும்போது சாதாரணமான திறனுள்ளவர்கள் வெல்கிறார்கள். காரணம் வெகுஜனக்கலைக்கு, மேதமைக்கு அப்பால் வேறு பல இயல்புகள் தேவைப்படுகின்றன. வணிகரீதியாக சூழலைக் கணிக்கும் திறன், எல்லோரிடமும் ஒத்துப்போகும் தன்மை, மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப எளிதில் சமரசம் செய்துகொள்ளும் இயல்பு போன்றவை அவை. இவ்வியல்புகள் பெரும்பாலும் மேதைகளுக்கு இருப்பதில்லை. ஆகவே சமகால வெகுஜனப்புகழ் மற்றும் வணிக வெற்றிகளை வைத்து கலைஞர்களை எடைபோடலாகாது.

வெகுஜனக்கலையில் வெற்றியும் புகழும் எல்லாவற்றையும் மறைக்கும் என்பதனாலும், நம்முடைய தனிப்பட்ட இறந்தகால ஏக்கங்கள் நம் மதிப்பீடுகளை திசைமாற்றும் என்பதனாலும் வெகுஜனக்கலையை மதிப்பிடுவதில் செவ்வியல் கலையை மதிப்பிடுவதைவிட இருமடங்கு கவனம் தேவை.

ஒரு இசைக்கலைஞனை எடைபோட புறவயமான அளவுகோல் என்ன? அவனுடைய இசை எந்த அளவுக்கு அசலானது, மரபை கையாளும்போது அப்படியே எடுத்தாள்கிறானா இல்லை மறு ஆக்கம் செய்கிறானா, அவனுடைய எல்லா படைப்புகளிலும் சீராக அவனுடைய மேதையின் தடம் தெரிகிறதா போன்றவை முக்கியமான கேள்விகள். 

தனித்தன்மையாலேயே அவை காலத்தை வென்று முன்னகர்கின்றதா என்பதும் முக்கியமானது. இத்தகைய திட்டவட்டமான அளவுகோல்களுடன் புறவயமான ஆய்வை மேற்கொண்டால் மட்டுமே நம்மால் கலைஞர்களை அடையாளம்கண்டுகொண்டு உரிய முறையில் கௌரவிக்க முடியும்.
தன் 25 வருட இசையமைப்பாளர் பணியில் மதன் மோகன் 104 படங்களுக்கு இசையமைத்தார். தன் வாழ்நாளில் மதன் மோகன் ஏராளமான விருதுகளை வாங்கியவரல்ல. வணிகரீதியாகவும் அவர் முன்னணியில் இருக்கவில்லை. ஒருமுறைகூட அவருக்கு ஃபிலிம்பேர் விருது அளிக்கப்படவில்லை! 1971ல் தஸ்தக் படத்துக்காக அவர் தேசிய விருது பெற்றார். ஆனால் அப்போது வெகுஜன அளவிலும் வணிகரீதியகாவும் முக்கியத்துவம் உடைய ஃபிலிம்பேர் விருது கிடைக்காமையினால் அவர் மனக்கசப்படைந்திருந்தார். அவரது பாடல்களில் பெரும்பாலானவை சிறந்தவையாக அமைந்தபோதும் படங்களின் தொடர்தோல்வி அவரை துன்புறுத்தியது. கடுமையான நிராசைக்கு ஆளான மதன் மோகன் மிதமிஞ்சி குடிக்க ஆரம்பித்தார். கல்லீரல் சீரழிந்து தனது 51 ஆவது வயதில் 1975 ஜூலை 14 ஆம் நாள் மரணமடைந்தார்.

அவரது இறுதிப்படங்களான மௌஸம் மற்றும் லைலா மஜ்னு அவர் இறந்தபின் வெளிவந்து பெரும் வணிகப்வெற்றியை அடைந்தன. 2004ல் வெளிவந்த யாஷ் சோப்ராவின் வீர்-ஸாரா என்ற படம் மதன் மோகன் உருவாக்கி பயன்படுத்தாமல் விட்டுவிட்ட பாடல்களையும் இசைக்கோலங்களையும் அவரது மகன் சஞ்சீவ் மேற்பார்வையில் பயன்படுத்தி வெற்றி அடைந்தது.

தனது பாடல்களில் மதன் மோகனுக்கு மிகவும் பிடித்தது ஷராபி (குடிகாரன்) படத்தில் வந்த சாவன் கி மஹீனே மே. தனது அந்திம நாட்களில் ஒரு பாடலைப் பாடச் சொன்னால் எப்போதுமே அவர் பாடியது இந்த பாடலை மட்டும்தான்.  

நில்லாமல் மழை கொட்டும் மழை மாதத்திலும்
எனது இதயத்தில் மலைபோல் நெருப்பு எரிகிறது
அதை அணைக்க நான் இன்னும் கொஞ்சம் குடிக்கிறேன்
அந்த சில நொடிகளில் மட்டும் வாழ்கிறேன்...

2006ல் எழுதியது.
எனது முதல் தமிழ் புத்தகமான சொல்லில் அடங்காத இசையிலிருந்து.