20090406

இசையின் மதம்

''இசையே என் மதம், என் கடவுள்!''
ஜிமி ஹென்ட்ரிக்ஸ்
[புகழ்பெற்ற ராக் மற்றும் ப்ளூஸ் கித்தாரிஸ்ட்]

டிசம்பர் மாத இசைவிழாக்களில் சென்னையில் எல்லா சபாக்களிலும் அறிமுக உரைகள், வாழ்த்துரைகள், பாராட்டுரைகளைக் கேட்கலாம். பெரும்பாலான உரைகளில் ஒரு குறிப்பிட்ட கருத்து தவறாமல் இடம்பெற்றிருக்கும். இசை புனிதமானதும் தெய்வீகமானதுமாகும். ஆத்மதிருப்திக்கானது நல்ல இசை. அது கடவுள் மானுடனுக்கு அளித்த வரபிரசாதம்... இவ்வாறாக. 'நாதபிரம்மம்' 'சங்கீத யோகம்' போன்ற பழகிப்போன சொல்லாட்சிகள் இல்லாமல் இங்கு இசைபற்றிய பேச்சே இல்லை.
------------------------------------------------------------
உலகமெங்குமே இசை, குறிப்பாக செவ்வியல் இசை மிகவும் மதம் சார்ந்ததாகவும் வழிபாட்டின் ஒரு வடிவமாகவும்தான் நூற்றாண்டுகளாக இருந்துவந்துள்ளது. உலகின் பல பகுதிகளில் இசை மதத்தின் அளவுகோல்களால் வரையறுக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சமூகத்தின் மதச்சார்பின் இயல்புக்கு ஏற்ப அதன் இசைவடிவங்களும் உருப்பெறுகின்றன. பொது இடங்களில் கூடி அமர்ந்து வழிபடும் முறைகொண்ட யூத, கிறித்தவ மதங்களில் இசை என்பது இறைவழிபாட்டின் பிரிக்கமுடியாத பகுதி.
------------------------------------------------------------
ஆஃப்ரிக்காவில் இசையும் மதமும் ஒன்றாகவே இருந்துவந்துள்ளன. கூடி உழைத்து, கூடி உண்டு கூடி வழிபடும் ஆப்ரிக்க பழங்குடிச் சமூகத்தில் இசையும் கூட்டிசையாக அமைந்தது. கூட்டிசையின்போது அதில் ஈடுபடும் அனைவரையும் இறைச்சக்திகள் ஆவேசிப்பதாக நம்ப்பபட்டது. பாடகர் என்று தனியாக எவரும் இல்லை. பாடல் ஆடலில் இருந்து வேறுபடவும் இல்லை. காமமும் களியாட்டமும் எல்லாமே இறைவழிபாட்டின் பகுதியாக இருந்தன. இதுவே புராதன சமூகங்களின் இசைவழிமுறையாக இருக்க வேண்டும். பின்னர் பாடுவதில் தனித்திறன் கொண்ட பாடகர்கள் உருவானார்கள். அவர்கள் மதத்தின் பிரதிநிதிகளாக இருந்தார்கள். அவர்களின் பாடலுக்கு இறைவனுடன் நேரடியாகப்பேசும் வல்லமை இருப்பதாக நம்ப்பபட்டது.
------------------------------------------------------------
ரிக் வேதத்தின் பாடல்கள் பெரும்பாலும் இறைச்சக்திகளுடன் நேரடியாக பேசுபவை. ரிக்வேத சூத்திரங்களில் அவற்றின் ஆசிரியன் தன்னை 'பாடகன்' என்றே அழைத்துக்கொள்கிறான். ரிக்வேத சூத்திரங்களை எப்படி பாடவேண்டும் என்பதை நிரந்தரமாக வரையறுக்க சந்தஸ் என்னும் சாஸ்திரம் உருவாகியது. இசையே மந்திரமாக ஆனது. மந்திரம், அதாவது இசைப்படுத்தப்பட்ட குரல் என்பது பிற ஒலிகள் அனைத்திலிருந்தும் மேம்பட்டது, நினைப்புக்கு எட்டாத நுண்ணிய வல்லமைகள் உள்ளது என்ற எண்ணம் உருவாயிற்று. பாடும்பொருட்டு இசையமைக்கப்பட்ட சூத்திரங்கள் அடங்கியது சாமவேதம். இந்திய இசையே சாமவேதத்தில் இருந்து உருவானதுதான் என்று நம்புவது இங்குள்ள மரபு. வேத மரபில் இருந்து வேறுபட்ட சைவ மரபில் கூட சிவனின் உடுக்கின் ஓசையிலிருந்தே இசை பிறந்தது என நம்புவது வழக்கம்.
ஆகவே இந்தியாவில் இசை மதத்தின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டது. இசைக்கலைஞர்கள் இறைவனின் அருள் பெற்றவர்களாகவும் தூதர்களாகவும் கருதப்பட்டனர்.
------------------------------------------------------------
இசை செவிக்கு இன்பம் அளிக்கும் பொருட்டு முறைப்படுத்தப்பட்ட ஒலிகளின் தொகை என்ற எண்ணம் இங்கு இருந்தது இல்லை. இசை ஆத்மாவுக்கு உரியதாகவே பலரால் எண்ணப்பட்டது. இசையின் ஏழு சுவரங்களும் பிரணவ மந்திரத்தில் இருந்து பிறந்தவை என்று சொல்லப்பட்டன. கர்நாடக இசையின் முன்னோடிகள் ஏறத்தாழ அனைவருமே மதபிரச்சாரர்கள், துறவிகள், ஆன்மீகவாதிகள். இதனால் தூய இசை ஆன்மீகமானது என்றும் இசையின் உச்சம் இறையனுபவமே என்றும், மிகச்சிறந்த இசைக்கலைஞன் ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஜயதேவர், புரந்தர தாசர், இசைமும்மூர்த்திகள் போன்றவர்களைப்போல ஒரு இறையடியார் என்றும் இங்கே கருதப்பட்டது.
------------------------------------------------------------
இங்குள்ள முக்கியமான இசைமுன்னோடிகளெல்லாருமே கிட்டத்தட்ட புராணக் கதாபாத்திரங்கள் போல மதம் சார்ந்த மாயக்கற்பனைகளுடன்தான் கட்டமைக்கப்பட்டுள்ளானர். தியாகராஜ சுவாமிகளைப்பற்றி நமது இசைக்கல்லூரிகளில் கற்பிக்கப்படும் அதிகாரபூர்வ பாடநூல்களிலேயே ராமன் அவரைப்பார்க்க சீதையைக் கூட்டிக்கொண்டு நடந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.
------------------------------------------------------------
ஆனால் தொன்மையான தமிழிசை மதம் சார்ந்ததாக இருக்கவில்லை. பழங்குடி வாழ்க்கையுடன் கலந்த ஒரு வகை கொண்டாட்டவடிவமாகவும் அரசவைக் கலையாகவுமே அது இருந்துள்ளது. மதம் சாராத கானல்வரி போன்ற பலவகை இசைவடிவங்களை நாம் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். மதத்துடன் தொடர்பு இல்லாத பாணர், விறலி போன்ற இசைக்கலைஞர்களையும் சங்ககாலத்தில் காண்கிறோம். இசை பக்தியைவிட களியாட்டத்துக்குத்தான் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனாலும் அப்போதும் இசை இறைவழிபாட்டுக்கு நெருக்கமானதாகவே இருந்தது.
------------------------------------------------------------
களப்பிரர் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் பரவிய சமண மதம் இசைக்கு ஆதரவளிக்கவில்லை. பின்னர் சமணம் அழிந்து ஆழ்வார்களும் நாயன்மார்களும் உருவாக்கிய பக்தி இயக்கம் மூலம் சைவமும் வைணவமும் புத்துயிர் கொண்டபோது இசையே அந்த மறுமலர்ச்சிக்குரிய முக்கியமான ஊடகமாக இருந்தது. பக்தியை எளிதில் மக்கள் மத்தியில் கொண்டுசென்றது இசையே. இன்று வரை கர்நாடக இசைத்துறையில் காணக்கிடைப்பது பத்தாம் நூற்றாண்டு பக்தி இயக்கம் உருவாக்கிய வடிவங்களும் உள்ளடக்கமும் தான்.
------------------------------------------------------------
தீர்க்க தரிசன மதங்களில் பொதுவாக மூலநூல்களின் சொற்களுக்குத்தான் முதல் முக்கியத்துவம். ஆகவே அவை மூலநூலை ஓதுதலுக்கு சடங்குகளை விட அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. பௌத்தம், சமணம் முதலிய மதங்களில் பூசைகள் வழிபாடுகள் முதலியவை குறைவு. ஆகவே இசையும் அதிக அளவில் இல்லை. ஆனால் மூலநூல்களை ஓதுதல், தீர்க்கதரிசிகளை துதித்தல், பிரார்த்தனைகள் ஆகியவற்றுக்கு தெளிவாக வரையறுக்கப்பட்ட இசையமைப்புகள் உள்ளன. அவை அம்மதத்தின் இசையாக உள்ளன. இசை பற்றி தெளிவாகச் சொல்லாத இஸ்லாமிய மதத்தில் கூட இசைக்கும் மதத்துக்கும் இடையேயான உறவை நாம் காணலாம். 'வாங்கு' விளித்தலுக்கு நியதமான இசைமுறைமை உள்ளது. குர் ஆன் ஓதுதல் ஒரு குறிப்பிட்ட இசையிலேயே அமையவேண்டும் என்ற நிர்ணயம் உள்ளது. அந்த இசை புனிதமானதாகவும் கருதப்படுகிறது. ஓமான் முதலிய நாடுகளில் மாலித், மௌலெத், தாவ்மினா, அஹமத் அல் கபீர் முதலிய மதக் கொண்டாட்டங்களில் இசையின் பலவிதமான வடிவங்கள் கையாளப்படுவது வரையறுக்கப்பட்டுள்ளது.
------------------------------------------------------------
சித்தார் மேதை பண்டிட் ரவிசங்கர் ஒருமுறை இந்திய இசையையும் மேலை இசையையும் ஒப்பிட்டு இவ்வாறு சொன்னார் ''ராகத்தின் தனித்தன்மையான உள்ளொளி அல்லது ஆத்மா என்பது அதன் ஆன்மீகத்தன்மையும், அந்த ஆன்மீகத்தன்மை வெளிப்படும் முறையுமே. இது எந்த நூலில் இருந்தும் கற்றுக்கொள்ள முடியாத ஒன்று'' இந்திய இசை மதம் சார்ந்தது என்பதனால் பெரும்பாலான கலைஞர்களின் இசையில் ஆன்மீகமான அம்சம் இருக்கும் என்றார் ரவிசங்கர். ஆனால் ஹிந்துஸ்தானி இசையில் நிகழ்வின் முடிவில் இசைக்கும் தும்ரி அல்லது துன் சுதந்திரமானது. முற்றிலும் கற்பனாவாதப் பண்பு கொண்டது. இது புலன்களைத் தூண்டுவதும் பலசமயம் காமச்சுவை கொண்டதும் ஆகும் என்றும் அவர் சொன்னார்!.
------------------------------------------------------------
இந்திய வம்சாவளியினரான உலகப்புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் யெகுதி மெனுஹின் ஒருமுறை சொன்னார், இந்திய இசையில் இல்லாததும் மேலை இசையில் நிறைந்திருப்பதுமான அம்சம் ஒத்திசைவுதான் என. ஓர் இந்திய இசைக்கலைஞன் இசையில் இறைவனுடன் ஒன்ற நினைப்பானே ஒழிய பக்கத்திலுள்ள இன்னொரு மனிதனுடன் இணைய விரும்ப மாட்டான் என்றும், கிறித்தவ மதப்பிரச்சாரகள் இந்திய இசையை தவறாக புரிந்துகொண்டு உருவாக்கிய கருவியே ஹார்மோனியம் என்றும் மெனுஹின் சொன்னார். சுப்ரமணிய பாரதியார் கூட ஹார்மோனியத்தை கடுமையாக கேலிசெய்து எழுதியிருக்கிறார்.
------------------------------------------------------------
ஒருமுறை சென்னையில் ஒரு கர்நாடக இசைநிகழ்ச்சியை கேட்டுக்கொண்டிருந்தபோது செல்வந்த சாயல் கொண்ட முதியவர் என்னிடம் நான் அதை ரசித்தேனா என்று கேட்டார். ஆம் என்றதும் ''ஆனால் உனக்கு இதில் வரும் வரிகளின்மேல் நம்பிக்கை இல்லையென்றால் இதை உள்வாங்க முடியாது'' என்றார். கர்நாடக இசையின் வரிகள் பெரும்பாலும் ஏதேனும் ஹிந்து தெய்வங்களை நோக்கி பாடப்படுபவை என்பதும், தென்னிந்திய பக்தி இயக்கத்தின் அழுத்தமான பண்பாட்டு பதிவுகள் கொண்டவை என்பதும் உண்மையே. ஆனாலும் நான் அந்த முதியவருடன் உடன்படவில்லை. பாடகரிடமிருந்து இன்னிசை கொப்பளிக்க, வயலினின் கலைஞர் உடன் சேர்ந்து மேலெழ, தாளவாத்தியங்கள் முழங்க கேட்டிருப்பவர்களில் ஆதிமனஎழுச்சி ஒன்று ஊடுருவிச்செல்கிறது. அவர்கள் மதநம்பிக்கையாளர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்.
------------------------------------------------------------
கர்நாடக சங்கீதம் மிதமிஞ்சி கணக்குவழக்குகளைச் சார்ந்துள்ளதனல் பொதுவான ரசிகர்களுக்கு உள்ளே நுழைவது எளிதாக இருப்பதில்லை. ஆனால் ரசிகர்கள் கைகளால் தாளமிடுவது, தலையாட்டுவது, விரல்களால் எண்ணிக்கொள்வது எல்லாமே ராக் அண்ட் ரோல் இசையையோ ஜாஸ் இசையையோ நாட்டுப்புற இசையையோ கேட்கும் ரசிகர்களை தாளமிட்டும் கூடச்சேர்ந்து ஆடியும் ரசிக்க்கச்செய்யும் அதே இசைவல்லமையின் பாதிப்பினால்தான். இசையின் பாதிப்பு நம் சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒரு தளத்தில் நிகழ்வதாகும். பாடலின் சீரான ஏற்ற இறக்கங்கள், தாளத்தின் ஒழுங்கான துடிப்புகள், மணியோசைகள்.... இசை நம்மை அழ வைக்கிறது, நடனமிட வைக்கிறது, சூழலை மறக்கச்செய்கிறது.
------------------------------------------------------------
அன்றாட வாழ்வின் சலிப்பிலிருந்து தப்பி கனவின், கற்பனையின் இனிய உலகுக்குச் செல்ல விழைவது மானுட இயல்பு. நல்ல இசை காலாதீதமானது, அனைத்துக்கும் பொதுவானது, மானுட வரலாற்றின் எல்லா பக்கங்களிலும் காணக்கிடைப்பது. மனிதர்களுக்கு காமம் போல, கதைசொல்லல் போல இசையை ரசிப்பதற்கான ஒரு உள்ளார்ந்த இயல்பு உள்ளது என்பதையே இது காட்டுகிறது.
------------------------------------------------------------
வானவியல் நிபுணரும் எழுத்தாளருமான கார்ல் சேகன் ஒரு முறை சொன்னார் "இசை ஒரு பௌதீக நிகழ்வுதான். காதுகளில் புகுந்து, நரம்புகளை தூண்டி, மூளையில் மின்-ரசாயன அலைகளை உருவாக்கி, ரத்த ஓட்டத்தை பாதித்து, தசைநார்களை அதிரச்செய்து அது தன் பாதிப்பை நிகழ்த்துகிறது. இந்த கலையின் அற்புதகரமான வித்தை அந்த பௌதீகமான பாதிப்பை அது அபௌதீக தளங்களுக்கு கொண்டுசெல்கிறது என்பதே. அது நம்மை கவர்கிறது, ஆறுதல் படுத்துகிறது, நுண்ணிய ஆழங்களுக்குக் கொண்டுசெல்கிறது. நிச்சயமாக அது பண்பாட்டு எல்லைகளை மீறிய ஒன்றுதான்".
------------------------------------------------------------
உண்மையில் மதம் சார்ந்த கலையின் உச்சம் கூட பழமைவாதத்தன்மை கொண்டதாக இருப்பதைவிட பெரும்பாலும் மரபு எதிர்ப்புத்தன்மை கொண்டதாக, தீர்க்கதரிசனம் கொண்டதாக காணப்படுகிறது. அது தன் ரசிகனுக்கு எல்லையில்லாத நன்னம்பிக்கையை, ஆறுதலை அளித்து சிந்தனையில்லாத பேரமைதிக்கு இட்டுச்செல்லக்கூடும். அத்தகைய ஒன்றை அளிக்கும் மகத்தான இசை, அது பாக் (Bach) ஆக அல்லது தியாகராஜராக இருந்தாலும் சரி, அல்லது '' நான் ஒளியைக்காண்கிறேன்! இனி துயரில்லை! இனி இரவில்லை! '' என்று பாடிய ஹாங்க் வில்லியம்ஸாக இருந்தாலும் சரி அதன் ஈர்ப்பு தடுக்கமுடியாதது. தீவிரநாத்திகன் கூட, அவனுக்கு அழகுணர்வு இருந்தால் அதன் வயப்படுவான்.
------------------------------------------------------------
காஸ்பல் இசையை கேட்க கிறித்தவராக இருக்கவேண்டுமென்பதில்லை. சூஃபி அல்லது கவாலி அல்லது அரபு இசையை ரசிக்க முஸ்லீமாக இருக்கவேண்டுமென்பதுமில்லை. ஜோஹன்னாஸ் ஒகேஹேம் [Johannes Ockeghem] போன்றவர்களின் கிறித்தவ தேவாலய சங்கீதம் எந்த இசை ரசிகனுக்கும் விருந்தே. அழகுணர்வு கொண்ட ஒரு நாத்திகனுக்கு வில்லியம் பிளேக், கபீர், மீரா, குர்ட்டிஸ் மேஃபீல்ட், தியாக ராஜ சுவாமி போன்ற தீவிரமான மதநம்பிக்கையாளர்களின் இசை நெஞ்சைத்தொடுவதாகத்தான் இருக்கும். மதத்துக்கு எதிர்காலத்தில் என்ன ஆனாலும் இசை நீடித்திருக்கும். மகாகவி பாரதியாரின் மதம் சாராத புகழ்பெற்ற பாடல்கள் பல உள்ளன. தன் தேசத்தை, தன் குழந்தையை, தன் காதலியைப்பற்றி அவர் பாடிய பாடல்களை பொருளறிந்து கேட்கும்போது இசையின் அனுபவம் பலமடங்கு மேலெழுகிறது. ஆனால் சங்கீத மும்மூர்த்திகளின் பாடல்கள் உள்ளடக்கத்தை விட அவற்றின் அமைப்புக்காகவும் இசைத்தன்மைக்காகவும் ரசிக்கப்படுகின்றன. நம் சபாக்களில் தியாகராஜ கிருதிகளைப்பாடும் தெலுங்கு தெரியாதவர்களில் எத்தனை பேருக்கு புராதன தெலுங்கில் எழுதப்பட்ட அவற்றின் பொருள் தெரியும்?
------------------------------------------------------------
தமிழ் மரபில் மதம் சாராத இசை சிற்றின்பம் சார்ந்ததாகவும் இழிவானதாகவும் கருதப்பட்டது. தாசிகளாலும் அவர்களின் பாடகர்களாலும் மட்டுமே பாடப்பட்டது. நூற்றாண்டுகளாக உலகெங்கும் மதமே இசையின் புரவலராக இருந்துள்ளது. இசையை நம்பிக்கையை பரப்பி நிலைநாட்டும் ஊடகமாக அது கையாண்டு வந்திருக்கிறது. ஆகவே மதம்சாராத மரபு இசை மிகக்குறைவேயாகும். ஆனால் செவ்வியல் காலகட்டம் முதலே பெரும் இசைக்கலைஞர்கள் நாத்திகர்களாகவோ மதச்சார்பில்லாதவர்களாகவோ அறியமுடியாமைவாதிகளாகவோ இருந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறந்த மதம்சார்ந்த இசையை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதனால் அவர்களுக்கு இறைநம்பிக்கை உண்டு என்று சொல்லமுடியாது.
------------------------------------------------------------
உதாரணமாக பல கத்தோலிக்க வராலாற்றாசிரியர்கள் அழியாப்புகழ்பெற்ற கிறித்தவ இசையான 'ஆவே மரியா' போன்றவற்றை உருவாக்கிய ஷுபெர்ட் [Franz Peter Schubert], பொதுப்பார்வையில் அவர் சர்ச்சுடன் எந்த தொடர்பும் வைத்திருக்காவிட்டாலும் கூட உண்மையில் ஒரு ஆழ்ந்த மதநம்பிக்கையாளராகவே இருந்திருக்கவேண்டும் என்று எழுதியுள்ளார்கள். இதைப்பற்றி புகழ்பெற்ற அமெரிக்க நாத்திக தத்துவ சிந்தனையாளர் மேடலின் முர்ரே ஓ-ஹேர் [Madalyn Murray O'Hair] ''அப்படியென்றால் வீனஸின் அழகிய தோற்றத்தை வரைந்தும் சிற்பமாக்கியும் வடித்த புகழ்பெற்ற கலைஞர்களெல்லாருமே வீனஸ் கடவுளை வழிபட்டர்கள் என்று சொல்லவேண்டும். அக்காலத்தில் மதம் சார்ந்த இசையே சமூக அமைப்புகளால் ஏற்கபட்டது, மதிக்கபட்டது எனபதனால் தான் இசைக்கலைஞர்கள் மதச்சார்புள்ள இசையை உருவாக்கினார்கள், அவ்வளவுதான்" என்கிறார்.
------------------------------------------------------------
மதநம்பிக்கை இல்லாதவர்களான, அதே சமயம் இசையில் மகா சாதனைனைகள் புரிந்த மேதைகள் பலர். ஜெர்மானிய இசையமைப்பாளர் பீத்தோவன் [Ludwig Van Beethoven, 1770-1827] ஒரு கத்தோலிக்கராகவே வளர்க்கப்பட்டார். மிஸ்ஸா சோலெம்னிஸ் [Missa Solemnis] போன்ற புனித ஆக்கங்களையும் பீத்தோவனின் ஒன்பதாம் சிம்பனி என்று அழைக்கப்படும் பெரும்படைப்பான தேவாலய சிம்பனியையும் அவரே அமைத்தார். பீத்தோவனின் அமானுடமான மேதமையைக் கண்ட பலரும் அவரை இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்றே எண்ணினர். உண்மையில் அவர் மத நம்பிக்கை கொண்டவரல்ல என்பதுடன் மதம் சாராத பல சிம்பனிகளையும் அதே வீச்சுடன் அமைத்துமிருக்கிறார். அவர் கத்தோலிக்க மதத்தை உதறி ஜெர்மானிய தத்துவ ஞானியும் கவிஞருமான கதே (Goethe)யால் உருவாக்கபப்ட்ட பாந்தீஸம் [Pantheism] என்ற இயற்கைவாத முறைக்கு சென்றார். இம்முறை கத்தோலிக்க மதத்தால் உலகியல் சார்ந்தது, சாத்தானிமை கொண்டது என்று கூறப்பட்டு கடுமையாக ஒடுக்கப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------------
மாபெரும் மேலை இசையமைபபளரான ஹய்டன் [Franz Joseph Haydn] அவரைப்போலவே பீத்தோவனும் ஒரு நாத்திகர் என்று சொல்லியிருக்கிறார். பீத்தோவனின் வரலாற்றை எழுதிய ஜார்ஜ் மாரெக் [George Marek] பீத்தோவன் கத்தோலிக்க மதத்தில் பிறந்தாலும் அதை ஒருபோதும் கடைப்பிடிக்காதவராக இருந்தார் என்று குறிப்பிடுகிறார். அவர் சர்ச்சுகுச் சென்றதாகவோ வழிபட்டதாகவோ எந்த பதிவும் இல்லை. ஒருமுறை வயலின்கலைஞர் ஃபெலிக்ஸ் மோஸெலெஸ் [Felix Moscheles] ஒரு பாடலின் ஒலிக்குறிப்பின்மீது 'கடவுள் துணை' என்று எழுதியபோது பீத்தோவன் 'மனிதனே துணை' என்று அதை திருத்தினாராம். 1827ல் அவர் மரணப்படுக்கையில் இருந்தபோது அவரது ஆன்ம ஈடேற்றம் பற்றி கவலைப்பட்ட சில நண்பர்கள் பாதிரியாரைக் கூட்டிவந்து இறுதிப்பிரார்த்தனை செய்தனர். புன்னகையுடன் அவற்றை பார்த்துக் கிடந்த பீத்தோவன் 'கைத்தட்டுங்கள் நண்பர்களே, வேடிக்கைநாடகம் முடிகிறது' என்றாராம். சர் ஜி.மக்பெரான் [G. Macferren] அவரது சர்வதேச வாழ்க்கைவரலாற்று அகராதியில் பீத்தோவனை ஒரு சுதந்திர சிந்தனையாளராகவே குறிப்பிடுகிறார். கத்தோலிக்கர்கள் பலர் அவரை ஒரு கத்தோலிக்கர் என்று சொல்லிக்கொள்வதுண்டு என்றாலும் கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தில் அவர் குறிப்பிடப்படவில்லை.
------------------------------------------------------------
பீத்தோவனின் சமகாலத்த்வரும் மேலை இசைமரபிலேயே உச்சமான இசையமைப்பாளராக சொல்லப்படுபவருமான மொஸார்ட் [Wolfgang Amadeus Mozart ] கூட ஒரு மதநம்பிக்கையில்லாதவர்தான். 1756ல் பிறந்த மொஸார்ட் தன் ஐந்துவயதிலேயே இசையமைக்க ஆரம்பித்தார். தன் இசைக்கோலங்களை தானே பன்னிரண்டு வயதில் பொதுநிகழ்ச்சியாக நடத்தினார். அடுத்தவருடமே போப்பாண்டவர் அவரை நைட் [Knight of the Golden Spur] பட்டம் கொடுத்து கௌரவித்தார். சாலிஸ்பர்க் ஆர்ச் பிஷப்பின் இசைநிகழ்விப்பாளார் பதவியில் மொஸார்ட் பத்துவருடம் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் அவர் கத்தோலிக்க நம்பிக்கையை இழந்து கத்தோலிக்க சபையால் தடைசெய்யப்பட்ட ஃப்ரீமேசன்ஸ் [Freemasons] அமைப்பின் உறுப்பினரானார். இக்காலகட்டத்தில் அவர் அமைத்த ஓப்பராக்களும் இசைக்கோலங்களும் மொசார்டின் மேசன் நாட்கள் என்று சொல்லப்படுகின்றன. இந்த மதமாற்றத்தால் புகழையும் பதவிக¨ளையும் இழந்த மொஸார்ட் தொழில்முறை போட்டிகளாலும் வறுமையாலும் தளர்ந்து படுத்த படுக்கையானார். சிறுநீரகநோய் காரணமாக தன் 35 வயதில் மொஸார்ட் இறந்தபோது பால்காரர் உட்பட அனைவருக்குமே கடன் வைத்திருந்தார். அவரது மனைவி சொல்லியனுப்பியும்கூட அவர் பாதிரியாரை பார்த்து இறுதிப்பிரார்த்தனை செய்ய மறுத்துவிட்டார். பாதிரியாரும் அவர் ஃப்ரீமேசன் ஆனதனால் வர மறுத்துவிட்டார். அவரது சடலம் எந்தவித சடங்குகளும் இல்லாமல் ஏழைகளுக்கான சவமேட்டில் புதைக்கப்பட்டது. அவரது இசையில் பெரும்பகுதி தேவாலய சங்கீதம். கத்தோலிக்க கலைக்களஞ்சியம் அவரை ஒரு கத்தோலிக்கராகவே குறிப்பிடுகிறது. ஆனால் அவரது இரு வாழ்க்கைவரலாற்றாசிரியர்களும் தெளிவாகவே அவர் ஒரு கிறித்தவரல்லாதவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
------------------------------------------------------------
மாபெரும் ஜெர்மானிய இசையமைப்பாளர் பிராம்ஸ் [Johannes Brahms 1833-1897] புரட்டஸ்டாண்ட் சபைகளுக்காக புகழ்பெற்ற ஜெர்மானிய சேர்ந்திசையை அமைததவர். ஆகவே அவரை ஒரு உறுதியான கிறித்தவராக நம்புகிறவர்களே அதிகம். ஆனால் அவர் பீத்தோவனைவிட கடுமையான மதமறுப்பாளர். அவர் ஹெர்ஸொகென்பர்க்குக்கு எழுதிய கடிதங்களில் (Letters of J.Brahms: The Hersogenberg Correspondence, English translation 1909) தன்னை ஒரு 'அறியமுடியாமைவாதி' என்றுதான் குறிப்பிடுகிறார். புகழ்பெற்ற ஃபிரெஞ்சு இசையமைப்பாளரான தேபஸ்ஸி [Claude Achille Debussy, 1862-1918] பாரீஸ் கண்சர்வேட்டரியில் பதினொரு வயதில் சேர்ந்து விரைவிலேயே உலகப்புகழ்பெற்றார். அவரது La'presmidi d'un faune போன்ற ஆக்கங்கள் அழியாப்பெரும் படைப்புகளாக கருதப்படுகின்றன. அவர் நவீன பாகன் (Neo Paganism) நம்பிக்கையாளராகவே வாழ்ந்தார். எவ்வித மதச்சடங்குகளும் இல்லாமல் அடக்கம் செய்யப்பட்டார்.
------------------------------------------------------------
ஏற்கனவே குறிப்பிட்ட ஆஸ்திரியா இசையமைப்பாளர் ஷுபர்ட் [Franz Peter Schubert, 1797-1828], இரண்டு தேவாலயச் சேர்ந்திசைகளையும் எண்ணற்ற கிறித்தவப்பாடல்களையும் உருவாகியிருக்கிறார். ஆனால் மதமறுப்பாளராக வாழ்ந்தார். தன் இசை அகராதியில் சர் ஜார்ஜ் குரூவ் [Sir George Grove] அவரது வாழ்க்கையில் மத நம்பிக்கை இருக்கவில்லை என்றும், மதத்தின் கூற்றுகளைப்பற்றி சொல்லும்போது 'அவற்றில் ஒரு சொல் கூட உண்மையில்லை' என்று அவர் சொன்னதாகவும் குறிப்பிடுகிறார்.ஜெர்மானிய இசையமைப்பாளர் ராபர்ட் ஷூமான் [Robert Schumann, 1810-1856] தன் இளவயதிலேயே கிறித்தவ மதத்தை உதறியதாகவும் கதேயின் இயற்கைவாதத்தைபின்பற்றியதாகவும் தன் கடிதங்களில் குறிப்பிடுகிறார். இன்னொரு ஜெர்மானிய இளவயது இசைமேதையான ஸ்டிராஸ் [Richard Strauss,1864-1949] மத மறுப்பாளாரான நீட்சேயின் (Nietzsche) தத்துவங்களில் ஈடுபாடுகொண்டவர். நீட்சேயின் சிந்தனைகளை ஒட்டி சிம்பனி அமைத்தவர்.
------------------------------------------------------------
மாபெரும் ருஷ்ய இசைமேதையான சைக்கோவ்ஸ்கி [Peter Ilich Tchaikovsky, 1840-1893] ஜெர்மானிய இசைமேதை வாக்னர் [Wilhelm Richard Wagner, 1813 -1883] பிரெஞ்சு இசையமைபபலார் பெர்லியோஸ் [Hector Berlioz 1803-1869] போன்றவர்களெல்லாம் மதநம்பிக்கை அற்றவர்களே. இவர்கள் ஆழ்ந்த தத்துவப்பயிற்சி கொண்டவர்களும் சிந்தனையாளர்களுமாவர். பிசெட் [Alexandre Cesar Leopold "Georges" Bizet (1838-1875) நிகோலா பாகனினி [Niccolo Paganini (1782-1840] ஜியுஸுப்பெ வெர்டி [Guissepe Verdi] என்று மதநம்பிக்கையில்லாத மேலை மரபு இசைமேதைகளின் பெயர்களை சொல்லிக்கொண்டே செல்லலாம். ஆன்மீகத்துக்குப் பதிலாக மதம் சாராத சுதந்திரமான தேடலே இவர்களை இயக்கியது.
------------------------------------------------------------
இப்பெருங்கலைஞர்கள் அனைவருமே ஐரோப்பிய மறுமலர்ச்சியின் சிருஷ்டிகள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். கிறித்தவ தேவாலயத்தின் மூர்க்கமான கட்டுப்பாடுகளுக்கும் ஒற்றைப்படையான நம்பிக்கைக்கும் எதிராக உருவான மாபெரும் அறிவியக்கமே ஐரோப்பிய மறுமலர்ச்சி. இக்காலகட்டக் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் மதத்தை உதறி பல தளங்களில் சுதந்திரமாகச் செயல்பட முயன்றார்கள். மதத்துக்கு மாற்றாக இயற்க்கையையும் தத்துவ சிந்தனையையும் அறிவியலையும் தொன்மையான படிமங்களையும் முன்வைக்க முயன்றவர்கள். ஆனால் அன்றைய சூழலில் இவர்களில் பலர் கிறித்தவ மதத்துக்கு உள்ளேயே செயல்பட நேர்ந்தது.
------------------------------------------------------------
நவீனகாலகட்டத்தில் மதத்தின் பிடியிலிருந்து மேலை இசை முற்றிலும் விடுபட்டுவிட்டது. மதச்சார்பில்லாத மாபெரும் இசைக்கலைஞர்களை தொடர்ந்து காண்கிறோம்.மார்க் க்னோஃப்ளெர், டேவிட் போவீ, பில்லி ஜோயேல், டேவ் மாத்தியூஸ், பியோற்க், மைக்கேல் ஸ்டைப், பீட்ட்ர் பக்க், சும்பாவாம்பா, டேய்சைட், ஆனி டி ஃப்ராங்கோ, டேனி எல்ஃப்மான், எக்ஸ்ட்றீம், ஃபில்டெர், பேரி மானிலோவ், ஷேர்லி மேன்சன், மோட்டோற் ஹெட், ஃபிராங்க் ஜாப்பா, கேரீ நியூமேன், பில்லி பிராக் போன்ற எண்ணற்ற இசைக்கலைஞர்களும் இசைக்குமுக்களும் கடவுள் நம்பிக்கையையும் மதச்சார்ப்புகளையும் தங்களின் இசையிலும் வாழ்க்கையிலும் நிராகரித்தவர்கள். பீட்டில்ஸ் நட்சத்திரமான ஜான் லென்னன் [John Lennon 1940-1980] மதத்தை நிராகரித்து எழுதி, பாடியவர். 'இமேஜின்' என்ற உலகப்புகழ்பெற்ற பாடலில் அவர் பாடுகிறார்:
------------------------------------------------------------
எண்ணிப்பாருங்கள் சொற்கம் இல்லையென்று!

முயற்சி செய்தால் முடியும்

எண்ணிப்பாருங்கள் கீழே நரகமும் இல்லை!

மேலே வானம் மட்டுமே!

அனைவரும் இன்றைக்காகவே வாழ்கிறார்கள் என்று எண்ணிப்பாருங்கள்!
------------------------------------------------------------
எண்ணிப்பாருங்கள், நாடுகளே இல்லை!

சிரமமில்லை சற்று, எண்ணிப்பாருங்கள்!

கொல்வதற்கும் சாவதற்கும் எதுவுமிலைமதமும் இல்லை!

இன்று மதநம்பிக்கை இல்லாத இசைக்கலைஞர்களும் மதம் சாராத இசையும்தான் உலகை நிறைத்துள்ளன என்பதே உண்மை. மதத்தின் மாறாத சடங்குகளும், அதன் அடித்தளமில்லாத வாக்குறுதியும், கற்பனையும் படைப்புத்திறனும் கொண்டவர்களைச் சோர்வுறச்செய்கிறது. இசை இன்று கட்டற்று பறக்க விழைகிறது. காமத்தையும் களியாட்டத்தையும் பிரிவையும் தனிமையையும் மதத்தின் பூச்சுக்கள் இல்லாமல் காட்டி வாழ்க்கையை நேரடியாகப் பாட முயல்கிறது.
------------------------------------------------------------
கிறித்தவத்தை வெறுத்த பாப் மார்லி 'கெட் அப் ஸ்டேண்ட் அப்' பாடலில் பாடினார்"உங்கள் இசமும் கிஸமும் எங்களை சலிப்புறவைக்கின்றனஏசுவின் பேரால் செத்து உங்கள் சொற்கத்துக்கு ஒழியுங்கள்!எங்களுக்கு தெரியும்! நாங்கள் அறிந்துகொண்டோம்!முழுமுதல் இறைவன் ஒரு வாழும் மனிதன்!நீங்கள் சிலரை சிலசமயம் முட்டாளடிக்கலாம்,எல்லாரையும் எப்போதும் முட்டாளடிக்க முடியாது!''

பாப் மார்லியின் மகனும் ரெகே பாடகனுமாகிய ஸிக்கி மார்லி [Ziggy Marley] தீவிரமான நாத்திகர். அவர் 'கடவுளின் பெயரால்'' என்னும் பாடலில்

கடவுளின் பெயரால் கொல்கிறீர்கள் ! உங்கள் கடவுளின் பெயரால்!

கடவுளின் பெயரால் கைப்பற்றினீர்கள் உங்கள் கடவுளின் பெயரால்!

கடவுளின் பெயரால் வெறுக்கிறீர்கள் உங்கள் கடவுளின் பெயரால்!

கடவுளின் பெயரால் பீற்றிக்கொள்கிறீர்கள் உங்கள் கடவுளின் பெயரால்!
------------------------------------------------------------
எல்லா மதங்களும் துடைத்தழிக்கப்படவேண்டும்!

அதன் பின் நாம் வாழ்விற்காக வாழ்வோம்!

நம்மை பிரிப்பது மதம், குழம்பிப்போன மனிதர்களால் உருவான மதம்!

இந்தியாவில் இன்றும் மரபிசை மதத்தின் பிடியிலிருந்து வெளியே வரவில்லை. கர்நாடக இசை கேட்பது மதம் சார்ந்த உணர்வுகளின் நீட்சியாகவும் மரபிசைநிகழ்ச்சிகள்பல சமயம் மதச்சடங்குகளின் பகுதியாகவும் உள்ளன. ஆகவே கர்நாடக இசைக்கலைஞர்கள் கனிந்த பக்திமான்களாக தோற்றம் தரவேண்டிய தேவை உள்ளது. உள்ளூர இவரில் எத்தனைபேர் உண்மையில் பக்தி உள்ளவர்கள் என்று கண்டறிவது கஷ்டம். இந்தியாவின் இளைய தலைமுறையினருக்கு நம் மரபிசையில் சலிப்பு ஏற்பட முக்கியமான காரணம் இதில் மேலோங்கியுள்ள பக்திசமர்ப்பண மனநிலைதான்.
------------------------------------------------------------
இந்திய சமூகம் அந்த உணர்வுகளில் இருந்து விடுபட்டு உலகவாழ்க்கையின் வெற்றிகளையும் உல்லாசங்களையும் அறிவியல்முறையையும் நோக்கி திரும்பிவரும் காலம் இது. பக்தி இன்று சிலரின் வாழ்க்கையின் ஒரு அம்சம் மட்டுமே. ஆனால் கர்நாடக இசை மட்டும் பக்தியன்றி வேறு இல்லாமல் உள்ளது. நம் நாட்டு இசையின் தொண்ணூறு சதவீதத்தை திரை இசை ஆக்ரமித்துக் கொண்டிருப்பதற்கு ஒரு காரணம் அது பலவிதமான வாழ்க்கைநிலைகளையும் உணர்ச்சிகளையும் முன்வைப்பதாக இருப்பதுதான்.
------------------------------------------------------------
செவ்வியல் இசை இளைஞர்களுக்கு அன்னியமாகி வருகிறது ஆனால் மரபான ராகங்களில் அமைந்த திரைஇசைப்பாடல்களை இந்த இளைய தலைமுறையினரும் மிகவும் விரும்புகிரார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். என்னிடம் மிக நுண்ணுணர்வுள்ள ஓர் இளைஞர் சொன்னார் "நூற்றாண்டுகளாகத் தொடரும் இந்த மிதமிஞ்சிய பக்தி மற்றும் ஆன்மீகம் மூலம் இந்தியா அடைந்ததுதான் என்ன? இவர்களுக்கு இசை என்பது பக்தியே. இந்த இசையின் ஒரே பாவமும் அதே தான் என்பதினால் சலிப்புதான் ஏற்படுகிறது''
------------------------------------------------------------
"இசைக்கு இறைபக்தி இன்றியமையாதது அல்ல. ராகம் தாளம் தானம் மற்றும் பிற அழகியல் அம்சங்கள்தான் கர்நாடக சங்கீதத்தை உருவாக்கின. இசை தன்னளவிலேயே பரவசத்தை நோக்கி இட்டுச்செல்லும் பயணம் என்பதே இசையிலிருந்து நாம் அடையும் ஆன்மீக அனுபவம் என்பது. கர்நாடக சங்கீதம் உண்மையிலேயே நமக்கு அறிவார்ந்த உணர்வுபூர்வமான நிறைவை அளிக்கும் கலைவடிவம். கர்நாடக சங்கீதத்தை புதிய நூற்றாண்டில் பரவச்செய்வதற்கு அதை ஒரு கலைவடிவமாக புரிந்துகொள்வதே இன்றியமையாதது.
------------------------------------------------------------
ஒரு கலையின் ஆழம் அதன் விரிவு தீவிரம் ஆகியவற்றுக்கே மரியாதை அளிக்கப்பட வேண்டும், அதற்கு மதத்துடன் உள்ள தொடர்புக்கு அல்ல. அதன் சாகித்யங்களில் உள்ள உள்ளடக்கம் அதை எழுதிய ஆசிரியர்களின் தனிப்பட்ட உணர்வுபூர்வமான ஈடுபாடுகளை சார்ந்ததே ஒழிய அதுவே இசையை தீர்மானிக்கும் அம்சமாகாது. வேறு எந்த செவ்வியல் இசை வடிவத்தையும் போலவே கர்நாடக இசையும் உலகளாவிய ரசனைக்குக் கொண்டுசெல்லப்படவேண்டியுள்ளது. இது அதை மதத்துக்கு தாரை வார்க்காமல் சரியான கோணத்தில் புரிந்துகொள்வதன் மூலமே சாத்தியமாகும். கர்நாடக இசையை மதத்தில் இருந்து விடுவிப்பதற்கான ஓர் அழைப்பு இது'' என்று கர்நாடக இசைப்பாடகர் டி.எம் கிருஷ்ணா இந்து இதழில் சமீபத்தில் வந்த ஒரு கட்டுரையில் சொன்னார். காலச்சுவடு இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் பிரபல பாடகர் சஞ்சய் சுப்ரமணியம் கூட அவருக்கு ஆழமான மதப்பிடிப்பும் இறைநம்பிக்கையும் இல்லை என்று சொல்லியிருந்தார்.
------------------------------------------------------------
அன்றாடவாழ்வின் சந்தடிகளில் இருந்து மனதை மேலெழச்செய்து உச்சநிலைகளில் உலவச்செய்யும் வல்லமைகொண்ட முதன்மையான கலைவடிவம் இசை. சாமுவெல் பார்பரின் அடேஜியோ [Adagio for strings] கம்பிகளில் அதிரும்போது நம் கண்களில் மௌனமாக கண்ணீர் துளிர்க்கிறது. வில்லியம் ஆர்பிட் அதே இசையை மறு ஆக்கம் செய்து நிகழ்த்தும்போது நாம் நடனமாட எழுகிறோம். இசையின் முகங்கள் எண்ணற்றவை. அது நம் சாரத்தை தொடுகிறது. நம் மனக்கண் மட்டுமே காணச்சாத்தியமான அகச்சித்திரங்களை நம்முள் தீட்டுகிறது. மிக நுண்மையான மிக உயிர்ப்புள்ள சித்திரங்கள். இசை நம்மில் கிளர்த்தும் ஆழமான, தீவிரமான, அந்தரங்கமான உணர்வுகள் தன்னளவிலேயே மிகப்புனிதமானவை.