20081107

கீதா தத் - எரிந்து விழுந்த தாரகை

ந்தக் கட்டுரைத் தொடரில் நான் இதுவரை பெண் இசை நட்சத்திரங்களைப் பற்றி எழுதவில்லை. வேண்டுமென்றே செய்தது அல்ல என்றாலும் அதைப்பற்றி ஏராளமான பெண் வாசகர்கள் என்னிடம் கேட்டார்கள். என்னுடைய தனிப்பட்ட ரசனையின் பட்டியலில் ஏராளமான சர்வதேச பெண் இசை நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்தியப் பெண் இளைக்கலைஞர்களைப் பற்றி அப்படி என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இந்தியப் பெண் இசையமைப்பாளர்களின் பட்டியல் ஒன்றைத் தயாரிக்க முயன்றால் எந்த பெயரும் உடனடியாக நினைவுக்கு வராது என்பதுதான் உண்மை.

1930களில் இந்தியத் திரைப்படம் முளைவிட்டுக் கொண்டிருந்த நாட்களில் சரஸ்வதி தேவி என்ற புகழ்பெற்ற இசையமைப்பாளர் இருந்தார். அவரது உண்மையான பெயர் குர்ஷித் மினோசர் ஹோம்ஜி. அக்காலகட்டத்து ஆண் இசையமைப்பாளர்களுடன் ஒப்பிடும் போது அவர் மிக வெற்றிகரமாகவே இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அசோக் குமாரும் தேவிகா ராணியும் பாடி நடித்த 'மேம் பன் சி சிடியா பன் கே' போன்ற புகழ் பெற்ற பாடல்களை அவரது சாதனைகளாக நினைவுகூர முடியும். பாம்பே டாக்கீஸ் தயாரித்த அக்காலத்து வெற்றிப்படங்கள் பலவற்றுக்கு அவர் இசையமைத்தார்.

பிறகு, 1959ல் உஷா கன்னா என்ற பதினாறு வயதுப் பெண் 'தில் தே கே தேக்கோ' என்ற படத்தில் பத்து 'சூப்பர்ஹிட்' பாடல்களுடன்
அறிமுகமானார். அதன்பிறகு அவர் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தார், சூப்பர்ஹிட்டுகள்தான் இல்லை. ஆனால் 1970ல் அவர் 'மூடல் மஞ்ஞு' என்ற மலையாளப் படத்திற்கு இசையமைத்தார். 'நீ மது பகரூ' 'மானச மணிவேணுவில்' 'உணரூ வேகம் நீ' போன்ற அற்புதமான பாடல்கள் அதில் இருந்தன. இன்று திரையிசையில் நாற்பத்தைந்து வருடம் தாண்டிய பிறகும் அவர் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் வெற்றிபெற்ற ஒரு இசையமைப்பாளர் என்று அவரைப்பற்றி சொல்ல முடியாது. தென்னிந்தியாவில், இந்த அளவுக்குச் சொல்லக்கூட பெண் இசையமைப்பாளர்கள் இல்லை.

சரி, இந்தி திரையிசையின் மிக வெற்றிகரமான பாடகிகளைப் பட்டியல் போட்டு பார்ப்போம். லதா மங்கேஷ்கர். ஆஷா போன்ஸ்லே... அப்புறம்? வேறு பெயர்கள் இல்லை என்றல்ல. நடிகைகளும் பாடகிகளுமான தேவிகா ராணி, ராஜ்குமாரி, அமிர்பாய் கர்நாடகி, நூர்ஜஹான், குர்ஷித், சுரைய்யா... பின்னனிப் பாடகிகளான பேகம் அக்தர், ஸோஹ்ராபாய் அம்பேவாலி, முபாரக் பேகம், ஷம்ஷாத் பேகம், கீதா ராய் (தத்), மீனா கபூர், ஷார்தா, சுதா மல்ஹோத்ரா, சுமன் கல்யாண்பூர், பாருல் கோஷ், சந்த்யா முகர்ஜி, மீனா மங்கேஷ்கர் மற்றும் உஷா மங்கேஷ்கர் (லதாவுக்கும் ஆஷாவுக்கும் சகோதரிகள்)...

இவர்கள் அனைவருமே உயர்ந்த பாடகிகள் என்று கூற வரவில்லை. ஆனால் இவர்களில் பெரும்புகழ் பெற்ற பாடகிகள் கூட விரைவிலேயே மங்கி மறைந்தார்கள், மறக்கப்பட்டார்கள். இந்தித் திரையிசைப் பாடகிகளைப் பற்றிய பெரும்பாலான பேச்சுக்கள் லதாவிலும் ஆஷாவிலும் தொடங்கி அவர்களிலேயே முடிகின்றன என்பது வருத்தம் தரக்கூடியதுதான்.

இந்தித் திரை இசையின் முதல் உச்ச நட்சத்திரப்பாடகி பலரும் நினைப்பது போல லதா மங்கேஷ்கர் அல்ல. கீதா ராய் தன்னுடைய இயல்பான குரல் கம்பீரத்தாலும் நுண்ணுணர்வாலும் நம் நினைவுக்கு வருகிறார். வழக்கத்திற்கு மாறான அழுத்தமான குரலும் அபூவர்மான உணர்ச்சி வெளிப்பாட்டுத்திறனும் கொண்ட பாடகி அவர். நாற்பத்தேழு முதல் ஐம்பதுவரை இந்தித் திரையுலகின் முதல் பாடகியாக அவர் பம்பாயில் ஆட்சி செலுத்தினார். புகழும் அங்கீகாரமும் உடைய ஒரு இசைநட்சத்திரம் மட்டுமல்லாமல் ஆத்மா ததும்பும் ஒரு பாடகி கீதா ராய். அவரது குரல் வித்தியாசமானது, அழகானது, கேட்பவர்களை எப்போதுமே மகிழ்விப்பது.

கீதாவின் பாடலை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் நம் கவனத்தைக் கவரும் அம்சம் தனக்குத் தரப்பட்ட பாடலின் வழியாக அவர்
அனாயாசமாக பறந்து சுழன்று செல்வதுதான். அவரது சமகாலப் பாடகிகளில் அவரே இசைப்பயிற்சி குறைவானவர். இசைநுட்பங்களும்
அவரிடம் குறைவே. ஆனால் தான் பாடும் எல்லா பாடல்களிலும் வாழ்க்கையின் உயிரையும் உணர்வுகளையும் கொண்டுவர அவரால் முடிந்தது. அவரது தாள உணர்வும் ஈடிணையற்றது. அத்துடன் அவரது ஒளிரும் கண்களும் முழு அழகும் அவரை இந்தியப் பாடகிகளில்
மிக அழகானவராக நிலைநாட்டின.

இந்தி திரையிசை விமரிசகரான ராஜு பரதன் (இவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்) கீதா 'Mr.& Mrs.55' படத்திற்காக பாடிய, 'தண்டி ஹவா காலி கடா ஆ ஹி கயி ஜும் கே' (குளிர் காற்றும் மழை மேகமும் நடனமாடும் கால்களுடன் நுழைந்தது) பாடலை நினைவில் வைத்து எழுதினார், கீதாவின் குரல் வாடைக்காற்றும் மழை முகிலும் ஒன்றாக இணைந்த ஒன்று என்று. "அவரது குரல் எழுந்ததுமே ரசிகர்கள் நடனமாடும் கால்களுடன் எழுந்தனர்கள். லதா மங்கேஷ்கர் உள்ளுர அஞ்சிய ஒரே பாடகி கீதா மட்டுமே. பயிற்சியிலும் நுட்பத்திலும் கீதாவை விட பலமடங்கு முன்னிலையில் இருந்தவர் லதா. ஆனால் பாடல் பதிவு அறையில் கீதாவிடம் இருந்த உயிர்த்துடிப்பு அவற்றை பயனற்றதாக்கியது. ஆகவேதான் லதா கீதாவுடன் சேர்ந்து பாடுவதை பெரும்பாலும் தவிர்த்தார். 1972 ஜூலை 20ம் தேதி* லதாவே இதை ஒப்புக் கொண்டார்" (ஃபிலிம்ஃபேர் இதழ், பிப்ரவரி 1985, பக்கம் 89).

இந்தியத் திரையிசையில் மிகமிக முக்கியமான, அடிப்படைப் பாதிப்புகளை உருவாக்கிய பாடகி கீதாதான் என்பவரை எவரும் மறுக்க இயலாது. தன் இசை வாழ்வின் முக்கியமான பத்து வருடங்களில் உச்சத்திலிருந்த அவர் ஏறத்தாழ 5000 பாடல்களை பாடியிருக்கிறார். அதிகமும் இந்தியிலும் வங்காளியிலும். ஆஷா போன்ஸ்லே போன்றவர்களின் பாடும் முறையானது கீதாவிடமிருந்து உருவாக்கிக் கொண்டதேயாகும்.

கீதா கிழக்கு வங்காளத்தில் (இன்றைய பங்களாதேஷ்) ஃபரிதாபூரில் 1930 நவம்பர் 23 ஆம் தேதி பிறந்தார். ராய் சௌதுரி (நிலக்கிழார்) குடும்பத்தில் பிறந்த கீதா பத்து குழந்தைகளில் மூத்தவர். ஆதலால் செல்லமாக 'ரங்கா' என்று அழைக்கப்பட்டார். அவரது பெற்றோர்கள் தேபேந்திரநாத் ராய் சௌதுரி, அமியா செளதுரி. இருவரும் இசையிலும் இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர்கள். கீதாவின் இளமைப்பருவம் இசையிலும் இலக்கியத்திலும் இனிமையாகக் கழிந்தது. ஆனால் 1942ல் வெடித்த 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் நிலப்பிரபு அமைப்புக்கு கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. அது கீதாவின் குடும்பத்தை பெரிதும் பாதித்தது. கையில் கிடைத்தவற்றை அள்ளிக் கொண்டு தங்கள் ஊரைவிட்டு ஓடி வரும் நிலைமைக்கு அவர்கள் ஆளானார்கள். அக்குடும்பம் பம்பாயில் வசிக்க ஆரம்பித்தபோது கீதாவுக்கு பனிரண்டு வயது. அவர்கள் தாதரில் ஒரு இருங்கலான இந்து காலனியில் சிறிய அறை ஒன்றில் தங்கினார்கள். பத்து குழந்தைகளுடன் அந்தக் குடும்பம் வறுமையில் தத்தளித்தது.

ஒருமுறை தன் குடியிருப்பின் பால்கனியில் நின்றபடி கீதா பாடிக் கொண்டிருந்த போது அவ்வழியாக நடந்து சென்ற ஹனுமான் பிரசாத் என்ற இசையமைப்பாளர் அந்த இனிய குரலைத் கேட்க நேர்ந்தது. அவர் கீதாவை தன் ஸ்டுடியோவுக்கு வரச் செய்து 1946ல் வெளிவந்த 'பக்த பிரஹ்லாத்' என்ற படத்திற்காகப் பாடவைத்தார். அதில் ஒரு சில ஈரடிகளையும் கூட்டுக் குரலில் சில பகுதிகளையுமே கீதா பாடினார். கீதா பாடிய அந்த ஈரடிகள் பிற குரல்களில் இருந்து மிகவும் தனித்துத் தெரிந்தன. அதை பாடல் பதிப்பகத்தில் அனைவருமே கவனித்தனர். இசை மேதை எஸ்.டி.பர்மன் அதைக் கேட்க நேர்ந்தது. அவர் நேரடியாக கீதாவை அழைத்து அவரது அடுத்த படத்தில்
(தோ ஃபாயி,1947) பாடச் செய்தார்.

கீதாவின் குரலில் இருந்த மாந்திரீக வசீகரத்தை முதலில் கண்டடைந்த இசையமைப்பாளர் எஸ்.டி.பர்மனே. பிலிம்ஸ்தான் தயாரிப்பாளர்களிடம் கீதாவுக்கு வாய்ப்பு அளிக்குமாறு வற்புறுத்தினார். தயாரிப்பாளர்கள் ஒரு நிபந்தனையுடன் அதற்கு இணங்கினர். பாடல் பதிவு செய்தாலும்கூட அது மிகவும் சிறப்பாக இருந்தால் மட்டுமே வெளியிடப்படும். 'ஹமேன் சோட் பியா கிஸ் தேஷ் கயே' என்ற அந்தப்பாடல் பதிவு செய்யப்பட்டது. வழக்கமாகச் சொல்லப்படுவது போல 'மீதியெல்லாம் சரித்திரம்'.

அதே படத்தில் வந்த 'மேரா சுந்தர் ஸப்னா பீத் கயா' என்ற பாடல் மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது. கீதா ராய் உடனடியாக புகழின் உச்சிக்குச் சென்றார். கீதாவின் பாடல்களின் வெற்றியினால் 'தோ ஃபாயி' படமும் பெரும் வெற்றி பெற்றது. அக்கால புகழ்பெற்ற பாடகிகளான ராஜ்குமாரி முதலியோரை இந்த ஒரே படம் மூலம் கீதா கடந்து சென்றார்.

ஆரம்பகாலத்தில் கீதா ராய் சோகப்பாடல்களையும் பஜன்களையும் மட்டுமே பாட நேர்ந்தது. உதாரணமாக 1950ல் வந்த 'ஜோகன்' என்ற படத்தில் அவர் 12 தனிக்குரல் பஜனைகளை மட்டுமே பாடினார். ஆனால் 1951ல் 'பாஸி' படம் வெளிவந்தபோது நிலைமை மாறியது. அப்படத்தில் புதுமையாக இசையமைத்த எஸ்.டி.பர்மன் கீதாவின் குரலுக்கு ஒரு புதிய தளத்தை உருவாக்கியளித்தார். 'தட்பீர் ஸெ பிக்டி ஹுயீ தக்தீர் பனா தே' போன்ற பாடல்கள் பெரும் வெற்றிகளாக அமைந்தன. மேலையிசையின் சிறந்த வளைவுகளுடன் கூடிய கீதாவின் குரல் இப்பாடல்களில் இளமையும் கவற்சியும் மிக்கதாக இருந்தது. காதல் உணர்வுகளை மிக எளிதாக மீட்டியது. அதிலிருந்து காதல் பாடல் அல்லது நடனத்திற்கான பாடல் என்றால் அது கீதாதான் பாடவேண்டும் என்ற நிலைமை உருவாயிற்று. எஸ்.டி.பர்மன் 'தேவதாஸ்', 'பியாசா' முதலிய புகழ்பெற்ற படங்களில் கீதாவின் குரலை செவ்வியல் இன்னிசைக்கும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தினார்.
'ஆஜ் சஜன் மோஹே அங்க் லகாலோ' என்ற தேவதாஸ் படப்பாடல் அழியாத பெரும்படைப்பாக இன்றும் நம் நினைவில் உள்ளது.

எஸ்.டி.பர்மனின் இசையின் உணர்வை கீதா அளவுக்குத் துல்லியமாக உள்வாங்கிப் பாடிய இன்னொரு பாடகி இல்லை. அவர்களிருவரும் இணைந்து சிருஷ்டித்த பல ரத்தினங்கள் இன்றும் இந்தித் திரையிசையில் ஜொலிக்கின்றன. 'வொ சப்னே வாலீ ராத்' (பியார் 1950), 'ஆன் மிலோ ஆன் மிலோ' (தேவதாஸ் படத்தில் மன்னா பேயுடன் இணைந்து), 'ஹவா தீரே ஆனா' (சுஜாதா 1959), வக்த் னே கியா க்யா ஹசீன் சிதம்' (காகஸ் கி பூல் 1959) என்று சொல்லிக் கொண்டே போகலாம். கீதா எஸ்.டி.பர்மன் இசையமைப்பில் 72 பாடல்களைப் பாடியிருக்கிறார். அவற்றில் 43 தனிக்குரல் பாடல்கள். அவருடன் கீதா இணைந்து உருவாக்கிய கடைசிப் பாடல் 1964ல் 'ஸித்தி' படத்திற்காக பாடிய 'மெ தேரே பியார் மே க்யா க்யா நா பனா' என்ற பாடல்தான்.

ஓ.பி.நய்யாரின் தாளமும் வேகமும் கொண்ட பாடல்களுக்கு கீதாவின் குரல் மிகவும் கச்சிதமாகப் பொருந்தியது. கீதாவின் பாடும்முறையில் இருந்த 'ஜாஸ்' தன்மையை அவர் மேலும் வளர்த்து எடுத்தார். அவரது இசையமைப்பில் கீதா ராய் பன்முகம் கொண்ட பாடகியாக மலர்ந்தார். மென்மையான, வேகம்மிக்க, உணர்சிகரமான, துள்ளலான, காமச்சுவைமிக்க பாடல்களை எல்லாம் பாடினார். ஓ.பி.நய்யாரின் இசையில் கீதா பாடிய எக்காலத்திலும் பெரிய வெற்றிப் பாடல்கள் 'ஜரா ஸாம்னே ஆ' (பாஸ் 1953) 'பாபுஜி தீரே சல்னா' (ஆர் பார் 1954) 'தண்டி ஹவா காலி கடா' (Mr.& Mrs.55, 1955) 'ஜப் பாதல் லெஹ்ராயா' (சூ மந்தர் 1956) 'மேரே ஜிந்தகீ கீ ஹம்ஸபர்' (ஸ்ரீமதி 420, 1956) 'சோர் லுட்டேரே டாக்கு' (உஸ்தாத் 1957) 'மேரா நாம் சின் சின் சூ' (ஹெளரா பிரிட்ஜ் 1958) 'கைசா ஜாதூ பாலம் துனே' (12 ஒ கிளாக் 1958) போன்றவை.

"அவரது பாடலின் ஈடிணையற்ற தனித்தன்மையை எவரால் மறுக்க இயலும்? ஒரு தனி மேலைநாட்டு இசைப்பாடலையும், ஒரு இந்திய செவ்வியல் இசைப் பாடலையும் ஒன்றின்பின் ஒன்றாக அவருக்குப் பாடக் கொடுங்கள், இரண்டையுமே அவர் அந்தந்த இசைக்குரிய தனித்தன்மையுடன் சிறப்பாகப் பாடி விடுவார். இயல்பான உணர்ச்சிகள் மூலம் அவற்றுக்கு உயிரூட்டுவார். வேகமான பின்னணி இசையுள்ள ஆர்ப்பாட்டமான பாடல்களுக்கு அவரது குரல் மிகச்சிறப்பாக இசைந்து ஒலிக்கும். தன் குரலில் அவர் உருவாக்கும் ஆச்சரியமான வளைவுகளும் அபூர்வமான நுட்பங்களும் வழியாக பாட்டை அவர் மிக அந்தரங்கமான ஒன்றாக ஆக்குவார். மயக்கும் போதையுணர்வு ஒரு பாடலுக்கு வேண்டுமென்றால் அவரே மிகச்சிறந்த தேர்வு. எந்த ஒரு இசையமைப்பாளருக்கும் கீதா ஒரு பெரும் செல்வம் போல!".
ஒ.பி. நய்யார் கீதாவைப்பற்றி சொன்னது இது.

பிற இசையமைப்பாளர்களிடமும் கீதா சாதனைகளை செய்திருக்கிறார். பாடகரும் இசையமைப்பாளருமான ஹேமந்த் குமாரின் 'ஆனந்த மட்' (1951) 'பஹு' (1954) 'ஏக் ஜலக்' (1957) 'ஸாஹிப் பீபி அவுர் குலாம்' (1962) ஆகிய படங்களின் பாடல்கள் இன்றும் செவிக்கு விருந்தாக அமைபவை. சலில் செளதுரி இசையில் 'பாங்கீ அதாயேம்' (அமானத் 1955) போன்ற சிறந்த பாடல்களை பாடியிருக்கிறார். மதன் மோகன் இசையில் கீதா பாடிய 'ஏ தில் முஜே பதா தே' (பாய் பாய் 1956) ஒரு எல்லாக்காலத்திற்கும் உரிய வெற்றிப்பாடல்.

'ரோ ரோ கெ சுனா தே' (மேரி கஹானி 1948) கெ. தத்தா இசையில் அவர் பாடிய ஓர் அழியாத பாடல். 'ஜரா தும் ஜா' (ஜோகன் 1950 இசை புலோ சி ரானி) 'மே தொ ரஹீ ஆஜ் அகேலி ரே' (மஜ்பூர் 1948. இசை குலாம் ஹைதர்), 'தர்சன் பியாசி ஆயே தாசி' (படம் சங்க்தில். இசை ஸஜ்ஜாத்) போன்றவை அவர் பாடிய புகழ் பெற்ற பாடல்கள். சங்கர் ஜெய்கிஷன் போன்றவர்களுடனும் கீதா பாடியுள்ளார். ஆனால் நௌஷாத் கீதாவுக்கு ஒரு பாடல்கூட கொடுக்கவில்லலை. நௌஷாத், கிஷோர் குமாருக்கும் ஒருமுறை கூட வாய்ப்பளிக்கவில்லை!

கீதா பாடிய தாலாட்டுகள் குறிப்பாக சொல்லப்பட வேண்டியவை. உதாரணமாக 'நன்ஹி கலி' (சுஜாதா 1959). ஐம்பத்தேழின்
தொடக்கத்தில் தன் மிகச் சிறந்த 10 பாடல்களை தெரிவு செய்யும்போது கீதா தன் இசைக்கலையைப் பற்றி இவ்வாறு கூறினார் "ஒரு நல்ல பாடல் மானுட உணர்வுகளை மிக எளிமையான முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அந்த வகையில் உள்ள எண்ணங்களையும் உணர்வுகளையும் முழுமையாக வெளிப்படுத்திப் பாடுமளவுக்கு அப்பாடகிக்கு இடமளிப்பதாக அந்த மெட்டு அமையவும் வேண்டும். இங்கே நான் தேர்வு செய்துள்ளள பாடல்கள் எல்லா வயதினரும் கேட்டு ரசிப்பதற்கேற்ற எளிமை கொண்டவை என்று நம்புகிறேன்"

ராஜ்கபூரின் மாபெரும் வெற்றிப் படமான 'பர்சாத்' வெளிவந்து அதன் பாடல்கள் வழியாக லதா மங்கேஷ்கர் பெரும் புகழ் பெறுவது வரை
கீதா ராய் முதலிடத்திலேயே இருந்தார். கீதாவின் குரல் நடுத்தர சஞ்சாரம் உடைய கனத்த சாரீரம். லதாவின் குரல் மெல்லியதும் அதே சமயம் கீழ் ஸ்தாயி முதல் உச்சஸ்தாயிகள் வரை தடுமாற்றமும் இல்லாமல் பறந்துலாவும் தன்மை கொண்டதும். ஆகவே இயல்பாகவே
லதா மங்கேஷ்கர் இந்தியத் திரைப்பாடகிகளில் முதலிடத்தை அடைந்தார். கீதா இரண்டாமிடத்திலேயே திருப்தி கொள்ளும்படி நேர்ந்தது.

லதாவின் வெற்றிப்பயணத்திற்கு எதிராக கீதா கடுமையாகப் போராடி நிலை கொண்டார். லதாவின் சகோதரி ஆஷா போன்ஸ்லே அப்போதும் பாடிக் கால்பதிக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார். கீதா இசையுலகில் வெற்றியில் இருக்கும்போது ஆஷாவால் காலூன்ற முடியவில்லை. லதாவும் கீதாவும் இந்தித் திரையிசையில் இரு முதன்மைப் பாடகிகளாக ஐம்பதுகளில் கோலோச்சினார்கள்.

கீதாவுக்கு எவரிடமும் எவ்விதமான தொழில் போட்டியும் இருக்கவில்லை. எழுத்தாளர் ஆசித் ராய் தன் நினைவுகளில் இசையமைப்பாளர் ஹேமந்த் குமாரின் கல்கத்தா இல்லத்தில் பாடலுக்காக வந்திருந்த லதாவும் கீதாவும் அருகருகே அமர்ந்து சகோதரிகள் போல தழுவியபடி பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்ததாக எழுதியிருக்கிறார். கீதா என்றுமே இனிமையான, எளிமையான பெண்மணியாகத் திகழ்ந்தார். புகழும் செல்வமும் உச்சியில் இருக்கும்போது கூட சாதாரணமான புடவைகளையும் மிகக் குறைவான நகைகளையும் தான் அவர் அணிந்து வந்தார்.

கீதாவின் மகள் நீனா மேமன் தாயைப் பற்றி இவ்வாறு நினைவுகூர்ந்தார் "என் அம்மாவிடம் குழந்தைத்தனமான குறும்பு நிறையவே உண்டு. வேடிக்கையை விரும்பக் கூடியவர் நண்பர்களுடன் பேசி மகிழ்ந்திருக்க மிகவும் ஆசைப்படுவார். அம்மாவை தனிமையில் பார்த்த தருணங்கள் மிகவும் குறைவு. அதே சமயம் அம்மா வீட்டில் இருக்கப் பிரியப்படுபவர். தன் ஹார்மோனியத்தை எடுத்து வைத்துக் கொண்டு இந்தி, பெங்காளி பாடல்களைப் பாடுவது அவரது வழக்கம்"

குருதத் இந்தியத் திரையுலகின் முதன்மையான இயக்குநர்களில் ஒருவர். கவித்துவமான படங்களை உருவாக்கியவர். அவரது இயற்பெயர்
சிவசங்கர் படுக்கோன். கர்நாடகத்தைச் சார்ந்தவர். இளம் வயதை வங்காளத்தில் கழித்தார். இசை விற்பன்னர் ஆன குருதத் வங்க
நாட்டுப்புற இசையில் பெரும் ஈடுபாடு உடையவர். தான் இயக்கிய 'பாஸி' படத்தில் இடம்பெற்ற 'தட்பீர் ஸெ பிக்டி ஹுயீ தக்தீர் பனா தே' பாடலின் ஒலிப்பதிவின் போது குருதக் கீதா மீது தீவிரமான காதலில் விழுந்தார். 1953 மே மாதம் 26 ஆம் நாள் கீதா ராய் குருதத்தை மணந்து கீகதா தத் ஆக மாறினார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். தருண், அருண், நீனா.

கீதா தன் கணவரின் படங்களில் பல அழியாப் புகழ் பெற்ற பாடல்களைப் பாடியுள்ளார். 'ஜானே க்யா தூனே கஹி' (பியாஸா) பாடலில்
கீதா அளித்துள்ள அபூர்வமான அழகை மறக்க முடியாது. அதே படத்தில் இன்னொரு பாடல் 'ஆஜ் ஸஜன் மோஹே' யில் எஸ்.டி. பர்மன்
கீதாவின் உச்சரிப்பில் உள்ள மெல்லிய வங்காளத் தன்மையைப் பயன்படுத்தி, அந்த வங்காளப் பக்திப்பாடலை ஒரு அழகிய இந்திப்பாடலாக தேஷ் ராகத்தில் மாற்றியுள்ளார். படத்தில் வஹீதா ரஹ்மான் குருதத்தைப் பார்த்து தன் காதலை பாவனைகள் மூலம் வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தில், ஒரு தெருப்பாடகி பாடுவது போல் இது படமாக்கப்பட்டிருந்தது.

குருதத்தின் பியாஸா, ஆர் பார், காகஸ் கே பூல், சாஹிப் பீபி அவுர் குலாம் போன்ற பெரும்பாலான படங்களில் அவர் இரு பெண்கள் மீது ஒரே சமயம் காதல் கொண்டு சிக்கிக் கொண்டவராகவே தென்படுகிறார். இசை ஆர்வமும் கவித்துவமும் கொண்ட திரைமேதை குருதத் நிஜவாழ்விலும் இரு பெண்களிடம் மாட்டிக் கொண்டவரே.

குருதத்தும் கீதா தத்தும் அறிவார்ந்த சமநிலை கொண்ட தம்பதிகள் அல்ல என்றும் குருதத் குடும்பச் சுமைகளையோ குடும்பக் கடமைகளையோ ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாதவர் என்றும் கூறப்படுகிறது. அவர் ஒரு 'வேலைப் போதை' கொண்ட படைப்பாளி. ஆகவே அவர்கள் நடுவே உறவு மெல்ல விரிசல் விட்டது. அந்த தருணத்தில் குருதத் வஹீதா ரஹ்மானுடன் தீவிரமான காதலில் விழுந்தார். குடும்ப உறவுகள் சிக்கலாயின. கீதாவை சமாதானம் செய்யும் பொருட்டு குருதத் 1956ல் 'கெளரி' என்ற படத்தை தொடங்கினார். அதில் ஒரு பாடகியின் பாத்திரமாக கீதாதான் கதாநயாகி. அது இந்தியத் திரையின் முதல் சினிமாஸ்கோப் படமும் கூட. ஆனால் ஒரிரு நாள் படப்பிடிப்புக்குப் பிறகு அப்படம் கைவிடப்பட்டடது. காரணம் படப்பிடிப்பில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நிகழ்ந்த தொடர் பூசல்கள். கீதா பாடல் பதிவுக்கும் ஒத்திகைக்கும் உரிய நேரத்தில் வருவதில்லை என்ற புகார்கள் இசைவட்டாரத்தில் எழுந்த நாட்கள் இவை.

முன்னரே குருதத்துடனான கீதாவின் மண உறவு அவரது இசை வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்க ஆரம்பித்திருந்தது. 1953ல் திருமணத்திற்குப் பின்னர் குரதத், கீதா பிறர் படங்களில் பாடக்ககூடாது என்று நிபந்தனைகள் விதிக்க ஆரம்பித்தார். தன்னுடைய வேலைகள் முடிந்து தான் வீடு திரும்பும் போது கீதா வீட்டில் இருக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்ததார். குருதத்தின் கெடுபிடிகள் கீதாவை நெரித்தன. அவருக்கு மனச்சோர்வு உருவாயிற்று. ஆகவே மெல்ல கீதா மதுப் பழக்கத்திற்கு அடிமையானார். அவர் இசைப் பதிவுகளுக்கு முறைப்படி போக முடியாத நிலை உருவாகவே, மெல்ல மெல்ல ஆஷா கீதாவின் இடத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.

ஹேமந்த் குமார் வங்க மொழியில் எழுதிய ஒரு கட்டுரையில் கீதா முறையாக ஒத்திகைகள்ககு வர முடியாததனால் பாடல்கள் பதிவு
செய்ய முடியாமல் போன அனுபவம் பற்றி எழுதியிருக்கிறார். உண்மையில் 1957ல் லதா மங்கேஷ்கருடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டபோது எஸ்.டி. பர்மன் கீதாவை தன் முதன்மைப் பாடகியாக முன்னிறுத்த விரும்பினார். ஆனால் அன்று கீதா குடும்பச் சிக்கல்களில் மூழ்கியிருந்தமையால் அவர் ஆஷா போன்ஸ்லேயைத் தேர்வு செய்தார். ஆஷா அப்போது பண்படாதவர், கீதா தேர்ந்த பாடகி. ஆனால் எஸ்.டி. பர்மனைப்போல ஒரு கச்சிதவாதியின் இசையில் முழுமையை அடைவதற்கான கடும் பயிற்சிகளை மேற்கொள்ளும் மனநிலையில் அன்று கீதா இருக்கவில்லை. ஆஷா தீவிரமாக முயலும் நிலையில் இருந்தார்.

'ஆர் பார்' படத்திற்கு, அன்று எந்த பெரிய வெற்றிகளும் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த ஒ.பி. நய்யாரை இசையமைப்பாளராக
போடும்படி குருதத்தை கட்டடாயப்படுத்தி வாய்ப்பு வழங்கியவர் கீதா. ஒ.பி. நய்யாரின் எதிர்காலத்தைத் தீர்மானித்த படம் அதுதான்.
ஆனால் ஒ.பி. நய்யார் ஆஷா போன்ஸ்லேயுடன் காதல் கொண்டு அவரை தன் முதன்மைப் பாடகியாக முன்னிறுத்த ஆரம்பித்தார். கீதாவின் குரலில் உள்ள ஜாஸ் அம்சத்தை வெளிக்கொணர்ந்து இந்தியத் திரையிசையின் மிகச்சிறந்த ஜாஸ் பாடலான 'மேரா நாம் சின் சின் சூ' வை அமைத்த ஒ.பி. நய்யார் கீதாவைக் கைவிட்டார். அக்காலத்தில் கீதா நேரடியாகவே நய்யாருக்கு தொலைபேசி அழைப்பு செய்து 'என்னை ஏன் நீங்கள் கூப்பிடவில்லை? நான் என்ன தவறு செய்தேன்?' என்று கேட்டாராம். இது பற்றி பிற்பாடு குறிப்பிட்ட நய்யார் கடுமையான குற்ற உணர்வை வெளிப்படுத்தினார். "ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதில் காதல் காரணங்கள் இல்லாத ஒன்றாகத்ததான் இருக்கிறது" என்று சொன்னார். ஆனால் ஆஷாவிடம் காதல் உச்சத்தில் இருந்த போது தான் நய்யார் 'மேரா நாம் சின் சின் சூ' பாடலுக்கு கீதாவையே தெரிவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குருதத்தின் படமான 'காகஸ் கி பூல்' ல் எஸ்.டி. பர்மன் இசையில் எல்லா பெண் குரல் பாடங்களையும் கீதாவே பாடினார். இதில் வருத்தம் தரும் வேடிக்கை என்னவென்றால் அப்பாடல்கள் படத்தில் வஹீதா ரஹ்மான் குருதத்தைப் பார்த்துப் காதல் பரவசத்தில் பாடுவதாக ஒலித்தன. அப்போது குருதத் வஹீதா மீது வெறித்தனமான காதல் கொண்டிருந்தார். திரையில் வஹீதா அப்படத்தின் ஆழ்ந்த சோகப்பாடல்களுக்கு வாய் அசைக்கும்போது கீதாவே தன்னுடைய நெஞ்சக் கொதிப்பை அழுது வெளிப்படுத்துவது போல் ஒலித்தது அப்பாடல்கள். கடைசியில் குருதத் கீதாவை உதறி வஹீதாவைத் தேடிச் சென்றார். கீதா குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

வஹீதா குருதத்தின் 'காதலை' எவ்வகையிலும் ஆதரிக்கவில்லை, காரணம் குருதத் மணமாகி குழந்தைகளும் உள்ளள ஒருவர் என்று அவர் உணர்ந்திருந்தார். கீதாவை உதறிவிட்டு, வஹீதாவால் ஏற்கப்படாமல் குருதத் ஒரு விதமான திரிசங்கு நரகத்தில் மாட்டிக் கொண்டார். அதிலிருந்து வெளியேற ஓர் எளிய வழியை குருதத் தெரிவு செய்தார். 1964ல் அக்டோபர் 10 ஆம் தேதி குருதத் தற்கொலை செய்து கொண்டார். ஏராளமான மதுவையும் தூக்க மாத்திரைகளையும் கலந்து சாப்பிட்டதே மரணத்திற்குக் காரணம். குருதத்தின் இறப்பு இன்றும் ஒரு புதிராகவே உள்ளது. குருதத் தூக்கத்திற்காக மிதமிஞ்சிய மாத்திரை சாப்பிட்டிருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் பலர், அவர் முன்னரே சிலமுறை தற்கொலைக்கு முயன்றவர் தான் என்பதைச் சுட்டிக்காட்டி அது தற்கொலை தான் என்று வாதாடுகிறார்கள்.

குருதத்தின் மரணம் கீதாவை நிலை குலையச் செய்தது. தன் முழு இதயத்தாலும் குருதத்தை காதலித்தவர் கீதா. மனமுடைந்த கீதா குடிக்கு மேலும் மேலும் அடிமையானார். தன் இசைவாழ்வை மீண்டு எடுக்கவும் குழந்தைகள் பொருட்டு ஒரு புது வாழ்வை தொடங்கவும் முயன்றார்... முடியவில்லை. 1967ல் ஒரு தரம் குறைந்த வங்கப் படத்தில் கதாநாயகியாக நடிக்கவும் செய்தார். (பொது பரன்). ஆனால் கீதாவால் இசைப்பயிற்சிகளை முறைப்படி நிகழ்த்தவோ பாடல் பதிவுகளுக்கு தவறாமல் போகவோ முடியவில்லலை. குடியினால் அவரது உடல் நலம் சீரழிந்தது. தொடர்ந்து பொருளாதார நிலையும் சரிந்தது. வேலையாட்களிடமும் கடன் வசூலுக்கு வருபவர்களிடமும் கூசலிடும் கீதாவை அவரது பக்கத்து வீட்டார் நினைவு கூர்கிறார்கள்.

பின்னர் கீதாவின் மூத்த மகன் தருண் தத் நினைவு கூர்கையில் குடும்பத்ததை நடத்த, மிகக்குறைவான பணத்திற்ககு மேடையில் பாட
கீதா செல்ல ஆரம்பித்ததை குறிப்பிட்டார். திரையில் பாட யாரும் அழைக்காத நிலை உருவாகி விட்டிருந்தது. குடித்து நிலையிழந்து
பாதிப்பாடலிலேயே ஆர்மோனியப் பெட்டி மீது விழுந்த கீதாவை ஓர் இசை நிகழ்ச்சிக்குப் போன ரசிகர் நினைவு கூர்ந்திருக்கிறார்.

மனச்சோர்வின் உச்சியில், உடல்நிலை சரிவின் போதும்கூட 1971ல் வந்த 'அனுபவ்' என்ற படத்தில் கீதா தன் மிகச்சிறந்த பாடல்கள்
சிலவற்றைப் பாடியிருக்கிறார். 'மேரி ஜான் முஜே' 'கோயீ சுப்கே ஸெ ஆகே' ஆகிய பாடல்கள் காலத்தால் மறையாதவை.

1971ல், மறைந்த பாடலாசியர் ஷகீல் பதயூனியின் நினைவாக ஒரு மேடை நிகழ்ச்சி பம்பாய் ஷண்முககானந்தா சபாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் முகமது ரஃபி, முகேஷ் போன்றவர்கள் பங்கெடுத்த போதிலும் கூட அதன் நாயகி லதா மங்கேஷ்கர்தான். அனைவரும் லதாவையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இசைக்கலைஞர்களும் தொழில் நுட்பக்கலைஞர்களும் லதாவின் பாடலுக்காகவே தயாராக இருந்தார்கள். லதா மேடைக்கு வந்தபோது பரவசம் கொண்ட கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்ததது. லதா வழக்கம்போல மிகச் சிறப்பாகவே பாடினார். லதா பாடி முடிந்ததும் கீதா தத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. அங்கிருந்த ரசிகர்களில் அது எவ்வித
விளைவையும் உருவாக்கவில்லை. ஹார்மோனியத்துடன் கீதா மேடையேறியபோதும் கைத்தட்டல் ஏதும் எழவில்லை.

கீதா ஹார்மோனியத்தை இசைத்து பாட ஆரம்பித்தார். அவரது முகம் ஏமாற்றம் கொண்டு துயரம் நிரம்பிக் காணப்பட்டது. பாடும் போது பெரும்பாலான தருணங்களில் அவரது கண்கள் மூடியே இருந்தன. ஆழமான உணர்வுகளை வெளியிட்ட ஷகீல் பதயூனியின் கஸல்களை அவர் மெய்மறந்து பாடினார். ஆனால் அரங்கில் சாதகமான எதிர்வினை இருக்கவில்லை. முகேஷும் ரஃபியும் லதாவும் பாடியபோது ஏற்பட்டதில் பாதியளவுக்குக்கூட கைத்தட்டல் எழவில்லை. பெரும்பாலான நேரம் கீதா தனக்காகவே பாடுவது போல் இருந்தது. பிறரை எதிர்பாராமல், எவரையுமே காணாமல் கீதாவின் ஆத்மா தனித்திருந்து பாடுவதாகப் பட்டது.

கீதா தன்னையே அழித்துக் கொள்ளும் வெறி கொண்டவர் போல குடிக்க ஆரம்பித்தார். 1972 ஜூலை 20 ஆம் தேதி கீதாவின் அமரத்துவம் வாய்ந்த பாடல்களான 'யாத் கரோகே ஏக் தின் ஹம் கோ யாத் கரோகே'
("என்றாவது ஒருநாள் என்னை நீ நினைவு
கூர்வாய்... என்னை நீ நினைவு கூர்வாய்...")
போன்றவற்றை ஒளிபரப்பியபடி ரேடியோ கீதாவின் மரணச் செய்தியை அறிவித்தது. ஈரல் சீர் கேடினால் கீதா மரணமடையும்போது அவருக்கு வயது நாற்பத்திரண்டு.

பத்து வருடங்கள் கடக்கும் முன், கீதாவின் பிரியத்திற்குரிய முதல் மகன் தருண் தத் தற்கொலை செய்து கொணடார். அவர் இறந்து
கிடந்த அறையில் குருதத்தும் கீதா தத்தும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிதறிக் கிடந்தன. அவர்கள் குடும்பம் மகிழ்ச்சியுடன் இருந்த நாட்களில் எடுக்கப்பட்ட அப்புகைப்படங்களில் மாசில்லாப்புன்னகையுடன் தென்பட்ட தன் அழகிய தாயின் மடியில் தருண் இனிய
சிறுவனாக அமர்ந்திருந்தார்.

* கீதா தத் மறைந்த நாள்

தமிழில் : ஜெயமோகன்

கீதா தத் பாடல்கள்

மேரா ஸுந்தர் ஸப்னா பீத் கயா
தண்டி ஹவா காலி கடா