20100503

அங்காடித் தெரு - விற்கத் தெரியாதவனின் வாழ்க்கை by பிரபு ராஜ்

நம் நாடு மின்னல் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்று அடிக்கடி சொல்லுவான் நண்பன் ஒருவன். மிக உயர்ந்த கண்ணாடிக்கட்டிடங்களும் வணிக வளாகங்களும் நகரங்களின் பளபளப்பும் தான் அவன் வளர்ச்சிக்கான அளவுகோலாக வைத்திருந்தான். இதெல்லாம் உண்மையான வளர்ச்சியில்லை என்று அவனிடம் வாதாடிப்பார்த்தும் அது எடுபடவில்லை. நானும் அவனும் மற்றும் சில நண்பர்களும் சேர்ந்து தான் அங்காடித் தெரு படம் பார்க்க சென்றோம். இடைவேளையில் அவன் என்னிடம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. படம் முடிந்தும் அமைதியாகவே வந்தான். நள்ளிரவில் என்னை அழைத்து படம் தன்னை தூங்க விடாமல் செய்வதாக சொன்னான். இதெல்லாம் உண்மையாகவே நடக்கிறதா என்று என்னை திரும்ப திரும்ப கேட்டான். 'ரெம்ப கஷ்டமா இருக்குடா' என்று அழப்போகும் குரலில் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டான். நானும் இரவு முழுதும் யோசித்துக் கொண்டேயிருந்தேன், ஏன் அந்த படத்தின் பாதிப்பிலிருந்து என்னால் மீள முடியவில்லை என்று.

தன் அண்ணன் சென்னை செல்லும்போது வருத்ததுடன் "சரிண்ணே" என்று சொல்லும் தங்கையும், வேலை கொடுப்பவர்களிடம் "எங்கப்பாவை வெட்டி கொண்னுபுட்டாக அண்ணாச்சி" என்று கைகட்டி சொல்லும் இளைஞனும், காதலுக்காக உயிரைவிடும் செல்வராணியும் பைத்தியமாய் திரியும் அவள் காதலனும், சிரிக்கவே தெரியாத கருங்காலியும் அவனிடம் ஜோடிப்பொருத்தம் கேட்டு நக்கல் செய்யும் லிங்கமும் கனியும், காதல்வயப்பட்ட மாரிமுத்தும் சோபியும், பேரில்லாத இன்னும் பல மனிதர்களும் சென்னை ரங்கநாதன் தெருவில் மிதக்கும் கூட்டமும் குப்பையும் அதன் வெக்கையும் ரத்தமும் நினைவில் மீண்டும் மீண்டும் வந்து சென்றன. படத்தில் காட்சிகளில் அந்த தெரு வாழ்க்கையின் தினசரி நிகழ்வுகளை யதார்த்த்த்துடன் பதிவு செய்திருபப்தால் அங்காடித் தெரு பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த தாக்கதை உண்டு செய்திருக்கிறது.

தன் தந்தை விபத்தில் இறந்ததும் வாழ்க்கை, படிப்பு, கனவு எல்லாம் சிதைந்து விடுகிறது லிங்கு என்றழைக்கப்டும் ஜோதிலிங்கத்திற்கு (மகேஷ்). சென்னையில் இருக்கும் பிரமாண்டமான கடையில் வேலை செய்ய வரும் அவனுக்கும் அவன் நண்பன் மாரிமுத்துவுக்கும் (ப்ளாக் பாண்டி) ஆரம்பமே பெரும் அதிர்ச்சி. சிறை அறைகளை விட மோசமான நிலையில் இருக்கும் தங்குமிடம், ஓய்வில்லாத வேலை, தாங்க முடியாத ஒடுக்கு முறைகள் எல்லாம் அவர்களை சொந்த ஊருக்கே திரும்பி செல்ல எண்ண வைக்கிறது. ஏ சி ஹாலுக்கு வேலை மாற்றப்பட்டது தான் அவர்களின் பிரமோஷன்! கூடவே வேலை செய்யும் கனி (அஞ்சலி)யிடம் முதலில் லிங்கு முறைத்துக்கொண்டாலும் பின் அவர்களுக்கிடையே காதல் துளிக்கிறது. அந்த கடையின் சூபர்வைசரின் (இயக்குநர் ஏ வெங்கடேசன்) பட்டப்பெயர் தான் 'கருங்காலி'. கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை செய்யும் ஒருவன். ஆணும் பெண்ணும் பேசுவதே அங்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. அச்சூழலில் இவர்களின் காதலும் வாழ்க்கையும் எப்படி நகர்கிறது, கடைசியில் என்னவாகிறது என்பதே படத்தின் மையக் கதை.

யாருக்கும் வராத துணிவு இயக்குநர் வசந்தபாலனுக்கு வந்திருக்கிறது. பண பலம், ஆள் பலம், அரசியல் பலம் என எல்லாவற்றுடனும் வலையவரும் ஒரு கூட்டத்தின் அத்துமீரல்களை ஒரு தொழிற்சங்க போராளியைப்போல அம்பலப்படுத்தியிருக்கிறார். சினிமாவின் வணிகப்போட்டியில் இப்படி ஒரு படத்தை எடுக்கும் வசந்தபாலன் போன்றவர்கள் தான் இன்றைய நவீன தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளங்கள். தெளிவான இந்த கதையை தைரியமாக தேர்ந்தெடுத்து அதுக்காக நுட்பமான பல ஆராய்ச்சிகள் மேற்கொண்ட வசந்தபாலனின் உச்ச பட்ச உழைப்பு படத்தில் நன்றாக தெரிகிறது. நெல்லை மாவட்டத்தின் தேரிக்காட்டு வாழ்க்கையும் சென்னை தி.நகர் வாழ்க்கையும் சினிமாத்தனம் சற்றும் இல்லாமல் நம் கண்முன் உயர்ந்தபட்ச உண்மையோடு விரிகின்றன. திரைக்கதையில் பல்வேறு குறுங்கதைகள் இருந்தும் எந்தவித குழப்பமும் இல்லாமல் படம் பயணிக்கிறது.

கிராமத்து வாழ்க்கையை, நகரத்து வாழ்க்கையை, ஏழை எளிய மனிதர்களின் வாழ்வியல் சோகத்தை உண்ணிப்பாக கவனிக்காமல் இப்படி ஒரு படத்தை எடுத்திருக்க இயலாது. கிராமத்தில் இருக்கும்வரை தெளிவாக இருக்கும் லிங்கு மற்றும் மாரிமுத்துவின் முகங்கள் வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே தூக்க கலக்கத்திலும் துயர்த்திலும் மூழ்கிப் போகிறது. அங்கு வேலை பார்க்கும் பெரும்பாலானவர்கள் கண்களை சுற்றியிருக்கும் கருவளையங்கள் அவர்களின் தூக்கமின்மையையும், வேலை பளுவின் வலியையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. செல்வராணி தற்கொலை செய்துகொண்ட மறுநாள் உடைந்த கண்ணாடி சரி செய்யப்பட்டு அந்த கோர நிகழ்வின் சுவடுகள் அழிக்கப்படும் காட்சியும், வீணாய்ப்போன அட்டைகள் தெருவில் தூக்கி எறியப்படும் காட்சியும் வெகு நாட்களுக்கு மறக்க முடியாதவை.

சினிமா கேமிராவிற்கு சற்றும் அறிமுகமில்லாத பல முகங்களை அற்புதமாக நடிக்க வைத்திருப்பதில் மிகப்பெரிய வெற்றியைப்பெற்றிருக்கிறார் இயக்குநர். லிங்குவின் காதலுக்காக கனியிடம் பேசும் சோபி எழுந்து கிளம்பும்போது "ஆனாலும் உனக்கு இம்புட்டு ரோஷம் ஆகாது புள்ள" என்கிறாள். அதற்கு "உலகத்தில ஒரு ஆம்பளகிட்டயாவது மான ரோஷத்தோட இருக்கேனே" என்று கனி பதில் சொன்னதும் சோகத்தோடு ஒரு பார்வை பார்த்துவிட்டு சோபி திரும்பிச்செல்வது போன்ற பல காட்சிகளில் இயக்குனர் நடிகர்களை நிகழ்வுகளோடு வாழ வைத்திருக்கிறார்.

வசந்தபாலன் என்கிற அற்புதமான கதை சொல்லியின் பக்கபலமாய் படத்தின் ஒளிப்பதிவு படம் முழுக்க பயணிக்கிறது. புதுமுகம் மகேஷ் ஆச்சர்யப்படுத்துகிறார். அவர் ஜோதிலிங்கமாகவே நம் முன் வாழ்கிறார். மகேஷின் தேர்ந்த உடல்மொழியும், சற்றும் மிகையில்லாத நடிப்பும் அனாயசமாய் வரும் நெல்லை வட்டார வழக்கும் படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. ஒரு அறிமுக நடிகன் படம் முழுக்க இப்படி underplay செய்து நடித்திருப்பது ஆச்சர்யம்.

கனியாக வாழ்ந்திருக்கும் அஞ்சலியை பாராட்ட வார்த்தைகளே இல்லை. செயர்கைத்தனமோ மிகையோ சற்றும் இல்லாமல், வேற்று மொழியின் வட்டார வழக்கையும் அந்த பாத்திறத்தின் வாழ்க்கையையும் நுட்பமாக கற்று நடித்திருக்கிறார். அஞ்சலி நமக்கு கிடைத்திருக்கும் அருமையான நடிகை. நண்பனாக வரும் ப்ளாக் பாண்டி நம்பிக்கையூட்டும் நகைச்சுவை நடிகன். அவன் வரும் அனைத்து காட்சிகளிலும் கலகலப்பு தொற்றிக்கொள்கிறது. உணர்ச்சிகள் கொந்தளிக்கும் காட்சிகளிலும் அர்புதமாக நடித்திருக்கிறார்.

ஜெயமோகனின் வசனங்கள் பார்வையாளனை பல இடங்களில் நேரடியாகத் தாக்குகின்றன. அந்த வசனங்களுக்காக சில இடங்களில் சிரிப்பிலும், சில இடங்களில் கைதட்டலிலும் அரங்கம் அதிர்கிறது. பல வசனங்கள் மனதை கனமாக்கவும் செய்கின்றன. லிங்குவிடம் கனி பேசும் வசனம்
"என் தங்கச்சி உன்னை யாரு யாருன்னு கேட்டுட்டே இருந்தா"

"நீ என்ன சொன்ன?"

"நான் சிரிச்சேன்".

கவித்துவம், யதார்த்தம், தத்துவார்த்தம் என ஜெயமோகனின் வசனங்கள் படம் முழுக்க திருநெல்வேலி தமிழிலும் சென்னைத் தமிழிலும் விரவிக்கிடக்கிறது.
"விக்கத் தெரிஞ்சவன் தான்யா வாழத்தெரிஞ்சவன்",

"மாரைப்புடிச்சு கசக்குனான், பேசாம நின்னேன் போதுமா?",

"மனுஷங்கதான் தீட்டு பாப்பாங்க. சாமில்லாம் தீட்டு பாக்காது",

"யானை வாழற காட்டுலதான் எறும்பும் வாழுது".

நான் படம் பார்த்த திருவான்மியூர் ஜெயந்தியில் முழுக்க தொழிலாளர் முகங்கள். படம் ஓடிக்கொண்டிருந்த போது அவர்களை முகங்களை அவ்வப்போது கவனித்தேன். சில இடங்களில் கொண்டாட்ட மனநிலையிலும், சில காட்சிகளில் அடக்கமுடியாத கண்ணீருடனும் பார்த்துக்கொண்டிருந்தனர். படம் அவர்களுடன் நேரடியாக உரையாடிக்கொண்டிருந்தது. படத்தின் பாத்திரங்களும் நிகழ்வுகளும் இயல்புடனே இருக்கிற போதிலும் பல இடங்களில் ஒரு திரில்லர் சினிமாவை பார்ப்பது போலவும் இருந்தது.

படத்தின் கிளைக்கதைகள் இந்தப்படத்தை தூக்கி கொண்டாட இன்னுமொரு காரணம். கதாநாயகனின் கூடவே இருக்கும் மாரிமுத்துவின் காதல், கடைக்குள் நடக்கும் காதலும் அதன் பிறகு நடக்கும் துயரமும், தெருவில் போகும் ஊனமுற்றவர் அவர் மனைவி மற்றும் முஸ்லீம் பெரியவர் சார்ந்த கதை, கனி மற்றும் லிங்குவின் முதல் காதல் அனுபவக் கதைகள், கனியின் தங்கை சம்பந்தப்பட்ட கதை போன்றவை. கதாநாயகனின் தங்கை, தன் அண்ணன் வேலை பார்க்கும் கடைப்பைக்காக தனக்கு எந்த அறிமுகமும் இல்லாத ஒரு கணவன் மனைவியை பின் தொடரும் காட்சி ஒரு அற்புதமான குறும்படம். இப்படி படம் முழுக்க கிளைக்கதைகள் நம்மை அசரடிக்கின்றன. அந்த காட்சிகளில் வரும் யாருமே தொழில் முறை நடிகர்கள் இல்லை. ஆனால் நம்மால் அவர்களில் வாழ்க்கையை தரிசிக்க முடிகிறது. அந்த முகங்கள் மனதில் பதிந்து விடுகிறது.

இப்படிப்பட்ட படத்தின் தரத்தை குறைக்கும் விஷயங்களில் முக்கியமானது பின்னணி இசை மற்றும் பாடல்கள். படத்துக்குள் சில பாடல்கள் கதையின் நம்பகத்தன்மையை, வேகத்தை மிகவும் குறைக்கின்றன. கடைசி காட்சிகளுக்கு முன்பு கதாநாயகனும் நாயகியும் வாய் அசைச்சு பாடும் டுயட் பாடலும் அந்த காட்சியமைப்பும் படத்தின் இயல்புக்கு சற்றும் பொருந்தாத, நாராசமான ஒரு அனுபவம். இரவில் கடைக்குள் இருவரும் ஆடிப்பாடும் அந்த பாட்டும் காட்சியும் இதுவும் ஒரு சராசரி சினிமா தான் என்ற உணர்வை ஏற்ப்படுத்தும்.

சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் ஆடியோ சி டியை வாங்கின போது அதில் இசை விமரிசகர் ஷாஜி எழுதியிருந்த அட்டைக்குறிப்பை படிக்க நேர்ந்தது. அதில் அவர் 'எளிய மெட்டுக்களும் நேரடியான வரிகளும் கொண்ட இப்பாடல்கள் பெரிய ஹிட் ஆக வாய்ப்பிருக்கிறது' என்று எழுதியிருந்தார். அவர் சொன்ன படியே இப்படத்தின் பலபாடல்கள் ஹிட்டாகி திரும்ப திரும்ப கேட்கப்படும் நிலையிலும் "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, அவளுக்கு யாரும் இணையில்லை, அவள் அப்படி ஒன்றும் கலரில்லை, ஆனால் அது ஒரு குறையில்லை என்ற பாடல் வரிகளில் காணப்படும் முரண் பலரால் கண்டுகொள்ளப்படவில்லை. அழகில்லை, கலரில்லை என்று ஒரு பெண்னை குறை சொல்லிவிட்டு அது ஒரு குறையில்லை என்று எழுதியிருக்கிறார் பாடலாசிரியர்!

அங்காடித் தெருவின் பின்னணி இசை நாலாந்தர மசாலா படத்தின் இசையைபோல் இருக்கிறது. இசை அனுபவமாககூட இருக்க வேண்டாம், குறைந்த பட்சம் அந்த அற்புதமான பாத்திரங்களின் உணர்வுகளையாவது பிரதிபலித்து இருக்கலாம். எளிய மனிதர்களின் வாழ்க்கையை இவ்வளவு நுணுக்கமாகவும், உயர்ந்தபட்ச கவனத்துடனும் பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு அந்த வாழ்க்கையை உணர முடிந்த ஒரு இசையமைப்பாளர் இசையமைத்திருக்கலாம்.

படம் முழுவதும் தொடரும் துயரங்கள் சில சமயம் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. படம் முடியப்போகும் தருவாயில் திரைக்கதை மிகவும் தொய்வடைவது முடிவில் ஆர்வமின்மையை ஏற்படுத்துகிறது. அதனால் இப்படத்தின் க்ளைமாக்ஸ் நம் இதயங்களில் ஒரு ஆழ்ந்த பாதிப்பை ஏர்ப்படுத்தாமல் போய்விடுகிறது.

இந்தப்படம் நமக்கு உணர்த்தும் செய்திகள் நிறைய. இது போன்ற கண்டுக்கொள்ளப்படாத ஏராளமான கதைகள் சினிமாவில் உருவாவதற்கு இந்தப்படம் வழி செய்யலாம். பணத்தாசையால் கணக்கில்லாமல் ஆட்களை ஏற்றிச்செல்வதும், விதிமுறைகளை மீறி விபத்துகுள்ளாக்கி பலரின் கனவுகளை, வாழ்க்கையை சின்னாபின்னமாக்குவதும், தன் நிறுவனத்தை மேலும் மேலும் வளர்ப்பதற்கு என்ன வேண்டுமனாலும் செய்யத் துணியும் முதலாளிகளும் அவர்களின் வரம்பு மீறலை கண்டுகொள்ளாமல், ஆதரவு கொடுக்கும் அதிகார வர்க்கமும் நாம் வாழும் காலத்தின் உண்மை தான்.

இந்தப்படத்தில் வரும் தொழிலாளர்களைப்போல் உலகம் முழுதும் இருக்கிறார்கள். இதை விட மோசமான வாழ்க்கை வாழுபவர்கள். இதை விட மோசமான பணியிடச்சூழலும், சித்திரவதை செய்யும் மனிதர்களும், பாலியல் வக்கிரம் பிடித்த மிருகங்களும், சுரண்டும் முதலாளிகளும், இதை விட மோசமான தங்குமிடங்களும், உணவருந்தும் இடங்களும் இருக்கின்றன. அங்கும் மனிதர்கள் இதைப்போல் தாங்க முடியாத சோகத்தில் வாழ்கிறார்கள்.
பொதுவாகவே மனித உரிமை என்பதற்கு இந்தியாவில் பலருக்கு அர்த்தம் தெரிவதில்லை. அடுத்தவனின் சொத்தை, உழைப்பை, மேதமையை, ஆளுமையை கூச்சமே இல்லாமல் திருடுவது இங்கு இயல்பாகி விட்டது. அதற்கு எதிரான குரல் இந்த படம் முழுவதும் ஒரு முனகலை போன்றே ஒலிக்கிறது. ஒரு சிறிய பகுதி வளமாகவும் பெரும்பகுதி வறட்சியாகவும் இருக்கும் நம் நாட்டில் வளமான பகுதியில் இருப்பவர்கள் வாழ ஒரு வாய்ப்பு தேடி அலைபவர்களை சுரண்டும் அவலம் தொடர்ந்து நடக்கிறது.

இந்தப்படத்தின் இரண்டு காட்சிகளில் இளைஞர்கள் மேலளரின் காலை கட்டிக்கதறும் காட்சி தான் இன்றும் இருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கான சாட்சி. இதையெல்லாம் சொல்ல ஒரு போராளி தேவையில்லை. சக மனிதன் மீது அன்பு செலுத்தும் தருணங்களும், சக மனிதனை சமமாக மதிக்கும் போக்குகளும் கூட குறைந்து வரும் காலகட்டங்களில் இது போன்ற படங்கள் மனித நேயத்தை மறுபடியும் ஞாபகப்படுத்துகின்றன.

தொடரும் கொடுமைகளுக்கும் சோகங்களுக்கும் நடுவிலும் ஆங்காங்கே மனிதாபிமானமும் நேர்மையும் நம்பிக்கையும் வெளிப்படுத்தும் காட்சிகளும் வசனங்களும் இப்படத்தில் இருக்கிறது. தங்கையை வேலை பார்க்கும் இடத்தில் இருந்து கூட்டி செல்லும்போது வீட்டுக்காரமாமி கொடுக்கும் ஐம்பது ரூபாயை வேண்டாம் என்று கனி சொல்லும் காட்சியில் ஏழைக்கும் இருக்கும் விடாத தன்மானம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கண் தெரியாத ஒரு முதியவர் யாரும் தன்னுடைய பொருளை திருட மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் பல வருடங்களாக ஜனநெருக்கடி மிகுந்த தெருவில் வியாபாரம் செய்கிறார். "முப்பது வருஷம் முன்பு மனிதனை நம்பி இந்த தெருவில் கடை விரிச்சேன் தம்பீ, இது வரைக்கும் ஒரு குறையும் இல்லெ" என்கிறார் அவர்.

மையங்களை மட்டும் வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டிருந்த தமிழ் சினிமா, விளிம்புகளில் யாராலும் கவனிக்கப் படாத வாழ்க்கையையும் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது. அங்காடித் தெருவில் எளிய மனிதர்களின் முகங்களும், வாழ்க்கையும் வியாபித்திருக்கின்றன. அந்த வாழ்க்கையின் மாபெரும் வெளிச்சமின்மையும் சிறிது வெளிச்சங்களும் இந்தபடத்தை உண்மையுடன் நம் முன் நிறுத்துகிறது.