20100405

ஏ ஆர் ரஹ்மான் : விண்ணைத்தாண்டி வரும் ஸ்லம்டாக் மில்லியனர்

கடந்த வாரம், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இசை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக முன்னணி தமிழ் தொலைக்காட்சியிலிருந்து அழைப்பு வந்தது. அதுவரை அப்படத்தின் பாடல்களைக் கேட்டிருக்கவில்லை என்றேன். பாடல்களின் குறுந்தகடும், படம் பார்ப்பதற்கான அனுமதிச்சீட்டும் ஏற்பாடு செய்வதாகச் சொன்னார்கள். கௌதம் மேனனின் முந்தைய படங்கள் தந்த அனுபவத்திலிருந்து இப்படத்தைப் பார்ப்பதற்கான எண்ணம் தோன்றவில்லை. மேலும் சிம்பு என்ற நடிகன் மீதோ அவரது நடிப்பின் மீதோ எனக்கு எந்த ஈடுபாடும் இல்லை. படத்தைப் பார்ப்பதிலிருந்து தவிர்த்துக்கொண்டாலும் பாடல்களைக்கேட்டுவிட்டு நிகழ்ச்சியில் பங்குபெறுவதாக ஒப்புக்கொண்டேன். ஆனால் பாடல்களைக் கேட்டபின்னர் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்து விட்டேன்.

படத்தைப் பார்த்து அதன் பின்னணி இசையை கவனித்திருந்தால் அது என்னை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்குபெற வைத்திருக்கும் என தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொன்னார்கள். பின்னணி இசையைப் பொருத்தவரையில் சிறப்பான இசை ஆக்கங்களை தனது பல படங்களிலும் ரஹ்மான் வழங்கியதில்லை என்றபோதிலும் அவரால் சிறந்த பின்னணி இசையை உருவாக்கமுடியும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அவருடைய எல்லா பின்னணி இசையாக்கங்களிலும் பல சிறந்த இசைத்துணுக்குகளை நாம் கேட்கமுடியும். ஆனால் அவற்றில் அனைத்துவகையிலும் மிகச்சிறந்தவை என்று சொல்லக்கூடியவை குறைவே.

சரியான திரைக்கதையும் இணக்கமான அணியும் போதுமான நேரமும் அமைந்தபோது சிறப்பான பின்னணி இசையை ரஹ்மான் வழங்கியிருக்கிறார். ரங்க்தே பசந்தி, லகான், பம்பாய், யுவா, டெல்லி 6 போன்ற படங்கள் உதாரணம். அற்புதமான பின்னணி இசையைத் தான் அவற்றில் வழங்கியிருக்கிறார் ரஹ்மான். ஆனால் இதே போன்றதொரு நிறைவான புகழ்ச்சியை ஆஸ்கர் மற்றும் கிராமி விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இசைக்கு சொல்ல இயலாது.

ஒரு படத்தின் பின்னணி இசை பற்றி சிபாரிசுகளை ஏற்றுக்கொள்வதில் எனக்கென சில வரையறைகள் உண்டு. பெரும்பாலானவர்கள் ஒரு படத்தில் ஒரு சில இனிமையான இசைத்துணுக்குககளைக் கேட்டதும் அது சிறந்த பின்னணி இசை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். என்னைப்பொறுத்தவரை அப்படியல்ல. காட்சியமைப்பைவிட அதிகமாக பின்னணி இசை தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தால் அதுவும் குறைபாடானதேயாகும். பின்னணி இசை என்பது பின்னணியில் தான் இருக்க வேண்டும். காட்சியின் மொத்த உணர்வையும் வலுவாக்கக் கூடியதாகவே இருக்கவேண்டும். தனிப்பட்ட முறையில் அந்த இசைத்துணுக்கின் இனிமையையும் தீவிரத்தையும் உணர்த்தாத நிலையில் அமைந்திருக்கவேண்டும்.

ஒரு படத்தின் பின்னணி இசையானது எப்போதும் இனிமையாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை. இரைச்சலாய் ஒலிக்கக்கூடிய ஒரு இசைத் துணுக்கு கூட படத்தின் காட்சிக்கு மெருகேற்றுவதாக இருந்தால் அதுவே சிறந்த பின்னணி இசையாகும். இதற்கு சிறந்த உதாரணமாக புகழ்பெற்ற இயக்குனர் ஆல்பிரட் ஹிட்ச்சாக் இயக்கி, பெர்னார்ட் ஹெர்மன் இசையமைத்திருந்த 'சைக்கோ' படத்தில் வரும் குளியலறைக் காட்சியை சொல்லலாம். கிறீச்சிட்டு ஒலிக்கும் வயலின் இசைதான் அக்காட்சியின் பின்னணி இசை. பொதுவாக வயலின் அவ்வாறு இசைக்கப்படுவது ஏற்றுக்கொள்ளப்படாததாக இருந்தாலும் அக்காட்சியில் இசை அவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது இன்றளவும் மிகச்சிறந்த பின்னணி இசையாக கருதப்படுகிறது.

பின்னணி இசையமைப்பைப் பற்றி ரஹ்மான் ஒரு நேர்காணலில் சொல்லியிருந்த சுவாரசியமான ஒரு விஷயத்தை வாசிக்க நேர்ந்தது. "ஒரு பாடலை உருவாக்குவதற்கு தேவைப்படும் படைப்பாற்றலைவிட பத்துமடங்கு அதிகமான ஆற்றல் பின்னணி இசையமைக்கத் தேவைப்படும். ஒரு படத்தின் பின்னணி இசையமைப்பிற்கு செலவிடும் நேரத்தில் நான்கு படங்களுக்கான பாடல்களை உருவாக்கிவிடலாம். இந்திய சினிமாக்களில் பாடல்களும் பின்னணி இசையும் ஒரே இசையமைப்பாளரால் உருவாக்கப்படுகிறது என்பதை அறிந்து மேற்கில் பலர் வியப்படைகிறார்கள். இந்தி திரை இசை மேதை நௌஷாத் தொடங்கி இங்கு இளையராஜா வரை பல இசையமைப்பாளர்கள் ஒரு படத்தின் இசைசார்ந்த அனைத்தையும் செய்யும் மரபை ஒரு சினிமா இசைக் கலாச்சாரமாகவே கொண்டிருக்கிறார்கள்" என்று சொல்லியிருந்தார்.

பொருத்தமான பின்னணி இசையை உருவாக்குவது உண்மையிலே கடினமானதுதான். ஆனால் அதை ஒருபோதும் சிறந்த முறையில் உருவாக்காத நௌஷாத் தலைசிறந்த பின்னணி இசையமைப்பாளர் என்று ரஹ்மான் கருதுவது ஆச்சரியமாக இருக்கிறது. நௌஷாதின் பெரும்பாலான பாடல்களைப்போலவே அவரது பின்னணி இசைக் கோர்வைகளும் அசுவாரசியமானதாகவே இருக்கும். இந்திப் படங்களுக்கு புதியதொரு கோணத்தில் பின்னணி இசையை வழங்கி காட்சிகளின் காணனுபவத்தையும், கேளனுபவத்தையும் வேறொரு தளத்துக்கு நகர்த்தியவர்களில் முதலிடத்தில் இருப்பது சலில் சௌதுரி மட்டுமே.

முதன் முதலாக ஒரு இந்திய திரைப் படத்தின் பின்னணி இசைத்தொகுப்பு இசைத்தட்டாக வெளியிடப்பட்ட பெருமை சலில் சௌதுரிக்கே சேரும். 1978ல் அவர் பின்னணிஇசையமைத்த 'காலா பத்தர்' படத்திலமைந்த அற்புதமான இசைத்துணுக்குகளை மக்கள் தனித்துக் கேட்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வெளியிட்டார்கள். ஏனெனில் அந்த பின்னணி இசை படத்தில் துருத்திக் கொண்டு கேட்பதில்லை. அந்த அர்புதமான இசை கேட்கப்படாமல் போகக் கூடாது என்ற எண்ணத்துடன் தான் அப்படத்தின் பின்னணி இசையையும் வெளியிட்டிருந்தார்கள்.
அப்படத்தின் பாடல்கள் சலில்தாவால் உருவாக்கப்பட்டதல்ல. மற்றொரு இசையமைப்பாளரான ராஜேஷ் ரோஷனால் அமைக்கப்பட்டதாகும். ஏராளமான ஹிந்தி, வங்கம் மற்றும் பல மொழிப்படங்களுக்கு பின்னணி இசையை மட்டும் சலில் சௌதுரி உருவாக்கியிருக்கிறார். காட்சியமைப்புக்கு ஏற்றவாறு இயல்பான பின்னணி இசையை வழங்குவதில் அவருக்கு சிறப்பான இடம் உண்டு. கானூன், இத்தெஃபாக், மதுமதி போன்ற படங்களுக்கு சலில்தா அமைத்திருந்த பின்னணி இசை இன்றுவரையிலும் மிகச்சிறந்த இசைப்படைப்பாக எஞ்சி நிற்கிறது. இளையராஜா மற்றும் இயக்குநர் சத்யஜித்ரே போன்ற மேதைகளும் அவரது உணர்வுபூர்வமான பின்னணி இசையின் மூலம் படத்தின் காட்சிப் பரிமாணங்களை பெருகச் செய்தவர்களாவர்.

"ஒரு நல்ல சினிமாவை அழிப்பதற்கான இலகுவான வழி என்னவென்றால் அதற்கு பொருத்தமில்லாத பின்னணி இசையை அமைப்பதுதான்" என்று சத்யஜித்ரே தனது 'திரைப் ப்டங்களின் பின்னணி இசை' (Backround Music in Films) எனும் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். பதேர் பாஞ்சாலி படத்தின் பல காட்சிகளில் சிதார் மற்றும் புல்லாங்குழலிசையை அவர் அமைத்திருக்கும் விதம் பின்னணி இசை எவ்வாறு அடிநாதமாகவும், காட்சிக்கு இணக்கமானதாகவும் இருக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்தும்.

ஹாலிவுட் சினிமாவின் தலைசிறந்த இசையமைப்பாளரான பெரும் புகழ்பெற்ற ஜான் வில்லியம்ஸ் ஒரு பேட்டியில், "இசையமைப்பாளர்களின் பிரதான நோக்கம் காட்சிக்கு இணக்கமானதாக இசையை அமைப்பதுதான், ஆனாலும் அப்படத்தின் மைய இசையோ அதில் வரும் ஏதேனும் ஒரு இசைத்துணுக்கோ உயிரோட்டமானதாக தனித்து வெளிப்படுமென்றால் அது இசையமைத்தவருக்கான போனஸ் என்றே கருதவேண்டும்" என்று குறிப்பிடுகிறார். ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், ஸ்டார் வார்ஸ், ஜாஸ், ரைடர்ஸ் ஆஃப் த லாஸ்ட் ஆர்க் போன்ற தனது புகழ்பெற்ற படங்களில் இதை நிரூபித்த்ருக்கிறார் ஜான் வில்லியம்ஸ்.

ரஹ்மான் புகழ்பெற்ற சர்வதேச இசை விருதுகளை எல்லாம் நமது மண்ணுக்கு கொண்டுவருவது நாம் எல்லோருக்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடியது தான். ஆனால் அவருடைய முந்தைய படங்களான திருடா திருடா, கிழக்குச்சீமையிலே, பம்பாய், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், டூயட், ரங்கீலா, லவ்பேர்ட்ஸ், அலைபாயுதே போன்றவற்றில் எல்லாம் மிகச்சிறந்த பாடல்கள் அமைந்திருந்தது. சமீபத்திய இசையமைப்பில் வெளிவந்த ரங்க் தே பஸந்தி, மற்றும் டெல்லி 6 பாடல்கள் இசையுலகத்தின் எந்த விருதையும் பெற தகுதியானவையே. நான் சமீபத்தில் கேட்ட மிகச்சிறந்த இந்திய திரைப்பட இசைத்தட்டும் டெல்லி 6 தான். அற்புதமான பாடல்களும் ஒப்பிலாத ஒலியமைப்பும் கொண்டிருக்கிறது அது.

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இசையைப் பற்றி எழுதியபோது தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன், அது ரஹ்மானுடைய சிறந்த இசையமைப்பில் ஒன்றல்ல என்று. ஆஸ்கர் விருதுக்கான தேர்வில் ஸ்லம்டாக் உடன் போட்டியிட்ட மற்ற திரைப்படங்களின் இசையை கவனித்துக் கேட்டால் நாம் வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளலாம். பிரான்சைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரே டெஸ்ப்லாட் இசையமைத்திருந்த The Curious case of Benjamin Button படத்தின் இசையானது உள்ளார்ந்ததாகவும் மனதை வருடுவதாகவும் இருந்தது. துரதிருஷ்டவசமாக மூன்று முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டும் அவர் விருது பெற்றதில்லை.

இன்னொரு போட்டிப் படமான Defiance க்கு அமெரிக்க இசையமைப்பாளர் ஜேம்ஸ் நியூட்டன் ஹோவர்ட் இசையமைத்திருந்த விதத்தில் நாம் அந்த இசையை முதலில் உணரவே முடியாது. ஆனாலும் மறைபொருளாக இயங்கும் இசை அப்படத்தை வெவ்வேறு விதமான உணர்ச்சி நிலைகளுக்கு எடுத்துச் செல்கிறது. அவருக்கும் ஏழு முறை பரிந்துரைக்கப்பட்டும் ஒருமுறைகூட ஆஸ்கர் கிடைக்கவில்லை.

மற்றுமொரு மகத்தான அமெரிக்க இசையமைப்பாளர் டேனி எல்ஃப்மன் நான்கு முறை போட்டிப்பட்டியலில் இருந்தும் ஆஸ்கர் கிடைக்கப்பெறாதவரே. அவருடைய முந்தைய படங்களான சிகாகோ, பேட்மேன், இன்ஸ்டிங்க்ட், ஸ்பைடர்மேன் அல்லது ஸ்லம்டாக் படத்திடம் விருதை இழந்த மில்க் படத்தின் இசையமைப்பைக் கேட்டுப்பாருங்கள். இசையை மறைவானதொரு உரையாடலைப்போல் நிகழ்த்திக்காட்டும் அற்புதமான ஒரு இசையமைப்பாளர் தாமஸ் நியூமேன். இவரும் ஸ்லம்டாக் படத்திடம் வெற்றியை நழுவவிட்டவர். தனித்துவமான பாணியில் இசையமைக்கும் இவரது இரண்டு மூன்று படங்களைப்பார்த்தீர்களானால் அவரது இசையின் தனித்தன்மையை இலகுவாக உங்களால் அறிந்து கொள்ள இயலும். ஷாஷாங்க் ரிடெம்ப்ஷன், அமெரிக்கன் பியூட்டி, ஃபைண்டிங்க் நீமோ, மீட் ஜோ ப்ளாக் போன்ற படங்களாகட்டும், ஸ்லம்டாகிடம் விருதை இழந்த வால்-இ ஆகட்டும். இப்படங்களைக் காணநேர்ந்தால் நான் சொல்ல விழைவது என்னவென்று உங்களுக்குத் தெரியவரும்.

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இசையமைப்பு அதனிடம் தோல்வியடைந்த மேற்சொன்ன படங்களின் இசையைமைப்பை விட மிகச்சிறப்பானதொன்றும் இல்லை. அதை ரஹ்மானுக்கும் நன்றாகத் தெரியும் என்பது தான் என் எண்ணம். ஸ்லம்டாகின் வெகுவாக விரும்பப்பட்ட 'ஜெய்ஹோ' தற்கால மேற்கத்திய இசை ரசிகர்களுக்கு முற்றிலும் சுவாரசியமான சப்தமாக இருக்கலாம். இதன் காரணம் அதன் பிரதான இசைக்கூறானது மொசார்ட்டின் மாபெரும் புகழ்பெற்ற 40 ஆவது சிம்பொனியை ஒத்ததாக இருப்பதாலும் இருக்கலாம். இப்போது உலகெங்கும் வெகுஜென மத்தியில் கொண்டாடப்படும் ஜெய்ஹோ பாடல் அதற்கு அளிக்கப்படும் புகழுக்கும் வரவேற்பிற்கும் தகுதியான ஆகச்சிறந்த படைப்பல்ல என்பது தான் உண்மை. ஆனால் இதுவே தற்போது உலகெங்கிலும் நிலவும் ஒரு போக்கு என்றே எனக்குப் படுகிறது. இலகுவாக முணுமுணுக்கக் கூடிய, துள்ளிசை கொண்ட பாடல்கள் மட்டும் தான் இன்றைய உலகில் எளிதில் பிரபலம் அடைகிறது.

ரஹ்மானுடைய நுணுக்கமான ஒலிக்கோர்வை ஒழுங்குபடுத்துதலும், தற்கால இந்திய-மேற்கத்திய இசைக் கலவையான பாடல்களும், சப்தங்களால் கவனம் கவரும் உத்தியாக பயன்படுத்தப்பட்ட ஒரு தமிழ்ப்பாடலும், ஆங்கிலப்பாடல்களில் சில இந்தி வார்த்தைகளுமெல்லாம் இடம்பெற்றிருந்தும் அவரது அடுத்த ஹாலிவுட் படமான Couples Retreat எந்தவொரு அலையையும் ஏற்படுத்தவில்லை. ஸ்லம்டாக் படத்தின் ஒரு சதவிகித அளவுக்கு கூட வணிகரீதியாக விளம்பரப்படுத்தப் படாதது தான் இந்த படத்துக்கு வரவேற்பு இல்லாமல் போனதற்கு காரணமாகவும் இருக்கலாம்.

நான் ஏன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதற்கு வருகிறேன். ரஹ்மானின் இரண்டு வருட சர்வதேச புகழுக்குப் பிறகு சொந்த மொழியில் வெளிவரும் அவரது முதல் இசைத்தொகை இது. சர்வதேச பாணியில் வெளியீட்டுவிழாவும், மேடையுமாக லண்டனில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் இசைத்தகடும் இதுதான். பாடல்களின் ஒலிவடிவமைப்பும் பதிவின் தரமும் சர்வதேச ஆல்பங்களின் தரத்துக்கு சற்றும் குறைந்ததல்ல. ஆனால் ரஹ்மானுடைய இசையமைப்பு என்ற வகையில் இப்படத்தின் பல பாடல்கள் எனக்கு ஏமாற்றத்தையே தந்தன.

இதில் வரும் 'ஒசானா' என்ற பாடல் தற்காலத்தைய போக்கைச் சேர்ந்து ஒரு அற்புதமான பாடலை உருவாக்கும் முயர்சி. ஆனால் இதுமட்டுமே இந்த ஆல்பத்தின் ஒரே சிறந்த பாடல். 'ஓமனப் பெண்ணே' பாடலில் ரஹ்மானுடைய படைப்பூக்கத்தின் பல தடங்கள் இருக்கின்றது. ஆயினும் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பாடல் என்றும் சொல்லிவிட இயலாது. பாடலின் இடையே வரும் மலையாள வரிகளும் அபத்தமாக ஒலிக்கின்றன. 'அன்பில் அவன்' எனத்தொடங்கும் பாடல் எல்லா வகையிலும் பரிதாபமாக இருக்கிறது. சுருக்கமாக முடியும் இசை பகுதிகளுடன் நீண்ட பாடல்வரிகள் ஒத்துப்போகவே இல்லை. விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மையப் பாடல் சிறுபிள்ளைத்தனமானதாக இருக்கிறது. ரஹ்மான் பாடியிருக்கும் மன்னிப்பாயா என்ற பாடல் குழப்பமான கட்டமைப்பில் அமைந்திருக்கிறது. ஆரோமலே என்ற பாடலை பிடித்திருக்கிறதாக பலர் என்னிடம் சொன்னார்கள். புளூஸ் இசையை அடிப்படயாகக் கொண்ட இது போன்ற பாடல்களை அதிகம் கேட்டிருப்பதால் என்னை இந்த பாடலும் பெருமளவில் கவரவில்லை.

ரஹ்மானிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் இசையின் சாத்தியங்களுக்கு உட்பட்டதாயில்லை இந்த இசைத்தொகை. 'ஒசானா' என்ற பாடலைத் தவிர கொண்டாடப்பட வேண்டிய எந்தப்பாடல்களும் இந்த ஆல்பத்தில் இல்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சொன்னேன். நான் இந்நிகழ்ச்சியில் பங்குகொள்வது இப்பாடல்களை சிறந்தவை என்று நியாயப்படுத்துவதாக ஆகிவிடக்கூடாது. என்னவென்றால் ஸ்லம்டாக் மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் இடம்பெற்ற இசையை விட மிகச்சிறந்த இசையை உருவாக்கும் மேதமை ரஹ்மானுக்கு உண்டு என்பதுதான் எனது நம்பிக்கை.
தமிழில் : முபாரக்