20141006

பாட்டே வராதா? சினிமாவில் பாடுங்க!

“போற வழியில அப்டியே ஸ்டுடியோ வந்திட்டு போடா. புதுசா ஒரு மேட்டர் வந்திருக்கு. காட்டறேன்”. நண்பர் தினேஷின் அழைப்பு. தினேஷ் சாதாரண ஆள் இல்லை. மலையாள திரைப்படங்களில் பெரும் புகழ்பெற்ற ஓரிரு பாடல்களை பாடியிருக்கிறார். ஆனால் அது எதுவும் முக்கியமில்லை. சலில் சௌதுரி, இளையராஜா, லட்சுமிகாந்த ப்யாரேலால், பாம்பே ரவி, யேசுதாஸ் போன்றவர்களுடன் இசையமைப்பு உதவியாளர், ஒலித்தடப் பாடகர், ஒலிப்பதிவாளர் என பல முறைகளில் பணியாற்றியிருக்கிறார். திரைப்படப் பாடல் எனும் கலையைப் பற்றி ஆழ்ந்த புரிதல்கள் கொண்டவர். வயது ஏற ஏற இனிமை கூடும் குரலுக்குச் சொந்தக்காரர். அனைத்து வகைமைப் பாடல்களையும் வெகு சிறப்பாகப் பாடும் ஆற்றல் படைத்தவர். தினேஷ் என்ற அரிதான பாடகனை சினிமா உலகம் பயன்படுத்தவேயில்லை! இருந்தும் ஒரு இசைஞனாக, ஒலிப்பதிவாளனாக சென்னை இசை வட்டாரங்களில் நன்கு அறியப்படுபவர் தினேஷ். பரவாயில்லையே!என்று தானே நினைக்கிறீர்கள்?

பரவாயில்லை, ஒரளவுக்கு ஓய்கே போன்ற சொல்லாடல்கள் வழியாகத்தான் இன்று நாம் பலவகையான சாதனைகளுக்கு நம்முடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்! அல்லவா? ஆனால் உண்மையில் என்ன நடக்கிறதென்று தெரியாமல்பயங்கரமாயிருக்கே! என்னா ஒரு பாட்டு!என்றெல்லாம் சொல்லி  ‘ஃபை ஃபை ஃபை கலாய்ச்சி ஃபைவகையறாக்களை தலையில் ஏற்றி நாம் இன்று நடனமாடிக் கொண்டிருக்கிறோம்.

கோடம்பாக்கம் பாத்திமாப் பள்ளிக்கு அருகிலுள்ள அவரது ஒலிப்பதிவு கூடத்திற்குள் நான் நுழையும்போது தினேஷ் கணினியில் ஏதோ நோண்டிக்கொண்டிருந்தார். அதில் புதிதாக  மெலோடைன்’ ( Melodyne) எனும் இசையுருவாக்க மென்பொருளின் புத்தம் புது வடிவம் ஒன்றை பொருத்தியிருந்தார். அதன் மாய வித்தைகள் செயல்முறை விளக்கம் காட்டுவதற்குதான் என்னை அழைத்திருக்கிறார்! பிரபல பாடகர் ஒருவர் சற்று முன்பு பாடிவைத்துப் போன ஒரு பாடலை அந்த மென்பொருள் வழியாக கடத்தி விட்டு அதை சின்னஞ்சிறு துணுக்குகளாக பிரித்தார். அதாவது அப்பாடலின் ஒவ்வொரு சுரங்களையும் பல வண்ணங்களில் ஒலியலைக் கற்றைகளாக (Wave Blocks) கணினித் திரையில் காணலாம்!

C D E F G A B C  எனும் சுரங்களை கீழ் கீழாக அடுக்கியிருக்கும் ஒரு சட்ட வடிவத்திற்குள், அந்தந்த சுரங்களுக்கு நேராக அந்த பாடலின் துணுக்குக் கற்றைகள் ஆங்காங்கே நிற்கின்றன! இசையின் இலக்கணமும் மெலோடைன் மென்பொருள் இயக்கு முறையும் நன்கு தெரிந்த தினேஷ் அந்த சுரங்கள் ஒவ்வொன்றையும் எலி (Mouse) வைத்துப் பிடித்து அங்கும் இங்கும் இடம் மாற்றி வைக்கிறார். அரைமணி நேரத்திற்குள் அதே குரலில் அந்த பாடல்வரிகள் முற்றிலும் மாறுபட்ட ஒரு மெட்டாக ஒலிக்கத் துவங்கியது! சுருதியும் தாளமும் எல்லாமே மாறிப் போனது! ஆனால் வரிகளுக்கோ பாடகனின் குரலுக்கோ எந்த மாற்றமுமில்லை! நான் வாய் பிளந்துபோனேன்.

இப்படி எத்தனை முறை வேண்டுமானாலும் அப்பாடலை மாற்றியமைத்துக் கொண்டே போகலாம் போலும்! பாடகன் மெட்டை சரியாகப் பாடவில்லையென்றால் கவலையே வேண்டாம். பாடல் முழுவதும் சுருதி சேரவே இல்லையென்றாலும் பிரச்சினை இல்லை. பாடி வைத்ததை அக்கு அக்காகப் பிரித்து அது எந்தெந்த சுரங்களாக வெளியே கேட்க வேண்டுமோ அச்சுரங்களின் தடத்திற்குள் இழுத்து வைத்தாலே போதும்! குரலும் பாடலும் கனக் கச்சிதமாக சுருதி சேர்ந்து ரீங்கரிக்கும்! 1992ல் ஃபோட்டோஷாப் (Photoshop) எனும் புகைப்படம் மற்றும் வரைகலை மென்பொருளின் செயல்முறை விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தான், இதற்கு முன்பு நான் இந்த அளவுக்கு ஆச்சரியப்பட்டுபோனேன்.

அப்போது எங்கள் நிறுவனத்தின் விளம்பர வடிவமைப்புகள் செய்துகொண்டிருந்த சிட்டி டிசைன் ஸ்ரீநிவாசன் போன்றவர்களிடம் நான் சொன்னேன் ஓவியங்கள் வரைந்தும் கையால் விளம்பரங்களை வடிவமைத்தும் வாழும் உங்களைப் போன்றவர்களின் சோற்றில் இதோ மண் விழப்போகிறது!’. அதை யாரும் அப்போது பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஆனால் ஓரிரு ஆண்டுகளுக்குள் புகைப்படத்துறை, ஓவியக்கலை, அச்சு ஊடகங்கள், விளம்பரத்துறை போன்றவற்றிலிருந்த கணிசமான வேலை வாய்ப்புகளை ஃபோட்டோஷாப் ஒரு பேரலையாக அடித்துச் சென்றது. இன்றைக்கு யார் வேண்டுமானாலும் ஒரு ஃபோட்டோஷாப் ஓவியராகலாம்!

இசைத்துறையில் இன்று நடப்பதும் இதுவே தான். ஒரு மடிக்கணினி கையில் இருப்பவர்கள் யாவரும் இசையமைப்பாளர்கள் ஆகலாம். அவற்றில் யார் யாரோ முன்னமே உருவாக்கி வைத்திருக்கும் மெட்டுக்கள், தாளக்கட்டுகள், இசைத்துணுக்குகள் போன்றவற்றை எடுத்து நீட்டியும் குறுக்கியும் அங்கும் இங்கும் மாற்றியமைத்து தொகுத்தால் நொடிநேரத்தில் இசை தயார். அதேபோல் ஒரு பாடல் எந்த அளவைக்குள்ளே அடங்கவேண்டும், அதில் எந்தெந்த சுரங்கள் இடம்பெறவேண்டும் என்பதை மென்பொருளுக்கு ஊட்டிவிட்டால் (Feed) போதும். யார் வேண்டுமானாலும் பாடகனாகலாம்!

பாடகன் எப்படிப் பாடினாலும் பாடிக்கொண்டிருக்கும்போதே தானியங்கி சுருதி சேர்த்தல் மென்பொருள் (Auto Tune) பொருத்தப்பட்ட கணினி அதை முன்பதிவு செய்யப்பட்ட சுரங்களாக மாற்றி வெளியே கேட்க வைக்கும். பாடி முடித்த பின்னர் அதை மீண்டும் நுட்பமாக சுருதி சேர்க்கலாம். ஒலிப்பதிவு, ஒலிக்கலவை, ஒலித்தொகுப்பு போன்றவை முன்பு எப்படி ஒரு தனித் தொழிலாக இருந்ததோ அதைப்போல் சுருதி சேர்த்தலும் இன்று ஒரு தனித் தொழிலாக மாறிவிட்டிருக்கிறது. 

தொலைக்காட்சிகளில் இன்று நாம் காணும் அனைத்து இசை நிகழ்ச்சிகளும் இத்தகைய சுருதி சேர்த்தல் வித்தையிநூடாக கடந்து வருபவை! யதார்த்த இசை நிகழ்ச்சிகள் உட்பட! வாயில் வருவது கோதைக்கு பாடல்என்பதுபோல் ஏனோ தானோ என்று சுருதியே சேராமல் பாடி வைத்ததையெல்லாம் கொண்டுவந்து ஒலிப்பதிவு கூடங்களில் சுருதி சேர்க்கிறார்கள். அவற்றை பின்னர் காணொளியுடன் இணைத்து (Synch) ஒலிபரப்புகிறார்கள்! விஷயம் தெரியாத நம் போன்ற முட்டாள்கள் ஆகா! என்னமா பாட்றாய்ங்க! எப்படிப் பாட்றாய்ங்க! என்று புகழ்ந்து தள்ளுகிறோம்! 

தொலைக்காட்சிப் பாடகர்கள் முதலில் ஒலிப்பதிவு கூடத்திற்குச் சென்று அங்கு பாடலை பதிவு செய்கிறார்கள். மென்பொருட்களின் உதவியுடன் சுருதி சேர்த்து சரி செய்து கொண்டுவரப்படும் அப்பாடல்களுக்கு அந்த ‘பாடகர்கள்வாயசைப்பது தான் நாம் அன்றாடம் தொலைக்காட்சிகளில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோம்! தொலைக்காட்சி நிலையங்கள் வழங்கும் விருது விழாப் பிரம்மாண்டங்களில் காணப்படும் பெரும்பாலான பாடும் காட்சிகளும் இவ்வகையானதே!

இந்த ஏமாற்று வேலைகள் உலக அளவில் இன்றோ நேற்றோ ஆரம்பித்ததல்ல. 1997ல் அன்டாரெஸ் எனும் நிறுவனம் தானியங்கி சுருதி சேர்த்தல் மென்பொருளான ஆட்டோ ட்யூன் வெளியிட்ட அன்று தான் இதன் துவக்க விழா. 2002ல் செலிமணி எனும் ஜெர்மானிய நிறுவனம் முன் சொன்ன மெலோடைன் மென்பொருளின் முதல் வடிவம் வெளியிட்டனர். ஆனால் இந்த தொழில்நுட்பங்கள் இந்தியாவை அடைந்தது 2005-2010 காலகட்டத்தில் தான்.

2002ல் ஆலிசன் மூறர் எனும் கண்ட்ரி பாடகன் ‘இத்தொகுப்பில் உள்ள பாடல்களில் ஆட்டோ ட்யூன் பயன்படுத்தப்படவேயில்லைஎன்ற அறிவிப்பை ஒட்டிவைத்து தான் தனது இசைத் தொகுப்பை வெளியிட்டார். தானியங்கி சுருதி சேர்த்தல் ஒரு வெட்கம் கெட்ட வேலைதான் என்பதை நல்ல பாடகர்கள் அப்போதே உணர்ந்திருந்தனர் என்பது தானே இதன் அர்த்தம்? க்ரிஸ்டீனா அக்விலேரா எனும் அசாத்தியமான அமேரிக்க பாடகி தானியங்கி சுருதி சேர்த்தல் கூ***க்கு உள்ளது( Auto Tune is for Pussies) என்று அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து 2009ல் மேடைகளில் தோன்றினார்.

நமது நாட்டில் சுருதி சேர்த்தல் செய்துகொண்டிருக்கும் மாயவித்தைளுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.  ஃபை ஃபை ஃபை கலாய்ச்சி ஃபைஎனும் தேவகானத்தைப் பாடிய திரைப்பட நடிகை ரம்யா நம்பீசன் மலையாளத்தில் ‘ஆண்டெ லோண்டேஎனத்துவங்கும் நாட்டுப்புற பாணி பாடல் ஒன்றைப் பாடினார். அலாதியான சுருதி சுத்தத்துடன்! அப்பாடல் ஒரு மாபெரும் வெற்றி. ஒருமுறை தொலைக்காட்சியில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எதிர்பாராமல் அப்பாடலை பாட நடிகையிடம் கேட்டார்கள்! வேறு வழியில்லாமல் தனது இயல்பானசுருதி சுத்தத்தில் அப்பாடலை அவர் பாடும் கர்ணகடூரமான காட்சி யூடியூபில் பார்க்க நேர்ந்தது. அப்பாடலின் இசையமைப்பாளரோ பாலமுரளீ கிருஷ்ணாவின் முதற்கண் சீடனாக தன்னை முன்னிறுத்துபவர். யதார்த்த இசை நிகழ்ச்சிகளில் இளம் பாடகர்களின் சுருதியை மயிரிழை கீறி விமர்சிப்பவர்!

குரல்களை இயந்திரத்தனமானதாக மாற்றுவதற்கு, ஒருவர் பாடியதை ஓராயிரம் பேர் பாடுவது போல் ஆக்குவதற்கு, ஒரு சுரத்தை வைத்து எண்ணற்ற இசையொருமிப்புகளை (Harmony) உருவாக்குவதற்கு, குரலின் தன்மை மாறாமல் தாள வேகத்தை ஏற்றவும் இறக்கவும், ஒரு சுருதியில் பாடியதை எந்த சுருதிக்கு வேண்டுமானாலும் மாற்றுவதற்கு, வார்த்தைக்கு வார்த்தை மூச்சு திணறிப் பாடியதை மூச்சே விடாமல் நன்றாக இழுத்து பாடியது போல் மாற்றியமைக்க, எதை வேண்டுமானாலும் அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் வெட்டி ஒட்ட என அனைத்து வேலைகளுக்கும் இன்று மிக எளிதான குறுக்கு வழிகள் இருக்கின்றன. 

இனிமேல் குரல் வளம், சுருதி சுத்தம், இசை ஞானம், மூச்சுக் கட்டுப்பாடு என எதுவுமே ஒரு பாடகனுக்கு துளிகூடத் தேவையில்லை. இதனால் இன்று நாம் கேட்கும் அனைத்து பாடும் குரல்களுக்கும் ஒரே பாணி! அனைத்து பாடல்களுக்கும் ஏறத்தாழ ஒரே தொனி.

தினேஷ்.. அண்ணன் மெலோடைனின் பாதங்களைக் கும்பிட்டு நானும் ஒரு சினிமா ப்ளே பேக் சிங்கர் ஆகட்டுமா?

நீ ஒரளவுக்கு பாடுவியே! அப்பொ என்ன பிரச்சினை?

“அதானே பிரச்சினையே! ஒரு சுரம் கூட பாட முடியாத யாரையாச்சும் கூட்டிட்டு வரலாம். அவர எதாவது ஓளர வெச்சு ரெக்காட் பண்ணுவோம். அப்றம் அத மெலோடைன், ஆட்டோ ட்யூண், வேவ்ஸ் ட்யூண் அப்டீன்னு எதாச்சும் ஒரு சாஃப்ட்வேரில ஏத்தி நாட்ஸ் ஆக்கி, சுதி சேத்து, தாளம் போட்டு ஒரு பாட்டாக்கிருவோம். என்னமா பாட்றாரு! எப்படி பாட்றாரு!!! அப்டீன்னு ஒலகம் தலயில ஏத்தி டான்ஸ் ஆட்ற வர்ல்ட் ஃபேமஸ் சாங்கா அது மாறாதுண்ணு யாருக்கு தெரியும்?

யாருக்கு தெரியும்?!!!

தினேஷ் கணினியை நிறுத்தினார். இருட்டாகிப்போன அதன் திரையில் அவரது முகத்தின் வெறுமை மட்டும் பிரதிபலித்தது.

(தீராநதி அக்டோபர் 2014  இதழில் வந்த கட்டுரை)