20081203

தற்கொலையின் பாடல்


மனுஷ்யபுத்திரனின் 'உட்புறமாக தாழிடப்பட்ட மரணங்கள்' என்ற கவிதை நமது நகரங்களிலும் சிறு பட்டினங்களிலும் விடுதியறைகளின் மூடிய கதவுகளுக்குள் நிகழும் தற்கொலை என்னும் உக்கிரமான சமூகப் பிரச்சினை குறித்துப் பேசுகிறது. அக்கவிதையில் தற்கொலைக்கு முன்னர் ஒவ்வொருவரும் கடந்துபோகும் நடத்தைகள் பற்றிய சித்திரங்கள் படிப்பவர்களுக்கு பெரும் மனவலியை தருபவை. இன்றைய நம் வாழ்வில் எல்லா தற்கொலைகளும் அவ்வாறு மூடிய தனியறைக்குள் நடப்பதில்லை. பல தற்கொலைகளும் கொலைகளும் தொலைக்காட்சிகளிலும் இணையத்திலும் ஒளிபரப்பபடுகின்றன. இராக்கிய கொலைகள், சதாம் உசேன் தூக்கு, விர்ஜினியா படுகொலை....நேரடி ஒளிபரப்போ அல்லது பதிவுக்காட்சியோ, இவற்றுக்கு மக்கள் மத்தியில் பெரும் கேளிக்கைமதிப்பு இருக்கிறது. இவற்றின் பரபரப்பு பார்வையாளர் எண்ணிக்கை மதிப்பீடுகளை எகிறவைத்து விளம்பரவருவாயை குவிக்கின்றது.

'சண்டே டைம்ஸ்'ஸில் வந்த ஒரு செய்தியின்படி சமீபத்தில் கிட்டத்தட்ட நூறு இணைய உரையாடல்குழும உறுப்பினர்கள் ஒரு பிரிட்டிஷ்காரர் தற்கொலைசெய்துகொள்வதை இணையம் வழியாக நேரடியாகக் கண்டு ரசித்தார்கள்! கெவின் விட்ரிக், நாற்பத்திரண்டு வயதானவர், ஷ்ரோப்ஷைர் ஊரைச்சேர்ந்தவர், இரண்டு குழந்தைகளின் தந்தை... பால்டாக் டாட் காமின் [www.paltalk.com] வசைபாடுதலுக்கான இணையதளத்தில் சக வலைப்பதிவாளர்களால் 'போதுமான அளவுக்கு' அவமானப்படுத்தப்பட்டபின் தற்கொலை செய்துகொண்டார்.

'வசைபாடி அரட்டைத்தளங்கள்' என்பவை அதன் உறுப்பினர்கள் தங்களை ஒருவருக்கொருவர் வசைபாடி உணர்வெழுச்சி கொள்வதற்காகவே உருவாக்கப்பட்ட இணையதளங்கள். அவற்றில் பங்கேற்பவர்கள் இணையஒளிப்பதிவுக்கருவிகள், உயர்தர ஒலி அமைப்புகள் ஆகியவற்றை கையாண்டு வசைபாடலை 'தத்ரூபமாக' ஆக்கிக் கொள்கிறார்கள். வசைபாடப்படும்போது குற்றவுணர்ச்சி உடையவர்களுக்கு நிம்மதி கிடைக்கிறது, வதைமனநிலை கொண்டவர்களுக்கு வசைபாடுதல் கிளர்ச்சி அளிக்கிறது.

கெவின் தூக்கு மாட்டிக்கொள்வதை அவரது கணிப்பொறியின் ஒளிப்பதிவுக்கருவி பதிவுசெய்தது. அதை இணையம் மூலம் கண்ட ஒருவர் இவ்வாறு சொன்னார், 'ஒரு நாற்காலி மீது ஏறி நின்று அவர் மேலே இருந்த திறந்த உத்தரத்தில் கயிற்றைக் கட்டி அதை தன் கழுத்தில் மாட்டிக் கொண்டர். வசைபாடித்தளத்தில் பார்வையாளர்கள் அவரை மேலும் மேலும் திட்டியபடி தூக்கில் தொங்குமாறு சொல்லிக்கொண்டே இருந்தனர். அவர் அவற்றுக்கு பதிலளிக்கவில்லை. தூக்கு மாட்டி இறந்தார். நான் முதலில் அது ஒரு தந்திரம் என்றுதான் நினைத்தேன், காரணம் அவரது கால்கள் திரையில் தெரியவில்லை. ஆனால் அவரது முகம் வெளிறி பின் நீலமாக மாறுவதைக் கண்டேன்''

இன்னொரு பால்டாக் உறுப்பினர் சொன்னார் ''கெவினை இந்த இணையதளம் மூலம் நான் பலவருடங்களாக அறிவேன். அவரது குறியிட்டு எண் 'ஷை கை 1-1' [கூச்சம் கொண்டவன்] அவர் அப்படிச் செய்வார் என நான் நம்பவே இல்லை. அவர் திரையில் வந்து உரத்தகுரலில் ''எனக்குச் சலித்துவிட்டது. நீங்கள் என்னை ஒரு மலக்குவியல் என்று நினைக்கிறீர்கள். இந்தமுறை அப்படி அல்ல'' என்றார். நான் அது ஒரு வெறும் மிரட்டல் என்றுதான் நம்ப விரும்பினேன் ஆனால் அது நிஜம் என்று அறிந்துமிருந்தேன். அரட்டைத்தளத்தில் இருந்த பலர் அவரை வசைபாடிக்கொண்டே இருந்தனர். நான் மட்டும் இது ஆபத்தானது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஒருவன் ஒலிக்கருவி மூலம் கெவினிடம் ''நாசமாகப்போ... செய்...தொங்கு ...தூக்கில் தொங்கு... அதை கழுத்தில் மாட்டு... அந்த முட்டாளைப்பாருங்கள்! அவனுக்கு இதைக்கூட ஒழுங்காகச் செய்யத் தெரியவில்லை...'' என்று கூவிக்கொண்டிருந்தான்..''

2003ல் பிராண்டன் வேடாஸ் என்ற 21 வயதான இளைஞன் அவரது இணையதள சகாக்களால் மிதமிஞ்சிய அளவில் போதைமாத்திரைகள் உண்ணும்படி தூண்டப்பட்டு உயிரிழந்தார். இதைப்போல இன்று தற்கொலைக்கு வழிசொல்லக் கூடிய, ஊக்குவிக்கக் கூடிய பல இணையதளங்கள் உள்ளன. 2001ல் மட்டும் இம்மாதிரி 17 மரணங்கள் பிரிட்டனில் நடந்ததாக கண்டடையப்பட்டுள்ளது.

கடந்த 45 வருடங்களில் உலகின் தற்கொலை விகிதம் அறுபது விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் ஒவ்வொரு முப்பது கணத்துக்கும் ஒருவர் தற்கொலைசெய்துகொள்கிறார் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. 2000த்தில் மட்டும் பத்துலட்சம்பேர் உலகமெங்கும் தற்கொலைசெய்துகொண்டார்கள்... இந்தியா தற்கொலைகள் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாகும். ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒருவர் இங்கே தற்கொலைசெய்துகொள்கிறார் என்று கணக்கு. குறிப்பாக தென்னிந்தியாவில் தற்கொலைகள் மிக அதிகம். இங்கே வருடத்தில் ஐம்பதாயிரம் பேர் தற்கொலைசெய்துகொள்கிறார்கள். இவர்களில் அதிகம்பேரும் இளம் வயதினர். பாண்டிச்சேரியில் மட்டும் ஒவ்வொரு மாதமும் பதினைந்து முதல் இருபத்தைந்து வரை வயதுள்ள பதினைந்துபேர் தற்கொலைசெய்துகொள்கிறார்கள்.

இந்தியாவில் கேரளமே தற்கொலை விகிதத்தில் முதலிடம் பெறும் மாநிலம். ஒவ்வொருநாளும் முப்பத்திரண்டுபேர் தற்கொலைசெய்கிறார்கள் அங்கே. அதிலும் இடுக்கி மாவட்டம் [தேனி, கம்பம் பகுதிக்கு அருகே உள்ளது] முதலிடம் வகிக்கிறது. நான் பிறந்து வளர்ந்தது அங்கேதான். பத்துவயதாக இருக்கும்போது நான் கண்ட முதல் தற்கொலை இன்றும் நினைவில் உள்ளது. ஒரு வெளிறிய ஞாயிற்றுகிழமைக் காலையில் எங்களுக்குத் தெரிந்த எளிய விவசாயி ஒருவர் பூச்சிமருந்து குடித்து தன் மண்குடில் வாசலிலேயே விழுந்து இறந்தார். மலிவான நீலநிற சேலை கட்டிய அவர் மனைவி, சிறுவனான மகனைக் கட்டிப்பிடித்து நுரையீரல் வெடிக்க 'உன் அப்பா போயிட்டாரே' என்று கதறி அழுதாள். இன்றுவரை தினம்தோறும் இடுக்கி வயநாடு மலைப்பகுதிகளில் உள்ள ஏழை விவசாயிகளின் தற்கொலை குறித்த செய்திகளைத் தாங்கியபடி நாளிதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன.

ஒரு அதி காலையில் நான் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு நடந்துசென்றபோது ரப்பர் மரத்தில் தூக்கில் தொங்கிநின்ற கோவிந்தனின் உடலைக் கண்டேன். நன்றாகப் பாடுபவனாகிய, எப்போதும் அழப்போகும் முகபாவனையுடன் இருந்த என் பள்ளித்தோழன் பாபு ஆழமான நீர்ச்சுழியில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டபோது அவனுக்கு வயது பதினைந்துதான். நெடுங்காலம் கழித்து அவனுடைய அண்ணன் பிரபாகரன் நாயர் முன்பு பரபரப்புடன் இருந்து, பின்னர் வியாபாரம் ஓய்ந்த தன் தேநீர்க்கடையில் தூக்கில் தொங்கினார். தற்கொலை செய்துகொண்ட இன்னொரு நண்பன் தங்கச்சனும் நானும் ஒருவருக்கொருவர் அவசரத்துக்கு சட்டைகளை இரவல் வாங்கி அணிவதுண்டு. அவன் இறந்த செய்தி வந்தபோது நான் அணிந்திருந்தது அவனுடைய சட்டைதான். அவனுடைய சாந்தியில்லாத ஆத்மா என்னைவந்து பிடித்து இறுக்குவதாக நான் நீண்டநாட்கள் கொடுங்கனவுகள் கண்டுவந்தேன்!

உலக ஆரோக்கிய நிறுவனம் [WHO] விஷம் போன்றவை அதிகமாக கிடைப்பது தற்கொலைக்கு ஒரு காரணம் என்று சொல்லி அதைக் கட்டுப்படுத்தும்படி சொல்கிறது. இந்தியாவில் பூச்சிக்கொல்லிகள் முதல் சுடிதார் துப்பட்டாக்கள் வரை தற்கொலைக்கான கருவிகள் ஆகின்றன. உ.ஆ.நி தனிமனிதர்கள் நடுவே சுயமதிப்பையும் நம்பிக்கையையும் உருவாக்குவது தற்கொலையை தடுக்க உதவும் என்கிறது. அத்துடன் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் சமூகத்துடனும் நல்லுறவை உருவாக்க வேண்டும் என்றும் கூறுகிறது. ஆனால் அனைத்துக்கும் மேலாக தற்கொலைகளை கட்டுப்படுத்துவதற்கு மதமும் ஆன்மீகமும் உதவும் என்று அது சொல்கிறது. எந்த அளவுக்கு இது உண்மை?

இந்தியாவில் கேரளத்தில்தான் பாதிரியார்கள், கன்னிகா ஸ்திரீகள் போன்ற கிரித்தவ மதப்பிரசாரகர்கள் அதிகமாக உள்ளனர்கள். அங்கு கடந்த பத்து வருடத்தில் மட்டும் 15 கன்னியா ஸ்தீரிகளின் தற்கொலை பதிவுசெய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் 34 வயதான சிஸ்டர் லிசா தன் கன்னியர்மடத்தின் வரவேற்பறையில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் கண்டடையபப்ட்டார். வாழ்க்கையில் கண்ட விரக்தியே தற்கொலைக்குக் காரணம் என்று அவரது தற்கொலைக்குறிப்பில் சொல்லப்பட்டிருந்தது. இதே விளக்கத்தை தேவாலய அமைப்பே அதிகாரபூர்வமாக கன்னியரின் தற்கொலைகளுக்கான காரணமாகச் சொல்கிறது!

சொல்லப்போனால் மதம் வழியாக உருவாக்கப்படும் மறுமை குறித்த நம்பிக்கை தற்கொலைகளுக்கான முக்கியமான காரணமாக உள்ளது. பெரும்பாலான தற்கொலைக் குறிப்புகளின் இறுதிவரிகள் இவ்வாறு உள்ளன: 'துயரம்மிக்க இவ்வுலகில் இருந்து துயரமே இல்லாத உலகுக்குச் செல்கிறேன்', 'கடவுள் என்னை மன்னித்து நித்தியத்துவத்திற்குள் என்னை அனுமதிப்பாராக', 'இங்கு எல்லா நம்பிக்கையும் அழிந்தன, நான் நிம்மதியான இடத்துக்குச் செல்கிறேன்', 'ஏசுவை நேருக்குநேராக பார்க்கப்போகிறேன்', 'நான் என் வீட்டுக்குத் திரும்புகிறேன்', 'உங்கள் அனைவரையும் நான் அங்கே சந்திக்கிறேன்'..... பெரும்பாலானவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கை இழக்கும்போது, மதத்தால் வாக்குறுதி அளிக்கப்படும் மறு உலக வாழ்க்கையை அடையும்பொருட்டே தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

1978 நவம்பர் 19ல் கயானாவில் ஜோன்ஸ் டவுனில் 'பீப்பிள்ஸ் டெம்பிள் கிறித்தவ தேவாலய'த்தைச் சேர்ந்த 914 பேர் சயனைட் கலந்த திராட்சை ரசம் அருந்தி ஒன்றாக தற்கொலை செய்துகொண்டார்கள். இவர்களில் 276 பேர் குழந்தைகள்.... தங்கள் பெற்றோராலேயே கொல்லப்பட்டனர். இவர்களின் தீர்க்கதரிசியான ஜேம்ஸ் ஜோன்ஸ், அது தற்கொலை அல்ல வேறு ஒரு உலகத்திற்குச் சென்று மேலான வாழ்க்கையை வாழ்வதற்கான பயணம் என்று சொன்னார். தங்கள் வழிபாடுகளில் தினந்தோறும் பொய் விஷம் அருந்துவது போன்ற தற்கொலை பயிற்சிகளை இவர்கள் மேற்கொண்டனர். இதுவே நவீன வரலாற்றின் மிகப்பெரிய கூட்டுத்தற்கொலையாகும்.

பாலஸ்தீன உளப்பகுப்பாளரான இயாத் சராஜ் [Iyad Sarraj], ஹமாஸ், அல் குவைதா போன்ற அமைப்புகளின் தற்கொலைப் போராளிகளின் உளவியலை ஆராய்ந்து இதே காரணத்தையே கண்டடைகிறார். அவர்கள் அனைவருமே தாங்கள் சாகவில்லை என்றும் இன்னும் மேலான ஒரு வாழ்க்கைக்குச் செல்வதாகவும் நம்பினார்கள். மதபோதகர்கள், மனித வெடிகுண்டுகளிடம் அவர்கள் மரணத்துக்குப் பின்னர் சொர்க்கத்தில் வாழ்த்தப்பட்டவர்கள் ஆக மாறி, அல்லாவின் முகத்தைக் காண்பார்கள் என்று சொல்லி நம்பவைத்தார்கள். பாலஸ்தீனிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு பேருரையில் ஹமாஸ் அமைப்பின் கோட்பாட்டளரான மதகுரு ஷேக் இஸ்மாயில் அல்-அத்வான் "இறந்து மேலுலகம்செல்லும் மதத்தியாகி உடனடியாக அல்லாவைக் காண்கிறான், அவன் கல்லறையில் நீண்டகாலம் சிறைப்பட்டுக் காத்திருக்கவேண்டியதில்லை. அவன் தன் இடத்தை சொர்க்கத்தில் கண்டடைகிறான். இறுதி நியாயத்தீர்ப்பு நாளின் விசாரணையில் இருந்து அவன் தப்பிவிடுகிறான். அவனுக்கு உடனடியாக எழுபத்திரண்டு கரியவிழி அழகிகள் பரிசாக அளிக்கப்படுவார்கள். நியாயத்தீர்ப்பு நாளில் தன் குடும்பத்தில் உள்ள எழுபதுபேரை அவர்கள் பாவங்களில் இருந்து அவனால் மீட்க முடியும்.'' என்று சொன்னார்.

இந்து, பௌத்த சிந்தனைகளை கலந்து ஓம் ஷின்ரி கியோ என்னும் மதத்தை ஜப்பானில் உருவாக்கி தன் ஆதரவாளர்களைக் கொண்டு டோக்கியோ சுரங்க ரயிலில் விஷப்புகையைப் பரப்பி 12 பேரைக் கொன்று மற்றும் பல்லாயிரம் பேரை தற்கொலைகளாலுல் கொலைகளாலும் அழிக்க திட்டம் போட்ட ஷோக்கோ அசாகரா இன்னொரு உதாரணம். சார்ல்ஸ் மில்லெஸ் மான்சன், லங்கர்தன், ஹெவென்ஸ் கேட், டேவிடியன் ப்ரான்ச், சோலார் டெம்பிள் என தற்கொலைத்தன்மை கொண்ட மதவழிபாட்டுக் குழுக்களின் பட்டியலை நீட்டிக் கொண்டே செல்லலாம்.

''ஏன் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது என்பதுதான் மனிதன் முன் உள்ள ஒரே தத்துவப்பிரச்சினை" என்று ஒருமுறை ஆல்பெர் காம்யூ சொன்னார். தற்கொலை ஆழமான ஒரு மானுடப்பிரச்சினை. அதை மனச்சோர்வளிக்கும் சமூகச் சூழல் வலிமைப் படுத்துகிறது. நம்மை ஒவ்வொருநாளும் வழிநடத்துவது வாழ்க்கையின் மேலான நம்பிக்கை. ஆனால் நம் நம்பிக்கை வாழ்க்கையிலிருந்து விலகி மதங்களும் போலி ஆன்மீகமும் உருவாக்கி அளிக்கும் மறு உலக வாழ்க்கை குறித்த நம்பிக்கையாக மிகமிஞ்சும்போதுதான் பெரும்பாலான தற்கொலைகள் நிகழ்கின்றன.

இசைக்கு வருகிறேன். இசை பலவகையான மனவதைகளுக்கு சிறந்த நிவாரணம் என்பது ஓர் அனுபவ உண்மை. பல நிபுணர்களின் கூற்றுப்படி இசை மனிதர்களிடம் நல்ல விளைவுகளை மட்டுமே உருவாக்குகிறது. விலங்குகளிடமும் தாவரங்களிடமும் கூட அது சிறந்த பாதிப்புகளை நிகழ்த்துகிறது. ஆனால் இசையிலும் தற்கொலை ஒரு நிரந்தரமான மையக்கருவாகும். தற்கொலையை புகழும், தற்கொலை மனநிலைகளை உருவாக்கும் இசைமரபுகளும் பாடல்களும் இசைக்குழுக்களும் உள்ளன. மெகாடெத், ஆட்டோ டிஸ்ட்ரக்ஷன், சூசைட் கமாண்டோ, சௌல் சூசைட், சூசைட் சைலன்ஸ், த சூசைட் மெஷின்ஸ் போன்றவை புகழ்பெற்ற ராக் இசைக்குழுக்களில் சில. பிரான்ஸ் ஷுபெர்ட் இசையமைத்த 'Die liebe Farbe' மற்றும் 'Der Muller und der Bach' போன்றவை தற்கொலைமோகம் கொண்ட செவ்வியலிசைப் படைப்புகளுக்கு சிறந்த உதாரணங்கள்.

மெட்டாலிகா குழுவின் 'தாழ்ந்தவனின் கீதம் [Low Man's Lyric], பேண்டேரா குழுவின் 'கல்லறைத்தோட்ட வாயில்' [Cemetery Gates], மெரிலின் மான்சனின் 'ஆறுவரை எண்ணியபின் செத்துவிடு' [Count to Six and Die] ஆர்.இ.எம் குழுவின் 'என் இறுதிச் சொற்கள் ['My Last Words] மற்றும் 'விட்டுச்செல்!' [Leave], சாரா மெக் லக்லானின் 'தேவதை' [Angel], ஜூடாஸ் பிரீஸ்டின் 'மரண ராஜ்யத்துக்கு அப்பால்' [Beyond The Realms Of Death], பிங்க் ஃப்லாய்ட் இயற்றிய 'குரூர உலகமே விடை கொடு' [Goodbye Cruel World] மற்றும்கடைசி வெட்டு [The Final Cut], எல்ட்டன் ஜானின் 'நான் தற்கொலைசெய்யப்போகிறேன் என எண்ணுகிறேன்' [I Think I'm Going To Kill Myself] போன்றவை தற்கொலையைப் புகழும் உலகப்புகழ்பெற்ற பாடல்கள். ஆனால் இப்பாடல்கள் எவையும் நேரடியாக ரசிகர்களை தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்பட்டதில்லை.

ஆனால் ஒரு பாடல் மட்டும் உலகமெங்கும் அதன் நூற்றுக்கணக்கான ரசிகர்களை தற்கொலைசெய்யவைத்தது என்று சொல்லப்படுகிறது. 'இருண்ட ஞாயிறு' [Gloomy Sunday] என்ற அந்தப்பாடல் தற்கொலையின் தேசியகீதம் என்றேகுறிப்பிடப்படுகிறது. நான் ஸ்டீவன் ஸ்பீல்பர்கின் 'ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்' என்ற படத்தை பார்க்கும்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட பின்னணி இசைப்பகுதி என்னை மிகவும் கவர்வதைக் கவனித்தேன். ஹங்கேரிய பியானோ கலைஞரும் இசையமைப்பாளாருமான ரெஸோ செரெஸ் [Rezso Seress] 1933ல் அமைத்த 'இருண்ட ஞாயிறு' என்ற பாடல் தான் அது என்று கண்டுகொண்டேன். அந்த இசையில் உள்ள அழுத்தும் நம்பிக்கையிழப்புக்க்கும் கசப்புமிக்க மனச்சோர்வுக்கும் ஹங்கேரிய கவிஞர் லாஸ்லோ ஜாவோர் [Lazlo Javor] துயரம் மிக்க வரிகளை எழுதினார். அப்பாடல் ஹங்கேரி முழுக்க தற்கொலைகளை விதைத்து 'ஹங்கேரிய தற்கொலைப்பாடல்' என்றே பெயர் பெற்றது. அதன் பின் அப்பாடலின் பல மாறுபட்ட வடிவங்களை கேட்டேன். அதன் இசை விசித்திரமான முறையில் மனதை ஆட்கொள்ளும்தன்மை கொண்டது. வரிகளில் மரணத்திற்கான ஆழமான தவிப்பு உள்ளது. துயரம் மிக்க இசையும் வரிகளும் மீண்டும் மீண்டும் வரக்கூடிய அந்தப் பாடல் மனச்சோர்வுள்ளவர்களை எளிதில் ஆழமான இறுக்கத்துக்குக் கொண்டுசெல்லக்கூடியது.

1932 டிசம்பரில் ரெஸோ செரெஸ் ஓர் இசையமைப்பாளராக அறியப்படுவதற்காக கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தார். உணவகங்களில் பியானோ வாசித்து வாழ்க்கையை கழித்த அவருக்கு, என்றாவது சிறந்த இசையமைப்பாளாராக வந்துவிடுவோம் என்ற கனவு இருந்தது. ஆனால் அவரது முயற்சிகள் தொடர்ந்து தோல்வி அடைந்தன. அவரது இசையமைப்புகள் இசைவெளியீட்டாளர்களால் நிராகரிக்கபப்ட்டன. அவரது காதலி அவர் ஏதேனும் நிரந்தர வேலைக்குச் செல்லவேண்டுமென்று கட்டாயபப்டுத்தினாள். ஆனால் செரெஸுக்கு தன் திறமை மேல் நம்பிக்கை இருந்தது. இறுதியில் ஒரு கடுமையான பூசலுக்குப் பின்னர் அவரை திட்டி சாபமிட்டுவிட்டு அவள் அவரைப் பிரிந்து சென்றாள்.

அப்பிரிவு நடந்த மறுநாள் ஒரு ஞாயிற்றுக்கிழமை. தன் இடுங்கலான அறையில் பியானோ முன் அமர்ந்து சன்னல் வழியாக புதாபெஸ்ட் நகரின் தொடுவானை நோக்கினார் செரெஸ். வெளியே நரைத்த வானில் மேகங்கள் திரண்டு திசைகள் இருண்டன. மழை கடுமையாகக் கொட்ட ஆரம்பித்தது. அது உண்மையிலேயே அவருக்கு ஒரு இருண்ட ஞாயிற்றுக்கிழமைதான். அவரது கைகள் பியானோவில் மெல்ல அலைந்துகொண்டிருந்தன. திடீரென்று அவை விசித்திரமனா துயரகீதம் ஒன்றை இசைத்தன. அவர் அப்போது இருந்த இடிந்துபோன மனநிலையை பிரதிபலிக்கும் இசையாக அது அமைந்தது. வெளியே இருண்ட வானம் அதன் குறியீடாக அமைந்தது.

'இருண்ட ஞாயிறு' என்று தலைப்பிட்டு அப்பாடலின் இசைக்குறிப்புகளை ஒரு பழைய போஸ்ட் கார்டில் எழுதினார் செரெஸ். வெறும் முப்பது நிமிடத்தில் பாடல் இயற்றப்பட்டுவிட்டது. அதை அவர் இசைவெளியீட்டாளருக்கு அனுப்பினார். வழக்கத்துக்கு மாறான எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். அப்பாடலும் நிராகரிக்கபப்ட்டது. 'இருண்ட ஞாயிறு விசித்திரமான ஆனால் ஏமாற்றம் அளிக்கும் மெட்டு. நாங்கள் இதைப் பிரசுரிக்க இயலாது' என்ற குறிப்புடன் திரும்பிவந்தது. யாருக்குமே அந்த இசை பிடிக்கவில்லை. இன்னொரு வெளியீட்டாளர் சொன்னார், 'அதில் பயங்கரமான ஈர்ப்புள்ள ஒரு மனச்சோர்வு கண்டிப்பாக இருக்கிறது. ஆனால் அது கேட்பதற்கு பிடிக்கும் என்றோ யாராவது அதை விரும்புவார்கள் என்றோ நான் நினைக்கவில்லை'.

எப்படியோ செரெஸ் கடைசியாக அதை வெளியிடுவதில் வெற்றிகண்டார். பல முக்கிய நகரங்களில் அவ்விசைத்தட்டு வெளியானதுமே அது பரவலாக கவனிக்கப்பட்டது. முதலில் கருவியிசையாக வெளியான அந்த மெட்டு பின்னர் செரெஸின் நண்பரான லாஸ்லோ ஜாவெரின் வரிகளுடன் குரலிசையாகவும் பதிவுசெய்யபட்டது. பின்னர் சாம் எம் லூயிஸ் அதை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்தார்.1936 வரை அப்பாடல் பெரிய அலை எதுவும் உருவாக்கவில்லை. ஆனால் 1936ல் இரண்டாம் உலகப்போர்ச் சூழலில் ஹங்கேரியில் நடந்த தொடர்ச்சியான தற்கொலைகள் அப்பாடலை பிரபலப்படுத்தின.

1936 பெப்ருவரியில் செருப்புதைப்பவரான ஜோசஃப் கெல்லரின் தற்கொலையை விசாரித்த உள்ளூர் போலீஸ் அவரது இறுதிக் கடிதத்தில் இப்பாடல் எடுத்துச் சொல்லப்பட்டிருந்ததை வெளிப்படுத்தினர். தொடர்ந்து அவ்வருடத்தில் மட்டும் 17 பேர் இப்பாடலை குறிப்பிட்டபின் தற்கொலைசெய்துகொண்டனர். உண்மையில் இருண்ட ஞாயிறு இம்மனிதர்கள் தற்கொலைசெய்துகொண்ட சந்தர்ப்ப சூழலுக்கு பெரிதும் ஒத்துபோவதாக காணப்பட்டது. அவர்களில் இருவர் இப்பாடலை ஒரு ஜிப்சி இசைக்குழு பாடுவதைக் கேட்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிர்துறந்தனர். பலர் இப்பாடலின் வரிகள் எழுதிய தாள்களை கையில் வைத்துக்கொண்டு டான்யூப் நதியின் குளிர்ந்த சுழல்களில் குதித்து இறந்தனர். ஒருவர் ஒரு உணவகத்துக்குள் நுழைந்து 'இருண்ட ஞாயிறு' பாடலைப் பாடும்படிக் கேட்டபின் அதைக் கேட்டவாறே தலையில் சுட்டுக் கொண்டாராம்.

அதேபோல பெர்லினில் ஒருவர் இசைக்குழுவிடம் இப்பாடலை மீண்டும் மீண்டும் வாசிக்கும்படி சொல்லி கேட்டபின் தன் அறைக்குத் திரும்பி தலையில் சுட்டுக் கொண்டார். அதற்குமுன் தன் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் அப்பாடல் தன்னை மனச்சோர்வடையச் செய்வதாகவும் அதை தலையைவிட்டு இறக்கவே முடியவில்லை என்றும் புலம்பியிருந்தார். ஒரு வாரம் கழித்து கடையில் வேலைசெய்யும் ஒரு பெண் தன் அறையில் தூக்கில் தொங்கி நின்றார். இப்பாடல் எழுதப்பட்ட கடிதம் அவள் காலருகே இருந்தது.

1936ல் அமெரிக்காவிலும் 'இருண்ட ஞாயிறு' விற்பனைக்கு வந்தது. அமெரிக்க இசைக்கலைஞர்கள் அதை தங்களுக்கு ஏற்ப வாசிக்கவும் பாடவும் முந்தினர். அவ்வருட இறுதியில் இருண்ட ஞாயிறின் பலவகையான வடிவங்கள் கடைகளில் நிறைந்தன. பாப் ஆல்லன் மற்றும் ஹால் கெம்ப் குழுவினர்தான் அங்கு முதலில் அதை பாடி வெளியிட்டவர்கள். புகழ்பெற்ற ஜாஸ் பாடகியான பில்லி ஹாலிடே பாடி 1941ல் வெளிவந்த 'இருண்ட ஞாயிறு' பாடல்தான் இன்றுவரை மிகப்பிரபலமாக உள்ளது. அந்தப்பாடல் பில்லியின் குரல் வழியாக பெரும்புகழ் பெற்று உலகளாவிய 'தற்கொலைப் பாடல'¡கியது. அந்த கெட்டபெயரை நீக்க அதில் உள்ள விரக்தியை குறைக்கும்பொருட்டு பில்லி அதில் 'கனவு... நான் கனவுதான் காண்கிறேன்...' என்னும் பத்தியை எழுதிச்சேர்த்தார். ஆயினும் அப்பாடல் தற்கொலையின் பாடலாகவே நீடித்தது.

செய்தித்தாள்கள் செரெஸ்ஸின் பாடலின் விளைவான தற்கொலைகளை தொடர்ச்சியாக அறிக்கையிட்டன. வடக்கு லண்டனில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை செய்தித்தாள்கள் இவ்வாறு விவரித்தன. ஒரு பெண் நிமிடத்துக்கு 78 சுழற்சி இசைத்தட்டில் செரெஸின் பாடலை உச்சத்தில் போட்டு மீண்டும் மீண்டும் கேட்டு பக்கத்துவீட்டாரை அஞ்ச வைத்தாள். அப்பாடலின் விளைவை அவர்கள் ஏற்கனவே வாசித்து அறிந்திருந்தார்கள். நடுவே ஒரு கீறலில் ஊசி மாட்டி பாடல் வரி மீண்டும் மீண்டும் ஒலித்தது. அண்டைவீட்டார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அந்தப்பெண் தூக்கமாத்திரைகளை அளவுக்கு மீறி உண்டு தற்கொலைசெய்துகொண்டு நாற்காலியில் சரிந்து அமர்ந்திருந்தார்.

இத்தகைய எதிர்விளைவுகள் காரணமாக புதாபெஸ்ட் காவல்துறை இப்பாடலை தடைசெய்தது. விசித்திரமான தொடர் தற்கொலைநிகழ்வுகள் அறிவிக்கப்படவே பிரிட்டிஷ் ஒலிபரப்புத்துறையும் (BBC), 'சபிக்கப்பட்ட' அப்பாடலை தடைசெய்தது. இன்றுவரை அந்தத் தடை நீடிக்கிறது. ஒரு பிரெஞ்சு ஒலிபரப்புநிறுவனம் உளவியலாளர்களைக் கொண்டு இதன் விளைவை ஆராய்ச்சி செய்தது. ஆனாலும் இதன் செல்வாக்கு அப்படியே நீடித்தது. தற்கொலைகளின் பட்டியல் வளர்ந்து வந்தது. உலகமெங்கும் ஏராளமான ஒலிபரப்பு நிறுவனங்கள் இப்பாடலை தடைசெய்தன. ஆனாலும் இது இசைத்தட்டுகளாக தொடர்ந்து வெளிவந்து மக்களால் விரும்பி வாங்கப்பட்டது.

தங்கள் இறுதிச்சடங்கில் இப்பாடல் இசைக்கப்படவேண்டும் என்று எழுதிவைத்து தற்கொலைசெய்துகொள்வோர் பெருகினர். காதல்தோல்விதான் இத்தற்கொலைகளுக்கு உண்மையான கராணம் என்று சொல்லப்பட்டாலும் அந்த மனநிலையை உருவாக்குவதில் இப்பாடலுக்கு உள்ள இடம் மறுக்க முடியாதது. உதாரணமாக இருண்ட ஞாயிறு பாடலை உரக்க ஒலிக்கவிட்டுக்கோண்டு ஒருவர் ஏழாம் மாடியிலிருந்து குதித்தார். அவருக்கு எண்பதுவயதுக்கும் மேலாகிவிட்டிருந்தது. நேர் மாறாக ஒரு பதினான்குவயதுப்பெண் இப்பாடலின் பிரதியைக் கையில் பிடித்தபடி நீரில் குதித்து இறந்தார். இன்னொரு சம்பவத்தில் வீட்டைவிட்டு ஓடிவந்த ஒரு சிறுவன் ஒரு பிச்சைக்காரர் இப்பாடலைப் பாடுவதைக் கேட்டபின் தன் சைக்கிளை நிறுத்திவிட்டு கையிலிருந்த மொத்தப் பணத்தையும் அவருக்குக் கொடுத்தபின் அருகே ஓடிய ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டான்.

உலகமே இப்பாடலைக்கண்டு திகைத்தது போல இசையமைப்பாளர் செரெஸும் பிரமித்துபோயிருந்தார். அவர் தன் பாடலின் அந்த பெரும் விளைவை கற்பனைசெய்யவே இல்லை. அதன் எதிர்மறை விளைவுகளை அவரும் அனுபவித்தார். பிரபலமடைந்த பிறகு அவர் தன் பாடலின் பிரதியை தன்னை விட்டுச்சென்ற காதலிக்கு அனுப்பிவிட்டு காத்திருந்தார். பதில் வரவில்லை. பலநாள் கழித்து செய்திவந்தது, அவள் அப்பாடலின் பிரதியை தன்னருகே வைத்துக்கொண்டு விஷம் குடித்து தற்கொலைசெய்துகொண்டாள்...

அப்பாடலை இயற்றும்போது அவர் எண்ணியது என்ன என்று கேட்கப்பட்டபோது செரெஸ் சொன்னார் "நான் வெற்றிபெற்ற ஒரு குற்றவாளியாக உங்கள் முன் நிற்கிறேன். இந்த விபரீதமான புகழ் என்னை துன்புறுத்துகிறது. என் நெஞ்சில் தேங்கிய எல்லா ஏமாற்றங்களையும் இந்தப் பாடலில் அழுது தீர்த்திருக்கிறேன். என்னைப்போலவே மனம் புண்பட்ட பிறரும் இப்பாடலில் தங்கள் துயரத்தைக் காண்கிறார்கள் என்று நினைக்கிறேன்''

இருண்ட ஞாயிறுக்கு ஸ்வீடிஷ், சீன, ஜப்பானிய, ஸ்பானிஷ் வடிவங்கள் உள்ளன. பால் ராப்சன், லூயிஸ் ஆம்ஸ்டிராங், சாரா லூவிஸ் வோகன், ஜெனிஸிஸ் [பில் காலின்ஸ்], ரே சார்லஸ், சாரா ஆன் மெக் லாக்லன் ஆகியோரால் அமைக்கப்பட்ட வடிவங்களும் இப்பாடலுக்கு இருக்கின்றன. இதில் முதன்மையானது பில்லி ஹாலிடேயின் பாடலே. அது இதயத்தை கீறி எழும் ஒரு தொலைதூரத்துக் கதறல் போல ஒலிக்கிறது. ஆனால் எனக்குப் பிடித்தது சமீபத்தைய வடிவமான ஐஸ்லாந்து பாடகி ப்யோர்க் [Bjork] பாடியதுதான். அவர் அதை ஒரேஒருமுறை மேடையில் பாடியதுடன் சரி, பிறகு பாடவேயில்லை. லாஸ் ஆஞ்சலிஸ் நகரில் வில்டெர்ன் தியேட்டரின் சார்பில் நடந்த நன்கொடை நிகழ்ச்சியில் அவர் அதைப் படினார். அதன் ஒலிப்பதிவு என்னிடம் உள்ளது. ப்யோர்க்கின் குரல் அப்பாடலில் உள்ள ஏமாற்றத்தையும் துயரத்தையும் உச்சத்துக்குக் கொண்டுசெல்கிறது. பின்னணி இசைச்சேர்ப்பு அற்புதமாக உள்ளது. அதன் மனநிலையும் பயங்கரமான மனச்சோர்வளிக்கும் விதத்தில் உள்ளது. ப்யோர்க்கை நம் காலகட்டத்து மாபெரும் பாடகிகளில் ஒருவராக நான் எண்ண ஆரம்பித்ததுக்கு 'இருண்ட ஞாயிறு' தான் காரணம் என்று சொல்லாலாம்.

1982ல் இருண்ட ஞாயிறு பாடலின் பதிவு ஒன்றை பாடி வெளியிட்ட பில்லி மெக்கின்ஸி என்னும் பாடகி, 1997ல் தற்கொலைசெய்துகொண்டார். 1999ல் நிக் பர்கோவ் எழுதிய நாவலை அடியொற்றி 'இருண்ட ஞாயிறு' பாடல் உருவான பின்னணியை புனைவாக்கம் செய்து எடுக்கபப்ட்ட ஜெர்மன்- ஹங்கேரியன் திரைப்படமான 'இருண்ட ஞாயிறு - காதல் மற்றும் மரணத்தின் பாடல்' [Gloomy Sunday, A Song of Love and Death] பெரும் வெற்றி பெற்றது. ரால்ப் ஷுபெல் இயக்கிய இப்படத்தின் டிவிடி கள் இப்போது கிடைக்கின்றன. அதில் இப்பாடலின் பல வடிவங்கள் உள்ளன.

இருண்ட ஞாயிறு பாடலைக் கேட்க நேர்ந்த பெரும்பாலானவர்கள் அதன் ஆழமான துயரத்தையும் மனத்தை அழுத்தும் அதன் கொடும்தனிமையையும் பற்றி பேசியிருக்கிறார்கள். வாழ்வதற்கான விருப்பமும் வாழ்க்கைமீதான காதலும் ஒவ்வொரு உயிருக்குள்ளும் இயற்கையால் நிரப்பப் பட்டுள்ளன. அது ஒரு ஆதிப்பெரும் வல்லமை. ஆனால் அதற்கு நேர் எதிரான தற்கொலை விருப்பமும் அதே அளவுக்கு ஆழமானதும் தீவிரமானதுமாகும். படைப்புக் கணத்தின் ஒரு உச்சத்தில் அந்த ஆழமான மனநிலை இப்பாடலில் வந்து அமர்ந்தது என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

1968 ஜனவரி 14ல் நியூயார்க் டைம்ஸில் இந்தச் செய்தி வெளியாயிற்று. 'புதாபெஸ்ட், ஜனவரி 13'இருண்ட ஞாயிறு' என்ற புகழ்பெற்ற இரங்கற்பாடல் மூலம் தற்கொலையின் அலைகளை உலகமெங்கும் உருவாக்கிய ஹங்கேரிய இசையமைப்பாளரும் பியானோ கலைஞருமான ரெஸோ செரெஸ் இன்று தற்கொலைசெய்துகொண்டதாக தெரியவருகிறது. திரு.செரெஸ் தன் அறுபத்தி ஒன்பதாவது பிறந்தநாள் கழித்து சில நாட்களில் தன் அறையின் சன்னல் வழியாக வெளியே குதித்து தற்கொலைசெய்துகொண்டார். சென்ற ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் நடந்தது'.

இருண்ட ஞாயிறு

இருண்டிருக்கிறது இந்த ஞாயிறு
என் நாட்களோ தூக்கமில்லாதவை
அன்பே, என் அன்பே
நான் கூடிவாழும் நிழல்களோ எண்ணற்றவை
சிறுவெண்மலர்கள் உன்னை எழுப்பப் போவதில்லை
துயரத்தின் கரிய வண்டி உன்னை எங்கே கொண்டு சென்றது
தேவதைகள் உன்னை திருப்பிக் கொண்டுவரப் போவதில்லை
உன்னுடன் நானும் வந்துசேர நினைத்தால்
அவர்கள் கோபம்கொள்வார்களா என்ன?
இருண்ட ஞாயிறு!
இருளே வடிவான இந்த ஞாயிறு!
நிழல்களுடன் அமர்ந்து நான் இதைக் கழிக்கிறேன்
என் இதயமும் நானும் சகலமும் முடித்துவிட முடிவெடுத்துள்ளோம்
விரைவில் மெழுகுவத்திகள் எரியும்
துயரமான பிரார்த்தனைகள் ஒலிக்கும்
மரணம் வெறும் கனவல்ல என்று அறிவேன்
ஏனெனில் மரணத்தில் நான் உன்னை வருடுகிறேன்
என் ஆத்மாவின் கடைசி மூச்சால் நான் உன்னை ஆசிர்வதிக்கிறேன்.

தமிழில்: ஜெயமோகன்
சாரா பிரைட்மேன் பாடிய 'க்ளூமி சண் டே' வடிவம்