20090420

ராய் ஆர்பிசன் - துயரத்தின் இசை

சமீபத்தில் இணையத்தில் என்னுடைய வலைப் பக்கத்தைத் துவக்கிய போது, அந்தக் கட்டுரைகளில் பேசப் படும் இசையைப் புரிந்து கொள்ள உதவியாக மாதிரிப்பாடல்களை இணைக்கலாம் என்ற எண்ணம் உருவானது. இசை நட்சத்திரங்களையோ இசை வடிவங்களையோ பற்றியான கட்டுரைகளுக்காக இத்தகைய பாடல்களைத் தேர்வு செய்வது எனக்கொன்றும் பெரிய சிரமமில்லை. ஆனால் இசையின் உணர்ச்சி வெளிப் பாடுகளைப் பற்றியான கட்டுரைகளுக்கு நெருக்கமான பாடல்கள் எவையெனத் தேர்வு செய்வதில் தடுமாற்றம் உருவானது. நல்ல இசைக்கு உதாரணமாக சிக்கலான பாடல்களை சிபாரிசு செய்வதில் எனக்கு உடன் பாடும் இல்லை. ஆனால் சிறந்த இசையின் அடிநாதமான சோக உணர்வைப் பற்றி எழுதியபோது என்னுடைய தெளிவான ஒரே தேர்வாக இருந்தது ராய் ஆர்பிசனின் ‘அழுது கொண்டிருக்கிறேன்’ (Crying) என்ற பாடலே.
---------------------------------
சில வருடங்களுக்கு முன்பாக ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லிஞ்ச் (David Lynch) இயக்கிய முல் ஹாலந்த் டிரைவ் (Mullholland Drive) என்ற படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லா டேவிட் லிஞ்ச் படங்களையும் போலவே இப்படமும் சிக்கலான காட்சியமைப்புகளுடன் சுவாரஸ்யமாகவும் பன்முகத் தன்மையுடனும் இருந்தது. படத்தின் இசை என்னை மிகவும் கவர்ந்தது.
இத்தாலிய அமெரிக்க இசையமைப்பாளரான ஆஞ்சலோ பதேல் மென்டி (Angelo Badalementi) இசையமைத்திருந்தார். கோனி ஸ்டீவன்ஸ் (Connie Stevens) பாடிய ‘உன்னைக் காதலிப்பதற்கான பதினாறு காரணங்கள்’ (Sixteen Reasons Why I love you), பதினாறு வயது பாடகி லின்டா ஸ்காடின் (Linda Scott) ‘ஒவ்வொரு சிறிய நட்சத்திரத்திடமும் சொன்னேன்’ (I'vetoldevery little star) போன்ற பதினாறு பாப் இசைப்பாடல்களை இப்படத்தில் புத்திசையாக்கம் செய்து சிறப்பாகப் பயன்படுத்தினார்கள். எல்லாமே பெரும் புகழ் பெற்ற பாடல்கள். ஆனால் இந்தப் பதினாறு பாடல்களில் யாவரையும் நொடியில் கவரும் பாடல் ‘லொரான் தோ’ (Llorando) என்ற ஸ்பானிய இசைப்பாடல்.

படத்தின் முக்கிய கதாபாத்திரமான பெட்டி (நவோமி வாட்ஸ்), ஒரு கார் விபத்தில் மிக மோசமாக பாதிக்கபட்டு நினைவாற்றலை இழந்த ரீடாவுடன் (லாரா ஹேரிங்) குளிர்கால இரவொன்றில் தனிமை சூழ்ந்த ஒரு வீட்டிலிருக்கிறாள். இருவருக்குள்ளும் ஒடுங்கியிருந்த உணர்ச்சிகள் பீறிட அவர்களுக்குள் ஒருபால் உறவு ஏற்படுகிறது.

அதன்பிறகு இருவரும் மனச் சோர்வுடன் உறக்கமற்று படுக்கையில் கிடக்கிறார்கள். குழப்பமும் உள்ளார்ந்த பதற்றமும் கொண்ட அவர்கள் செய்வதறியாமல் பின்னிரவில் வீட்டிலிருந்து வெளியேறி உறைந்த குளிரில், மனிதர்கள் அற்ற வீதியில் கனவைப் பின்தொடர்வது போல நடக்கத் துவங்குகிறார்கள்.

‘நிசப்தம்’ (Silencio) என்ற ஸ்பானிய இரவு விடுதியை அடைகிறார்கள். அங்கே வெறுமையும் சவக்களையும் படிந்த நாலைந்து மனிதர்களின் முன்னால் ஒரு இசை நிகழ்ச்சி துவங்குகிறது. அறிவிப்பாளர் அடுத்தப் பாடலை பாடவருபவர் புகழ்பெற்ற பாடகி ரெபேக்கா டெல் ரியோ (Rebekah Del Rio) என்று அறிவிக்கிறார். தடுமாற்றமான நடையுடன் மேடைக்கு வந்துசேரும் அவள் எந்தப் பின்னணி இசையுமின்றி ‘லொரான் தோ” பாடலைப் பாடத்துவங்குகிறாள்.

இதயத்தை கனமாக்கும் அந்தத் துயரப்பாடல் அவளது வேதனை மிக்க குரலில் பீறிட்டு ஒலிக்கிறது. பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் அது தங்கள் சாவிற்கான இரங்கற்பாடல் என்ற துக்கவுணர்வு ஏற்படும்படி அந்தப் பாடலின் ஒவ்வொரு துளியிலும் தீர்க்கமுடியாத வலி நிரம்பியிருக்கிறது. பெட்டியும் ரீடாவும் தங்களை மறந்து அழுகிறார்கள். பாடலின் முடிவில் மேடையிலே பாடகி மயங்கி விழுந்து இறந்து விடுகிறாள். அவள் உடலை மேடையிலிருந்து கொண்டு செல்வதை பயத்தில் உறைந்த கண்களுடன் பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
---------------------------------
படம் பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் அப்பாடல் அதே அனுபவத்தைத் தான் ஏற்படுத்தியது. தொடர்ந்து என்னால் அந்தப் படத்தைப் பார்க்க முடியவில்லை. அது ஒரு ஸ்பானிய பாடல் என்றபோதும் மிகப் பரிச்சயமானதாக மனதில் தோன்றியது. படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் பட்டியலைப் பார்த்த போது இப்பாடல் 1961இல் வெளியான ராய் ஆர்பிசனின் ‘அழுது கொண்டிருக்கிறேன்’ (Crying) பாடலின் வேறுபட்ட ஓர் வடிவம் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.
---------------------------------
33 வருடங்களுக்குப் பின்னால் 1994இல் இந்தப் பாடல் ஸ்பானிய மொழிக்கு மாற்றப்பட்டு அங்கு புகழ்பெற்ற பாடகியான ரெபாகா டெல் ரியோவால் பாடப்பட்டு பெரும் புகழ் பெற்றது. 2001 இல் வெளியான முல்ஹாலந்த் டிரைவ் இந்தப் பாடலை எளிய வடிவத்தில் பின்னணி இசையின்றிப் பயன்படுத்திக் கொண்டது. ஆக வெளியாகி 41 வருடங்களுக்குப் பிறகும் ராய் ஆர்பிசனின் ‘அழுது கொண்டிருக்கிறேன்’ பாடல் பல வடிவங்களில் துயரத்தை எழுப்பியபடியே ஒலிக்கிறது எனக் காணலாம்.
---------------------------------
ராய் ஆர்பிசனின் இன்னொரு உலகப்புகழ்பெற்ற பாடல் ‘ஓ ப்ரிட்டி வுமன்’ (Oh Pretty Women). இதுவும் முதலில் 1961இல் வெளியானது. இந்தப் பாடலின் இரண்டு கோடிப் பிரதிகள் விற்பனையாகி உள்ளன. 1990இல் வெளியான ப்ரிட்டி வுமன் ஹாலிவுட் திரைப்படத்தின் தலைப்பும் இசைக்கோர்வையும் இந்தப் பாடலில் இருந்து உருவானதே. ஜுலியா ராபர்ட்ஸ் மற்றும் ரிச்சர்ட் கிரே நடித்த இந்தப் படம் மென்மையானதொரு காதல்கதை. ‘அழுது கொண்டிருக்கிறேன்’ பாடலுக்கு நேர் எதிராக ப்ரிட்டி வுமன் பாடல் கேட்டவுடனே எவரையும் சந்தோஷம் கொள்ள வைக்கக் கூடியது.
---------------------------------
ராக் அண்ட் ரோல் இசைவரலாற்றின் ஒரு அசாத்தியமான குரல் ராய் ஆர்பிசன். தன்னுடைய குரல் வளத்தால் மூன்று மேல் கீழ் ஆக்டேவ்களில் அவரால் பாட முடிந்திருக்கிறது. அவரது துயரமிக்க பாடல்கள் கூட ராக் அண்ட் ரோல் இசையின் வேகம் மிக்க தாளத்திற்கு இணையாகத்தான் அமைந்திருக்கிறது. 1960இல் வெளியான ‘தனிமையிலிருப்பவர்கள் என் வலியை அறிவார்கள்’ (Only the Lonely) என்ற ராய் ஆர்பிசனின் பாடல் அமெரிக்காவின் சிறந்த பத்துப் பாடல்கள் பட்டியலில் ஒன்பது முறை தேர்வு செய்யப்பட்டது. இந்தப் பாடல் வழியாகத் தான் ராய் ஆர்பிசன் மிகுந்த பிரபலம் அடைந்தார்.
---------------------------------
இந்தப்பாடலை அவர் எல்விஸ் பிரஸ்லிக்காகத் தான் முதலில் உருவாக்கினார். ஆனால் எல்விஸ் அது தனக்குப் பிடிக்கவில்லை என்று ஒதுக்கினார். பின்னர் எல்விஸ் பிரஸ்லி உலகின் மிகச் சிறந்த பாடகர் ராய் ஆர்பிசன் தான் என்று சொன்னார். ராக் இசைக்கலைஞரான புருஸ் ஸ்பிரிங்ஸ்டீனோ தான் ராய் ஆர்பிசனைப் போலப் பாட விரும்புவதாகவும் ஆனால் அவரைப் போல வேறு எவராலும் பாட முடியாது என்று குறிப்பிடுகிறார். பீஜீஸ் இசைக் குழுவின் பேரி கிப்ஸ் ராய் ஆர்பிசன் கடவுளின் குரல் என்று வியந்து சொன்னார். ராய் ஆர்பிசனின் இசை சமகாலக் கலைஞர்கள் பலரையும் ஆழமாக பாதித்திருந்தது.

அவர் பாடும்போது காதலின் வேதனையை, தனிமையை, ரகசிய ஆனந்தத்தை கேட்பவரால் முழுமையாக உணர முடிகிறது. Crying, 'It's Over' போன்ற அவரது பல துயரப் பாடல்கள் காதலில் தோற்றுப் போன இளைஞர்களுக்கு மிகுந்த நெருக்கமானதாக மாறியது. அவரது பாடல்கள் காதலர்களுக்கும் கனவு காண விரும்புகின்றவர்களும் எப்போதும் பிடித்தேயிருந்தது. இதயபூர்வமான அந்தப் பாடும்முறையினால்தான் ராய் ஆர்பிசன் போலப் பாட யாருமில்லை என்ற வழக்குச் சொல் அமெரிக்க பாப் இசை மரபில் உருவானது.

அவரது இசைத்தட்டு ஒன்றின் முகப்புக் குறிப்பை எழுதிய இசை விமர்சகர் “வேறு எவருடைய வேதனைப் பாடல்களும் இத்தனை இனிமையான தாகம் இருப்பதில்லை. ராய் ஆர்பிசன் உடைந்த இதயங்களின் வலியைப் பகிர்ந்து கொள்கின்ற பாடகன். தன் கண்ணீர் கசியும் கண்களை மறைத்த கறுப்புக் கண்ணாடி அணிந்தவராக அவர் தோற்றம் தருகிறார்” என்று குறிப்பிடுகிறார்.
---------------------------------
எல்விஸ் பிரஸ்லி, ஜானி கேஷ், சக் பெரி, லிட்டில் ரிச்சர்ட் மற்றும் ஜெரி லீ லுயிஸ் போலவே ராய் ஆர்பிசனும் 1950-60 காலகட்டத்தில் உருவான ராக் அண்ட் ரோல் இசைப் புரட்சியின் முன்னோடி இசைக்கலைஞன். எல்லா ராக் அண்ட் ரோல் இசைக் கலைஞர்களையும் போல அவரும் துள்ளல் இசைப் பாடல்களையே ஆரம்பத்தில் உருவாக்கிப் பாடிக் கொண்டிருந்தார். ஆனால் விரைவில் அதிலிருந்து விலகி, தனியானதொரு பாணியை அவர் உருவாக்கிக் கொண்டார். தாளம் மிக்க சோகப் பாடல்களின் அந்தப் பாணிதான் அவரை பாப் இசையின் ஓர் உச்ச நட்சத்திரமாக அடையாளம் காணச் செய்தது. துள்ளலான நடனப்பாடல்களிலிருந்து ராய் ஆர்பிசனின் இசை துயரத்தை நோக்கி எப்படி நகர்ந்தது? அவரது இசையின் மையமாக வலி அமைந்ததற்கு எது காரணம்?
---------------------------------
யாரும் அடையாளம் கண்டு கொள்ளாத ஒரு சிறுவன். காண்பவர்களுக்கு அவன் பெரிய காதுகளுடன் மெலிந்து போன உருவமாக, சோடாபுட்டிக் கண்ணாடியும் தேமல் போல வெள்ளை விழுந்த உடலும் கொண்டு, வெள்ளைக் கரப்பான் பூச்சி போலிருந்தான். பள்ளியில் அவனை சகமாணவர்கள் கேலி செய்தார்கள். தொடர்ந்து தொல்லை தந்தார்கள். வீட்டிலும் அவனை யாரும் கண்டுகொள்ளவில்லை. தனக்கு விருப்பமான பொம்மை விமானங்களை எடுத்துக் கொண்டு வெளியே விளையாடப் போவதற்குகூட அவன் பயந்து போயிருந்தான்.
---------------------------------
ஆகவே வீட்டிலிருந்தபடியே பகல் கனவு காண்பதே அவனது இயல்பு. அந்த வயதில் அவனுக்கு ஒரே ஆறுதல் வீட்டில் கவனிப்பாரற்றுக் கிடந்த ஒரு பழைய கிடார். அதிலிருந்தே அவனது இசையார்வம் துவங்கியது. தன்னுடைய வலியைப் பகிர்ந்து கொள்வதற்கு இசையால் மட்டுமே முடியும் என்று அவன் நம்பத் துவங்கினான்.
---------------------------------
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியில் உள்ள விங்க் என்ற இடத்தில் 1936 ஏப்ரல் 23இல் பிறந்த ராய் கெல்டன் ஆர்பிசன் குடும்ப வறுமையின் காரணமாக சிறுவயதிலே எண்ணெய்க் கிணறுகளில் வேலை செய்யத் துவங்கினான். ஆனால் எதற்கும் உதவாதவன் என்று மற்றவர்களால் ஏளனம் செய்யப்பட்ட அவன் தனது ஒன்பதாவது வயதில் உள்ளூர் ரேடியோ நிலையத்தில் பாடினார். இசை ஈடுபாடு கொண்ட நண்பர்களை ஒன்று சேர்த்து ஒரு இசைக்குழுவினை உருவாக்கி பகலிரவாகப் பாடுவதும் இசைப்பதுமாக இருந்தான். பின்னர் கல்லூரிப் படிப்பைப் பாதியில் முடித்துக் கொண்டு முழுநேர இசைக்கலைஞனாக முடிவு செய்து கொண்டான். அன்று அமெரிக்க பாப் இசையின் தலைநகரமாக இருந்த மெம்பிஸிக்குக் (Memphis) குடியேறினான்.
---------------------------------
தோற்றப்பொலிவு அற்ற உருவமும் பார்வைக் குறைபாடும் பயந்த சுபாவமும் கொண்ட அவரை இசைத் துறையிலும் முதலில் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஒதுங்கியே இருந்த அவருக்கு முதல் படியாக அமைந்தது சன் ரிக்காட்ஸ் இசைவெளியீட்டகத்தில் இசையமைப்பாளராகப் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பே. அங்கே அமெரிக்க பாப் இசையின் பிரதான பாடகர்களான எல்விஸ் பிரிஸ்லி, ஜானி கேஷ் போன்றவர்கள் பாடல்களைப் பதிவு செய்து கொண்டிருந்தார்கள்.
---------------------------------
பாடகனாகவேண்டும் என்ற எண்ணத்துடன் சில ஒற்றைப் பாடல்களை ராயும் வெளியிட்டார் ஆனால் பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. ‘ஊபி டூபி’ (Ooby Dooby) என்ற துள்ளலான பாடல் 1957இல் வெளியாகி ஓரளவு கவனம் பெற்ற போதிலும் அவரது தோற்றத்தால் மற்றவர்கள் போல மேடையேறி ரசிகர்களை வசீகரிக்க அவரால் முடியாது என்று சன் ரிக்காட்ஸ் அதிபர்கள் அவரை ஒதுக்கினார்கள். தன்னுடைய திறமை சன் ரிக்காட்ஸ் ஒலிப்பதிவுக் கூடத்திற்குள்ளாகவே முடங்கிப் போய்விடக்கூடும் என்று பயந்த ராய் ஆர்பிசன் ஆழமான மனச்சோர்வுக்கு உள்ளானார்.
---------------------------------
1957இல் டெக்ஸாஸ் திரும்பி கிளாடே (Claudette) என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். கையில் காசில்லாத நிலையில் கல்யாணம் செய்து கொண்டது அவரை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. அவரது வாழ்க்கையின் மிகச் சிரமமான காலம் அது. தன்னால் தனித்து வெற்றிபெற முடியாது என்று நினைத்து மற்றவர்களுக்காகப் பாடல்கள் எழுதி இசையமைப்புச் செய்து தர முன்வந்தார். வாரன் ஸ்மித், ஜெரீ லீ லூயிஸ், ஜானி கேஷ் போன்றவர்களுக்காக வெற்றிப் பாடல்களை அமைக்க அவரால் முடிந்தது. எவர்லி சகோதரர்கள் என்ற இசைக்குழுவுக்குப் பெரியப் பெயரை பெற்றுத் தந்த 'Claudette' என்ற பாடல் தானே பாடவேண்டுமென்று ஆசைப்பட்டு ராய் தன் மனைவிக்கு எழுதிய காதல்வரிகளே.
---------------------------------
பாடகனாக வேண்டும் என்ற விடா முயற்சியில் அவர் சன் ரிக் கார்ட்ஸிலிருந்து விலகி மற்ற இசை நிறுவனங்களுடன் பணியாற்ற ஆரம்பித்தார். ஆனால் அங்கும் அவர் எதிர்பார்த்த அங்கீகாரமோ வெற்றியோ கிடைக்கவில்லை. கடைசியில் Up-town என்ற பாடலின் வழியாக ஒரு பாடகனுக்குத் தேவையான முதல் வெற்றி அவருக்கு வந்து சேர்ந்தது. சிறந்த நூறு பாடல்களின் வரிசையில் அந்தப் பாடல் இடம்பிடித்தது.
---------------------------------
பாடகராக அவர் அடைந்த இந்த வெற்றி அவரை அடுத்த உயரங்களை நோக்கி அழைத்துச் செல்லத் துவங்கியது. 1961 முதல் 1964 வரையான காலகட்டத்தில் அவரது இசை புதிய இசைப்புலங்களை உருவாக்கி பெரும் வெற்றிகளை அடைந்தது. 'Running Scared', 'Crying', 'Dream Baby', 'In Dreams', 'Oh, Pretty Woman' என அவரது வெற்றிப்பாடல்கள் வரிசையாக வெளிவந்தபடியே இருந்தது. 1963இல் பீட்டில்ஸ் இசைக் குழுவினர்களுடன் இணைந்து பிரிட்டனில் இசைப்பயணம்செய்த ராய் ஆர்பிசனுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய இசையுலகில் ஒரு உச்ச நட்சத்திரமாக அவர் மாறினார்.
---------------------------------
அவரது தடித்த மூக்குக் கண்ணாடி ஒரு சிறப்பு அடையாளமாக உருக் கொண்டது. கறுப்பு உடையும் கறுப்புக் கண்ணாடியும் அணிந்த அவரது தோற்றம் உலகெங்கும் பிரபலமானது. ஒருவர் வெற்றி பெற்று விட்டால் முதலில் அவரது குறைபாடுகளாகக் கேலி செய்யப்பட்டவை அனைத்தும் அவரது ஸ்டைலின் அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டு விடும் என்பது ராய் ஆர்பிசன் விஷயத்திலும் உண்மையானது.

தன் மனைவி கிளாடியின் மீதான ஆழமான காதலில் Claudette என்ற பாடலை உருவாக்கி அதில் “சின்னஞ் சிறு அழகி கிளாடி, நான் சந்தித்த பெண்களிலே நீ தான் நிகரற்றவள், உனது தூய அன்பு எப்போதும் எனக்குரியது, என் வாழ்க்கை முழுவதற்கும் நீயென்ற சந்தோஷமே போதும்” என்று உற்சாகமாகப் பாடிய, பாப் இசையின் உச்ச நட்சத்திரமாக வெற்றிபெற்ற ராயின் வாழ்க்கையில் உண்மையான சந்தோஷத்தை அவர் கண்டடைந்தாரா?

பணம் நிறைய வரத்துவங்கியதும் நாஷ்வில் என்ற ஊரில் கனவு மாளிகை ஒன்றைக் கட்ட முன்வந்தார் ராயும் அவரது மனைவியும். அந்த நாட்களில் அழகான இளம்மனைவியைப் பிரிந்து தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்தார் ராய். தனிமையும் மோகமும் கொண்ட ராயின் மனைவி புதிய வீட்டினைக் கட்டித் தர வந்த ஒப்பந்தக்காரனுடன் கள்ள உறவு கொள்ள ஆரம்பித்தாள். ஒருநாள் படுக்கையிலிருந்த அவர்களை கையும் களவுமாக ராய் ஆர்பிசனே பிடித்துவிட்டார்.

மனைவியின் நம்பிக்கை துரோகம் தீவிர மனவலியை உருவாக்கியது. அவளிடம் மணவிலக்கு பெற நீதிமன்றம் சென்றார். அவர்களுக்குள் விவாகரத்து நடைபெற்றது. ஆனால் சில மாதங்களிலே தான் உடலிச்சையால் தவறு செய்துவிட்டதாகக் கதறி அழுது தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்படியாக மனைவி அவரிடம் வந்து மன்றாடவே எல்லாவற்றையும் மன்னித்து அவளை மறுபடியும் திருமணம் செய்து கொண்டார் ராய். கிளாடியோடு தான் எப்போதுமே ஓர் உன்மத்தமான காதலில் இருந்ததாக அவர் பின்னர் சொல்லியிருக்கிறார்.

மோட்டார் சைக்கிளில் சுற்றுவது ராய்க்குப் பிடித்தமான பொழுது போக்கு. அப்படியொரு முறை இங்கிலாந்தில் மோட்டார் சைக்கிளில் சுற்றிய போது விபத்து ஏற்பட்டு சாவை நெருங்கி, தப்பித்தார். அதன் மூன்று மாதங்களுக்குப் பிறகு நாஷ்வில்லில் மனைவியோடு பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்த அவர் மோட்டார் சைக்கிளில் பெரிய டிரக் ஒன்று மோதி மோசமான விபத்து ஏற்பட்டது. ராய் தூக்கிவீசப்பட்டு சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் கிளாடி டிரக் சக்கரத்துக்குக் கீழ் நசுங்கி அங்கேயே உயிர் துறந்தாள். அப்போது அவளுக்கு வயது 25.

ராய், டோனி, வெஸ்லி என்று அவர்களுக்கு மூன்று குழந்தைகள். மூத்த மகனுக்கு வெறும் ஆறு வயது. மனைவி இறந்த துயரிலிருந்து விடுபட முடியாமல் ஒரு ஆண்டுக் காலம் ஒதுங்கியே இருந்தார் ராய். மனவேதனையிலிருந்து விடுவித்துக் கொள்ள மறுபடியும் இசையே அவருக்கு உதவி செய்தது. 'The Fastest Guitar Alive' என்ற படத்தில் பாடகராகத் தோன்றி நடித்து தன் இசைப்பயணத்தை மீண்டும் தொடங்கினார்.

1968இல் இங்கிலாந்தில் மேடை நிகழ்ச்சிகளுக்காகப் பயணம் செய்து கொண்டிருந்த போது அவரது குழந்தைகளான ராயும் டோனியும் அவரது வீட்டில் ஏற்பட்ட ஒரு கோரமான தீ விபத்தில் கருகி உயிரிழந்தார்கள். மூன்று வயதான கடைசி மகன் வெஸ்லி ராயின் பெற்றோர்களால் காப்பாற்றப்பட்டான்.

அவரது இசையின் மையமாக இருந்த துயரம் முற்றிலும் அவர் வாழ்க்கையைப் பற்றிக் கொண்டது. காதல் மனைவியின் சாவும் பிள்ளைகளைத் தீயில் பறிகொடுத்ததும் அவரை போதை மருந்திற்கு அடிமையாக்கியது. அப்படியும் அந்தக் கோர மரணங்களின் நினைவுகளிலிருந்து அவரால் தப்ப முடியவில்லை. ஆனால் மறுபடியும் இசையை மட்டும் துணையாகக் கொண்டு அவர் முன்நகர்ந்தார்.
---------------------------------
பிரிட்டனில் இசைப்பயணம் மேற்கொண்ட போது சந்தித்த பார் பரா என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். அவர்களது புதிய வாழ்க்கை துவங்குவதற்காக எரிந்து போன வீட்டின் அருகாமையில் புது வீடு ஒன்று கட்டப்பட்டது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். மூத்தவனுக்கு இறந்து போன மகனின் பெயரான ராய் என்பதையே சூட்டினார். இளையவனின் பெயர் ஆர்பி.

தீவிபத்தில் தப்பிப் பிழைத்த வெஸ்லி பின்னர் தன்னுடைய அப்பாவை வெறுக்கத் துவங்கினான் என்று சொல்லப்படுகிறது. அவன் அவரைச் சந்திக்க விரும்பவேயில்லை. அவனை சமாதானப்படுத்த ராய் ஆர்பிசன் எவ்வளவோ முயன்றும் அவரோடு சேர்ந்து வாழ வெஸ்லி மறுத்துவிட்டான்.
கடந்த காலத்தின் நினைவுகளை ராயின் மனதிலிருந்து அழித்துவிடுவதற்காகவே பார்பரா அவரை அங்கிருந்து அழைத்துக் கொண்டு வெகு தொலைவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்குச் சென்றாள். ஆனால் தொலைவு அவரது நினைவுகளை அழிக்கவில்லை. மாறாக இறந்து போன மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எப்போதும் அழுது கொண்டேயிருக்கும் மனிதனாகவே அவரிருந்தார். தனிமையில் அவரது கண்கள் எப்போதும் கசிந்தேயிருந்தன. தான் இறந்து போனால் தன்னை தன் பிள்ளைகளின் கல்லறைகளுக்கு அருகில் புதைத்து விடும்படியாக அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.

இசையை விட்டு ஒதுங்கிய காரணத்தால் இக்காலகட்டத்தில் அவரது புகழ் அமெரிக்காவில் சரியத் துவங்கியது. அத்துடன் புதிய இசையான டிஸ்கோவின் வரவு பழைய பாடகர்களை ஓரங்கட்டச் செய்தது. பழைய பாடகர் என்று அவரை அடையாளம் காட்டுபவர்களுடன் இணைந்து செயல்பட அவ ர் மறுத்தார். ஆனால் ஐந்தாண்டுக் காலம் அவர் புதிய இசைத்தொகுப்பு எதையும் வெளியிடாத போதிலும் ஐரோப்பாவிலும் பிரிட்டனிலும் அவரது புகழ் அப்படியே இருந்தது.

1970களின் கடைசியில் அவரது இசை மீண்டும் முக்கியத்துவம் அடைந்தது. மீண்டும் மிக வெற்றிகரமான ஓர் இசைப்பயணத்தைத் துவக்கினார். அது மிகத் தீவிரமானதாக இருந்தது. தொடர்ச்சியான இசை நிகழ்ச்சிகளின் காரணமாக ஓய்வில்லாமல் இருந்ததால் உடல் நலம் பாதிக்கபட்டு தனது 41 வயதில் அவர் இதய அறுவை சிகிட்சை மேற்கொண்டார்.

சிகிட்சைக்குப் பிறகு புதிய மனிதனாக வந்த ராயின் இசை வாழ்க்கை வெற்றியின் அடுத்த தளங்களுக்கு உயரத் துவங்கியது. பத்தாண்டு காலம் திரும்பவும் அவர் நிகரற்ற ஓர் இசை நட்சத்திரமாக விளங்கினார். 1981இல் அவர் நியூயார்க்கில் நிகழ்த்திய இசைநிகழ்ச்சி வசூலை வாரிக் குவித்தது.
மீண்டும் சன் ரிக்காட்ஸ்- உடன் இணைந்து செயல்படத் துவங்கினார். டேவிட் லிஞ்ச் அவரது ப்ளு வெல்வெட் படத்தில் 'In Dreams' என்ற ராயின் பாடலைப் பயன்படுத்தினார். அது ராயின் இசை வெற்றிக்கு சிகரமாக அமைந்தது. அதன்பிறகு 1987இல் அவர் தனது புகழ்பெற்ற பல பாடல்களை மறு ஆக்கம் செய்து வெளியிட்டார். அதுவும் உச்ச வெற்றியைப் பெற்றது.
தொலைக்காட்சியில் அவரது பாடல்களுக்கென்றே தனியான நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டன. பல பிரபல சமகால இசைக்கலைஞர்களுடன் இணைந்து அவர் செயல்பட்டார். Pretty Woman போன்ற பாடல்களின் மறு ஆக்கங்கள் உலகம் முழுதும் சமகாலப் பாடல்களைவிட வெற்றி பெற்றது.

1988 இல் Mystery Girl என்ற ஒரு புது ஆல்பத்துக்காகப் பல மாதங்கள் ஓய்வில்லாமல் பணியாற்றினார் ராய் ஆர்பிசன். அதை வெளியிடுவதற்கு முன் சற்றே ஓய்வு கொள்ள விரும்பி நாஷ்வில்லில் தன் பழைய வீட்டுக்குத் திரும்பினார். அங்கே சிறுவயதிலிருந்து தனக்குப் பிடித்தமான பொம்மை விமானங்களை வாங்கி விளையாடினார். நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்றிருந்த ராய் ஆர்பிசன் எதிர்பாராமல் அங்கே மயங்கி விழுந்து மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 52.

ஆர்பிசனின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் இப்படிக் கூறினார்: “ஆர்பிசனின் மனைவி மற்றும் பிள்ளைகளின் கல்லறைகளை கஷ்டப்பட்டுத் தேடியலைந்துதான் கண்டுபிடித்தேன். பல ஆண்டுக்காலமாக யாருமே வராமல் அவை புதர்கள் மண்டிக்கிடந்தன. ராயின் மனைவியின் காலடியிலே இரண்டு குழந்தைகளும் புதைக்கப்பட்டிருந்தார்கள்”. ஆனால் ராய் விரும்பியது போல அவரது உடல் தன் குழந்தைகளுடன் புதைக்கப்படவில்லை.
---------------------------------
மரணத்துக்குப் பின்னும் அவர் விரும்பியது போல் எதுவும் நடக்கவில்லை.
அவரது இரண்டாம் மனைவி அவர் உடலை லாஸ் ஏஞ்சல்ஸிக்கு எடுத்துப் போய் அங்கே புதைத்தார். ‘வாழ்நாள் முழுவதும் தன் இதயத்தின் நீங்காத துயரைப் பாடலாக்கிய ஒரு இசைக்கலைஞன் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறான்’ என்ற வாசகம் ராய் ஆர்பிசனின் கல்லறைக்குப் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் அவரது கல்லறையில் ஒரு பெயர்ப் பலகைகூட வைக்கப்படவில்லை. துயரமான அவரது வாழ்க்கையின் சாட்சியாக ‘அழுது கொண்டிருக்கிறேன்’ என்ற பாடல் மட்டும் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.