நமது காலம், நமது ரசனை 1
(உயிர்மை - நவம்பர் 2014)
(உயிர்மை - நவம்பர் 2014)
அப்போது
எனக்குப் பதினைந்து வயதிருக்கும். எங்களுக்கு அயல் வீட்டில் வசித்து வந்தவரின் பெயர்
கருணன் பிள்ள. வயதைத் தாண்டி பலகாலமான பின்னர்தான் அவருக்குத் திருமணம்
நடந்தது. அழகற்று வினோதமான முகத்தோற்றம் கொண்ட, சதா சிடுமூஞ்சியான கருணன் பிள்ள
பேரழகியான சோபனச் சேச்சியை திருமணம் செய்து கொண்டுவந்தார்! ’இது எப்படி நடந்தது? இந்த சேச்சிக்கு என்ன
கண்பார்வை இல்லையா?’
என்றெல்லாம் ஆதங்கமடைந்து ஒருவருக்கொருவர் புலம்பிக்கொண்டனர் அங்குள்ள
இளவட்டங்கள்.
நானும் அவர்களில் ஒருவன். திருமணமாகி ஒரு வாரம்கூடக் கடக்காத நிலையில் மனைவியை அடித்துத் துவைக்க ஆரம்பித்தார் கருணையே இல்லாத கருணன்
பிள்ள! தனது மனைவியை அவர் அடிப்பதன் காரணம் தாழ்வுணர்ச்சிதான் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் உண்மை அதுவல்ல என்பதை முதலில்
கண்டுபிடித்தது நான் தான்!
அவர்களது
வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் அங்கு உணவு மேசைக்குக்
கீழ் வைத்திருந்த ஒரு பாறாங்கல்லைப்
பார்த்திருக்கிறேன். திருமணம் முடிந்து சில நாட்களிலேயே கருணன் அக்கல்லை அங்கு
கொண்டுவந்து வைத்தார். மனைவி சமைக்கும் உணவு வகைகளைக் கொஞ்சம் சுவைத்துப் பார்த்தவுடன் அவற்றை
வைத்திருக்கும் பீங்கான் பாத்திரத்தை அக்கல்லில் அடித்து உடைப்பார்!
பின்னர் பொங்கி எழுந்து மனைவியின் முடியைப் பிடித்து இழுத்து அடித்து நொறுக்குவார். சுவையற்ற உணவு சமைத்ததற்கான
தண்டனை!
கருணன்
பிள்ளாவைப் பொறுத்தவரையில் சோபனச் சேச்சி சமைக்கும் உணவை விடச் சப்பையானதும் ருசியற்றதுமான ஒன்று இவ்வுலகில்
வேறு எதுவுமே இல்லை. தன்னுடன் சண்டையிட்டு தொலைதூரத்திலுள்ள அண்ணனின் வீட்டிற்குப் போய்விட்டிருந்தார் என்றாலும், தனது அம்மா போடுவதைப்போல் ஒரு குவளைக் காப்பி கூட இந்த ’எரணம் கெட்டவளால்’ போட முடியவில்லையே என்ற ஆத்திரத்தில் கருணன் மனைவியை அடித்து
பாத்திரங்களை உடைத்துக் கொண்டிருந்தார்.
வெயில்
தகிக்கும் கோடைப் பகல்களில் அழகாக நறுக்கிய பச்சை மிளகாய்த் துண்டுகளும் மெலிதாக
நசுக்கிய கருவேப்பிலைகளும் மிதக்கும், உப்பும் புளிப்பும் கலந்த பதமான நீர்மோரை சோபனச் சேச்சியின் கையிலிருந்து எத்தனையோ முறை
வாங்கிக் குடித்திருக்கிறேன்! இலையடை, கும்பிளப்பம், மத்தி சதச்சு பற்றிச்சது,
மயக்கிய கப்பையுடன் மீன் வற்றிச்சது, அவல் நிறச்சது என சோபனச் சேச்சி சமைத்துச் சாப்பிடத் தந்த பலவகையான கேரள உணவுகள் இன்றும்
எனது நினைவுகளில் சுவைக்கின்றன. மிகவும் அழகான பெண்மணி அவர் என்பதனால் பதின்பருவக்
காமம் கலந்த ஒரு ஏக்கம் அவர்மேல் எனக்கு இருந்திருக்கலாம். இருந்தும் அவரது
தோற்றப்பொலிவை விட அந்தச் சமையலின் சுவைதான் இன்றும் எனது நினைவில்
தேங்கியிருக்கிறது.
அபாரமாகச் சமைக்கும் வல்லமை கொண்டிருந்த ஒரு
பெண்மணியைச் சமைக்கவே தெரியாதவள் என்று அடித்து
கொடுமைப்படுத்திய கருணன் பிள்ளாவின் பிரச்சினை என்னவாக இருந்திருக்கக் கூடும்?
கருணனின் அம்மா இச்சேயி சமைத்த மிகச் சுமாரான உணவுகள் எனக்கு நன்கு பரிச்சயமானவை.
சிறு வயதிலிருந்தே பலவகையான சமையல்களுக்கு பழக்கப்பட்டிருந்தவன் நான். பாட்டி
வீட்டு உணவுகள், எண்ணற்ற நண்பர்களின் வீட்டு உணவுகள் எனப் பல வீட்டுக் கூட்டாஞ்சோற்றைச்
சாப்பிட்டுப் பழகியவன். மேலும் எனது அம்மாவும் அப்பாவுமே
நன்றாக சமைக்கக் கூடியவர்களாக இருந்தனர். இச்சேயியின் உணவுகளின் ஒட்டுமொத்தச் சுவையின்மையைப் பலமுறை நான் உணர்ந்திருந்தேன்.
பிறரின்
வீடுகளிலிருந்து பச்சைத் தண்ணீர் கூடக்
குடிக்காத ’குணம்’ படைத்த கருணன் பிள்ள அவரது நினைவுகள் தொடங்கும் காலத்திலிருந்தே
தனது அம்மா சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வளர்ந்தவர். உணவுச்சுவையின்
அளவுகோலாக அவருக்கு இருந்தது தனது அம்மாவின் சமையல் மட்டுமே! அவரால் அதிலிருந்து
மீள முடியவில்லை. சிறந்த சுவைகொண்ட உணவுகளைச் சுவையற்றவையாகவும், தனது தாயின் உப்புச் சப்பில்லாத சமையலைச் சுவை மிகுந்ததாகவும் உணரும் அளவிற்குத் தாறுமாறாகத்தான் அவரது உணவு ரசனை
உருவாகியிருந்தது.
சென்னையில்
அசலான வங்காள நாட்டார் உணவு வகைகள் கிடைக்கும் ஒரே ஒரு உணவகம் இருந்தது.
எழும்பூரில் உள்ள அன்னபூர்ணா என்னும் மிகச்சிறிய உணவுக்கடை. அருணனுடன் ஒருமுறை
மதிய உணவிற்கு அங்கு சென்றிருந்தேன். மாச்சேர் தேலா ஜொல் (கொழுத்த மீன் குழம்பு),
கொஷா மாங்க்ஷோ (ஆட்டுக்கறி
வறுவல் குழம்பு), துயீ மாச் (மீன் ரெட்டை வறுவல்), சோலார் தால் ஃபாத் (நீர்த்த
பருப்புக் குழம்பும் சோறும்) என நான் ருசித்துப் புசித்து கட்டு கட்டும்போது திடீரென்று அருணனைக்
காணவில்லை! அவ்வுணவுகள் ஏற்படுத்திய குமட்டலினால் அவர் வாந்தியெடுக்கப்
போயிருந்தார்!
வங்க
உணவின் முக்கியமான செய்பொருட்களில்
ஒன்றான கடுகு எண்ணையின் சுவையை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மேற்கு
வங்காளத்திலும் வங்காள நாட்டிலும் வசிக்கும் இருபத்தைந்து கோடிக்கும் அதிகமான மக்கள் விரும்பிச் சாப்பிடும் அந்த உணவு வகைகள், தமிழ்நாட்டில்
திருவண்ணாமலையைச் சேர்ந்த அருணனுக்கு ஒரே கணத்தில் குமட்டலை ஏற்படுத்தியது! கடுகு
எண்ணையின் சுவை இதை விட அதிகமாகக்
குமட்டலை ஏற்படுத்தக் கூடிய உணவுப் பழக்கங்கள் இருக்கும் பகுதியிலிருந்து வருபவன் நான். ஆனால்
எனது தேடல் என்னை வங்காள உணவுகளின் ரசிகனாக்கியது.
இந்த
தேடல் பெரும்பாலும் இங்கு நிகழ்வதேயில்லை. உலக உணவுகளின் தலைநகரம்
என்றழைக்கப்படும் பாரீஸ் சென்றிங்கிய உடன் சரவண பவனைத் தேடி ஓடுகிறார்கள்! அதிசயமான அராபிய உணவுகளுடைய வளைகுடா
நாடுகளில் பழுப்பு நிற உருண்டை அரிசிச் சோற்றுக்காகவும் தேங்காய் எண்ணையில் குளிப்பாட்டிய மீன் வறுவலுக்காகவும்
ஏங்குகிறார்கள்! பழக்கத்திற்கும் பரிச்சயத்திற்கும் உள்ளடங்காத எதுவுமே சுவையாக
இருக்காது, ஒருவேளை சுவையாக இருந்தாலும் செரிமானமாகாது என்பதில் பெரும்பாலானோருக்குச் சந்தேகமேயில்லை! உணவின் சுவையும் சுவையின்மையும்
போலவேதான் மனிதனின் அடிப்படை ரசனையுமே! விடுபடமுடியாதவை என்று வெறுமனே நாம்
நினைக்கும் பழக்கம்.
இசை
சார்ந்த எழுத்துகளினூடாக தமிழில் எனக்குக் கிடைத்தது எல்லையற்ற பாராட்டுகள் தாம்
என்றபோதிலும் என்மேல் வீசப்பட்ட கற்களையும் அவ்வப்போது நான் திரும்பிப்
பார்ப்பதுண்டு. ”டேய்... மலையாளித் தா---ளீ....
தமிழ்நாட்டில் வந்து இசை அரசியல் பண்றியாடா? நீ இசை விமர்சித்து கிழிச்சது போதும். ஒழுங்கு மரியாதையா கேரளாவுக்கு மூட்டை
கட்டு...”! இதே தொனியிலான பல கடிதங்கள் கடந்த பத்தாண்டுகளில் எனக்கு
வந்திருக்கின்றன. இது ஏதோ அறிவுகெட்டவன் எழுதியது என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் அறிவுஜீவிகளாகத் தங்களை முன்வைக்கும் சில எழுத்தாளர்கள்
“ஷாஜியின் எழுத்தில் தென்படும் இசையாணவம் அவர் பிறந்து வளர்ந்த
பிராந்தியத்தினுடையது’ என்றெல்லாம் எழுதினர்!
எனது
இரண்டாவது தமிழ்ப் புத்தகத்தின் வெளியீட்டுவிழாவை நடக்காமல் தடுக்க மும்முரமாக வேலை செய்தனர்
சிலர். அவ்விழாவிற்கு வரவேண்டியிருந்த சிறப்பு விருந்தினர்களில் சிலரை வரவிடாமல் தடுப்பதிலும் வெற்றி கண்டனர். அதுவும்
போதாமல் ‘ஷாஜிக்கு இசையே தெரியாது, மலேசியா வாசுதேவனின் கீழ் ஸ்தாயியை அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை’ போன்ற வினோதமான
பிரகடனைகள் அடங்கிய சில கட்டுரைகளை எழுதி ஆயிரக்கணக்கான மின்னஞ்சல் முகவரிகளுக்கு
இலவசமாக அனுப்பி வைத்தனர்!
இதெல்லாம்
எதற்காக? இவர்களில்
யாருக்குமே ஒரு தனிமனிதனாக என்னைத் தெரியாது. என்மேல் கோபமும் பகைமையும் பாராட்டவேண்டிய
எந்தத் தேவையும் இவர்களுக்கில்லை.
தனிப்பட்டமுறையில் எந்தவொரு வன்மமும் அவர்களுக்கு என்மேல் இருப்பதாக நான்
நினைக்கவில்லை. பழகிப்போன அவர்களது ரசனைகளுக்கு எதிரான சில கருத்துக்கள் இசையை
மையமாக வைத்து நான் எழுதிய சில கட்டுரைகளில் இருந்தன. அது அவர்களுக்குப் பிடிக்கவில்லை! அவ்வளவு தான்!
இந்த
விஷயங்கள் எதுவுமே ஒருபோதும் என்னைப்
பாதித்ததில்லை. ஏனென்றால் இவையெல்லாம் ரசனையைச் சார்ந்த சிக்கல்கள் என்று நான்
நன்கு அறிவேன். தங்களது ரசனையைச் சார்ந்திருக்கும் புரிதல்களுக்கு எதிரான
கருத்துக்கள் வரும்போது திணறிப் போகிறார்கள். ஆழ்ந்த கடவுள் பக்தியுடன் இருக்கும்
ஒருவரிடம் ’கடவுள் என்பது ஒரு கற்பிதம், அப்படி
எதுவுமே இல்லை’ என்று இன்னொருவர் எளிதாகச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். திடீரென்று அங்கு
உருவாகும் கோபதாபங்களுக்குக்
கடவுள் நம்பிக்கையுடன் எந்தத் தொடர்பும்
இருக்காது! ‘ஆமாம்.. நீ மட்டும் பெரிய அறிவாளி! பரம்பரை பரம்பரையாகக் கடவுள் பக்தர்களாயிருக்கும் நானும் எனது
தாய்தந்தையரும் முட்டாள்களா?’’ என்கின்ற கடும் கோபம் தான் அப்போது அந்த
பக்தனுக்கு மேலோங்கும்!
புரிந்து
வைத்திருப்பவற்றிலிருந்து முற்றிலுமாக மாறுபடும் கருத்துகளைத் திறந்த மனத்தோடு பரிசீலிக்க இயலாமல் அவற்றை முன்வைத்தவர்
மீது தனிமனித விரோதத்தை வளர்த்தெடுக்கிறார்கள்! அவ்விரோதம் தீர்க்க மொழி,
பிராந்தியம், சாதி, மதம், இனம், தனிமனித வாழ்க்கை என எதை
வேண்டுமானாலும் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். ”’பதினெட்டு வயதில் ஒரு பெண்ணைக் காதலித்து கைவிட்டவன் தானே இவன்? முகேஷின் காதல்
பாடல்களை விமர்சிக்க இவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?’” என்ற அளவிற்கு இருக்கும்
அத்தாக்குதல்கள்!
ஒருமுறை
ஒரு பொதுக் கூட்டத்தில் “எங்கள் கலாச்சாரத்தின் பகுதிகளாக இருக்கும் கலைஞர்களை நீ
விமர்சனம் பண்ணுறியே, உனது கலாச்சாரத்தில் இருக்கும் யாரையாவது நாங்கள் விமர்சனம்
செய்தால் உனக்கு எப்படியிருக்கும்?” என்று ஒருவர் கடும் சினத்துடன் கேட்டார்! எனது
காலாச்சாரமும் அவர்களது கலாச்சாரமும் வேறா? நான் என்ன செவ்வாய் கோளிலிருந்து
இறங்கி வந்தவனா? தமிழ் மொழியிலிருந்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த
மலையாளத்தை எனது தாய்மொழியாக நானா தேர்ந்தெடுத்தேன்?
தமிழ்நாட்டு
எல்லைப் பகுதிக்கு நெருக்கமாக இருக்கும் ஓர் ஊரில் பிறந்து தமிழ் கேட்டு வளர்ந்த
என்னை முற்றிலுமாக வேறு ஏதோ கலாச்சாரம் கொண்டவனாகச் சித்தரிப்பது எதனால்? மலையாளத் திரையிசையின் மையங்களாக அறியப்படும் யேசுதாஸ்,
தேவராஜன் போன்றவர்களைப் பற்றி நான் எழுதியிருக்கும் விமர்சனக் கட்டுரைகளின் ஒரு
வரியைக்கூட படிக்காமல் எழுப்பப்படும் இத்தகைய கேள்விகளின் காரணமும் அடிப்படை
ரசனையிலிருந்து உருவாகும் தவறான புரிதல்களேயாகும். ஒரு எழுத்தாளனாக நான் சந்தித்த
பலவகையான அனுபவங்களின் அடிப்படையில் நமது காலமும் ரசனையும் உருவாக்கும் புரிதல்களைப் புரிந்துகொள்வதற்கான முயற்சிதான் இந்த கட்டுரைத்
தொடர்.
கடந்தகால ஏக்கங்கள் தான் பலசமயம் மனிதனின் ரசனையை தீர்மானிக்கிறது
என்பது ஓர் உண்மை. ’நேற்று என்பது இறந்து மறைந்து விட்டது,
கண்ணுக்குத் தெரியாத தொலைவில் நாளை, இந்த இரவை மட்டும் கடக்க எனக்கு உதவுங்கள்...’ என்கிறார் க்ரிஸ் கிரிஸ்டஃபர்சன் தனது
உலகப் புகழ்பெற்ற பாடலில். சென்றகாலம் சென்று விட்டது, ஆனால் நாளை நம்முடையது
என்பது மற்றுமொரு கருத்து. இந்த இரண்டு கருத்துகளிலும், நேற்று என்பது முடிந்துபோன
விஷயம். அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை! ’இந்தக் கணத்தை நினைத்து மகிழ்வாயிருங்கள். ஏனெனில்
இந்தக் கணம்தான்
உனது வாழ்க்கையே’ என்கிறார்
ஒமார் கய்யாம்!
’இந்தக் கணம்’ என்று சொல்லி முடிப்பதற்குள்ளேயே அக்கணமும்
அதற்கடுத்த பல கணங்களும் முடிந்து விடுகின்றன! நொடிநேரத்தில் பாய்ந்தோடிப் பழையதாகிக் கொண்டேயிருக்கும்
காலத்திலிருந்து இந்தக் கணத்தைப் பிடித்து நிறுத்தி அதில் வாழ்வது
எப்படி? ’நடந்தது
நடந்து முடிந்தது, ஆகவேண்டியதைப் பார்ப்போம்’ என்று வருங்காலத்தைப் பற்றி சிந்திக்கலாம்தான்.
ஆனால் சிந்திக்க மட்டும்தான் முடியும். உண்மையில் வருங்காலம் என்று ஒன்று இல்லவே இல்லை!
ஒவ்வொரு நொடியிலும் வருங்காலம்
நிகழ்காலமாகி, நிகழ்காலம் கடந்தகாலமாகிக் கொண்டேயிருக்கிறது. நமக்கு இருப்பது
கடந்த காலம் மட்டும் தான்! ஆதலால் கடந்தகால ஏக்கங்களிலிருந்து விடுபட்டு ஓடவேண்டும்
என்று நினைப்பதில் பொருளில்லை.
எனது கடந்தகால ஏக்கங்களின் கிளையொன்றில் கழுத்தில் இறுகிய சேலை
விளிம்பில் தொங்கியாடுகிறார் சோபனச் சேச்சி. ரசனையற்றவர்களுடன் வாழ்வதைவிட தற்கொலைதான்
மேலானது என்று அவர் நினைத்தாரா? தனது ரசனைக்கு எதிரானவள் சாவது நல்லது என்று
கருணன் முடிவெடுத்தாரா? இன்றுவரைக்கும் யாருக்குமே தெரியாது.