20100612

ஷாஜியின் இசையின் தனிமை by நா.மம்மது


ஷாஜியின் இரண்டாவது கட்டுரைத் தொகுப்பு இசையின் தனிமை. கட்டுரைத் தொகுபுகளை திறனாய்வு செய்வது ஒரு சிக்கலான வேலை. பல்வேறு காலங்கள், வெளிகளுக்குள் பயணிக்கும் கட்டுரைகளில் ஒரு பொதுத்தன்மை இருப்பது காணக்கிடைக்காதது. ஆனால் ஷாஜியின் இந்தத் தொகுப்பிலுள்ள கட்டுரைகளின் மையச் சரடாக உள்ளது இசையில் உள்ளடங்கியுள்ள துயரம் தான். இந்த தொகுப்பிலுள்ள ராய் ஆர்பிசன் பற்றிய கட்டுரையின் தலைப்பு கூட 'துயரத்தின் இசை' என்பதே.

இசை ஒரு வகையில் துயரத்தின் வெளிப்பாடுதான். 'மகிழ்ச்சிகளைக்கூட மெல்லிய சோகம் இழையோடப் பாடுவது மலையாளப் பாட்டின் இயல்பு' (பக்கம்.102). இது மலையாளப் பாட்டின் இயல்பு மட்டுமல்ல, இசையின் பொது இயல்பும் இது தான். ஒரு தாயின் தாலாட்டிற்கு உங்கள் காதுகளைக் கொடுத்துப் பாருங்கள். அதில் இன்பம் இழையோடுவது கேட்கும். ஆனால் உங்கள் உள்ளத்தைக் கொடுத்துப் பாருங்கள், அந்தத் தாயின் அவல ஒப்பாரி தான் அந்த தாலாட்டில் அலை அலையாக வரும். தாய் வீட்டின், பிறந்த பூமியின் தொப்பூள் கொடி உறவு அறுந்ததும், புகுந்த வீட்டில் எதிர்கொண்ட புதிய துயரங்களும் அந்தத் தாலாட்டில் மடை மாற்றாகவரும். 'தற்கொலைகளும், மனநலப் பிரச்சினைகளும் அதிகமாக நிகழும் பகுதியாகக் கேரளம் இருப்பதற்கும் கேரள இசையின் நீங்காத அம்சமாக இருக்கும் சோகத்திற்கும் நெருக்கமான உறவு இருக்கலாம்' (பக்கம்.109). வாழ்க்கையிலிருந்து தான் இசை பிறக்கிறது என்று சிந்தித்தால் இந்த சோக இசையின் வரலாறு எளிதாகவே புரியும்.

'அப்போது பல பையன்கள் அப்படி சினிமாவில் நடிப்பதற்காக மும்பைக்கு ஓடி வந்து கொண்டிருந்தார்கள்' (பக்கம்.161). இப்படியான பையன்கள் காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் கட்டுரை 'என் அப்பாவின் ரேடியோ'. பின்னால் தன்னைக் கட்டியமைக்கப் போகிற இசையின் குறியீட்டு அடையாளமாக அந்த ரேடியோ பற்றி சோகத்தில் முடிக்கும் ஷாஜி இக்கட்டுரையை ஒரு கவிதையோட்டத்தோடு நகர்த்திச் செல்கிறார். அந்த கவிதை மண்வாசனையோடு நம்மைக் கவரும்போது நாம் அவர் பிறந்த கட்டப்பனை ஊர்களுக்கே ஒரு பயணம் போய் விடுகிறோம். சில நேரங்களில் நாம் திரும்பி வராமலேயே இருக்க விரும்புகிறோம்.

எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்: 'பெரிய ஆலமரத்தின்கீழ் ஒரு துளசிச்செடி கூட முளைக்காது' என்று. பாட்டுக்காரர் பாலமுரளிகிருஷ்ணாவிடம் வயலின்கார பாலமுரளி மறைந்தே போய்விட்டார். சிலப்பதிகார நாடகம் படைத்த இளங்கோ அடிகள் அந்த ஒற்றை நாடகத்தை மட்டும்தான் படைத்திருப்பாரா? கம்பன் அந்த இராமாயணத்தை மட்டும்தான் பாடியிருப்பாரா? அவன் பாடியதாகப் பெயரளவில் அறியப்படும் ஈட்டி எழுபதும் ஏர் எழுபதும் எந்தத் தமிழ் அறிஞனுக்குத் தெரியும்? கம்பரின் 10,000 பாடல்களும் எனக்கு மனப்பாடம் என்று மார்தட்டும் எவனுக்கும் கம்பனின் மற்றைய படைப்பின் ஒரு வரியும் தெரியாமல் போனது ஏன்? மனிதகுலத்தின் பிரம்மாண்டத்தின் மீதான பார்வை அது.

மர்லின் மன்றோ என்ற பாடகி, நாம் கட்டியமைத்த உடல்கவர்ச்சியில் மறைந்தே போனாள். நம் அகம் அதுதானே. 'தஸ்தயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர், தாமஸ் மன் மற்றும் சிக்மண்ட் ஃபிராய்ட் என்று தீவிரமான இலக்கியப் பரிச்சயம் கொண்டிருந்த அறிவாளியாக இருந்தபோதும்' (பக்கம் 34) மர்லின் மன்றோவை எல்லா ஆண்களும், ஏன் பெண்களும்கூட ஒரு நடமாடும் யோனியாக, எப்போதும் நிமிர்ந்து நிற்கும் முலைகளாக மட்டுமே பார்த்து வந்தோம். 'நாற்பது பாடல்கள் அவர் பாடியிருந்தும் அவள் உடல்மீது கொண்டிருந்த ஈடுபாட்டை, யாரும் அவளது குரல் மீது காட்டவில்லை' (பக்கம் 28).

ப்ளூஸ் இசை ஆற்றாமையையும், அடங்கிய துக்கத்தையும், காதலின் தீராத வலியையும், மனித வாழ்வின் அர்த்தமற்ற புதிர்த் தன்மையையும் பகிர்ந்து கொள்வதாகும். இந்த ப்ளூஸ் இசை வடிவமே மன்றோவிற்கு மிக நெருக்கமாக அமைந்திருந்தது. காரணம், மர்லினின் கூற்றிலேயே அதற்கான விடை ஒளிந்திருக்கிறது: சந்தோசம் என்பதை என் வாழ்வில் நான் அறிந்திருக்கவே இல்லை. திரும்பி வராத நதி (River of no return) மூலம் தன்மீது படிந்திருந்த கவர்ச்சிப் படிமத்தைத் தன் பாடல்களின் வழியாகத் தாண்டிச் செல்ல மர்லினால் முடிந்திருக்கிறது. நம்மால்? தேசப்பிதாவுக்குத் தெருப்பாடகனின் அஞ்சலிபோல் பெண்ணியம் பேசும் இக்கட்டுரை, நம் பாலியல் வக்கிரத்தால் நார் நாராகக் கிழித்துப் போடப்பட்ட இரங்கற்பாடகி மர்லினுக்கான அஞ்சலியாக அமைந்திருக்கிறது.

டி.ஆர்.மகாலிங்கத்தைப் பற்றிய கட்டுரையில் ஷாஜி எழுதியுள்ள இரண்டு செய்திகள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. பழையதெல்லாம் நல்லது. புதியதெல்லாம் மோசமானது. அதாவது பழையதில் உள்ள சிறப்பு புதியதில் இல்லை. இது ஒருவகை மனப்போக்கு. மனவியாதி என்று சொன்னால் சிலர் கோபித்துக் கொள்ளக்கூடும். இது சாக்ரடீஸைக்கூட விட்டு வைக்கவில்லை. அவர் கூறுகிறார்: ஒவ்வொரு காலத்திலும் இளைஞர்கள் கெட்டுப் போய்விடுகிறார்கள். இக்காலத்து இளைஞர்களோ மிகவும் மோசமாகவே கெட்டுப் போய்விட்டார்கள். பழைய பாடல் போலே புதிய பாடல் இல்லை என்று பாடலைப் பழைய மெட்டில் இளையராஜா இசைப்படுத்தியிருந்தார். பாடலைக் கேட்ட நண்பர், உங்கள் பழைய பாடல் போலவா? என்று ராஜாவிடம் கேட்டாராம். சுதாரித்துக்கொண்ட ராஜா படத்திலிருந்து பாடலை நீக்கிவிடச் சொன்னாராம்.

இது கதையாக இருக்கலாம். நடந்ததாகவும் இருக்கலாம். ஆனால் இது கற்பிக்கும் பாடம், அதன் தத்துவம் உண்மையானது. 'இன்றைய பாடலா, பேச்சா என்று அடையாளம் காணமுடியாத உளறல்கள் இசை ரசிகர்களை வருத்தம் கொள்ளச் செய்கிறது' என்று ஒரு கட்டுரையில் எழுதிச்செல்லும் ஷாஜி டி.ஆர்.மகாலிங்கம், அக்காலகட்டத்து நவீன பாடல்களுக்கு எதிராக இருந்தார் என்றும் எழுதுகிறார். இதற்குக் காரணம் பழைய பாடல் போலே புதிய பாடல் இல்லை என்ற ஷாஜியின் மனப்பதிவு தானே? அந்தக் காலத்துப் பாடல் அந்தக் காலத்து இளைஞர்களுக்கானது. இந்தக் காலத்துப் பாடல் இந்தக் காலத்து இளைஞர்களுக்கானது. இந்தக் காலத்துப் பாடல் இந்தக் காலத்துக் கிழவர்களுக்கானது அல்ல என்பதை நாம் புரிந்து கொண்டாகவேண்டும்.

ஆனால் 'ஒவ்வொரு தலைமுறையும் பிந்தைய தலைமுறையைக் குறை சொல்லிக் கொண்டிருக்கும் என்ற பொது விதி திரையிசைக்கும் பொருந்தும். காலப் போக்குக்கு ஏற்ப இசைப் போக்குகளும் அதன் ரசனையும் மாறும்போது நாம் அர்த்தமில்லாத, ரசனையற்ற தலைமுறை என்று புதிய தலைமுறையைத் திட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். எந்தத் தலைமுறையிலும் பளிச்சிட்டுப் பிரகாசிக்கும் சில வைரங்கள் இருக்கின்றன என்பதைப் புறக்கணித்து விடுகிறோம்' என்றும் மற்றுமொரிடத்தில் எழுதுகிறார் ஷாஜி. இன்னுமொரிடத்தில் ஓர் மேர்கோளாக ஷாஜி எழுதுகிறார் 'சலில் சௌதரி ஒரு முறை சொன்னார், வெகுஜன இசை என்பது ஒவ்வொரு காலத்திலும் புதிதாக உருவெடுக்க வேண்டும். காலத்தின் ரசனைக்கு ஏற்ற விகிதத்தில் எப்பொழுதும் அதைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அது புதைப்படிமம் ஆகிவிடும். ஆனால் காலத்துக்கு ஏற்ப மாற வேண்டும் என்ற வேகத்தில் நாம் நமது பாரம்பரியத்தை மறந்துவிடக் கூடாது என்று'. எனக்கு குழப்பமாக இருக்கிறது!

சீர்காழி பாடும்போது சில பாடல்களில் சுருதி விலகுவதாக ஷாஜி குறிப்பிடுகின்றார். நமது பாடல்களிலும் பாடும்முறையிலும் பல்வேறு சமாச்சாரங்கள் உள்ளன. பாடலில் உரை (சொல்) வரும், உரைநடை (வசனம், பேச்சு) வரும், உரையும் பாட்டும் கலந்துவரும். உரையிடையிட்ட பாட்டு என்று சிலப்பதிகாரம் இதைக் கூறும். நம் பாடல்களைப் பகுத்துப் பார்த்தால் அத்தனை அடுக்குகள் அமைந்திருக்கும். 'ஏனோ எனை அழைக்கலானாய் மடமானே' என்ற நவராத்திரி படப்பாடலை எடுத்துக் கொண்டால் அதில் 'சரி, அருகில் சென்று யாரென்று விசாரிப்போம்' என்று உரைநடைவரும். இப்பாடலில் வரும் 'பூவச்சித்திர மானசக்குயிலே' என்பது பாடலா, வசனமா என்ற மயக்கம் வரும். பின்பு பாடல் வரும்.

நம் இசை இழுமென்னிசை (Continuous Music), பாடல் விட்டுவிட்டு (Non-sustain) தொடர்ச்சியின்றி அதுவும் மெதுவான நடையில் வரும்போது சுருதி கலைந்தது போலவே தோன்றும். இடையில் வரும் வசனச்சொல் இவ்வாறே அமையும். தனிச்சொல், கூன் என்றெல்லாம் இதை வகைமைப்படுத்தி இருக்கிறோம். சிலப்பதிகாரத்தையும் அதன் உரைகளையும் ஆழ்ந்து கற்க வேண்டும். இதற்கான வளமையும், ஆழமும் தமிழில் தொன்மைக்காலம் தொட்டே பதிவு பெற்று வந்திருக்கின்றன. பாட்டில் பேச்சை, உரைநடையை, பாட்டாகப் பாடுவதில் இரு முறைகள் உண்டு. ஒன்று தாளமில் உரு. இதை சுத்தாரிகம், தொகையறா, விருத்தம், தண்டகம், சுலோகம் என்றெல்லாம் அழைக்கிறோம். இது வசனப்பாட்டு. சுருதியோடு, தாளத் துணையின்றி பாடப்படுவது. மற்றொன்று, வெறும் வசன நடையாகப் பேசுவது போன்று பாடப்படுவது. பேச்சில் ஒரே சுருதி அமைந்திருக்காது.

எனவே 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா', 'அவளா சொன்னாள்' ('உப்புக்கடல் நீரும்' என்ற வசனநடை), 'வாழ்வே மாயம்' போன்ற வசனநடைப் பாடல்களில் ஒரே சுருதி இயங்கிவராது. எனவே சுருதி விலகியதாகத் தோன்றும். பிரம்மாண்டங்களின்மீது கை வைப்பது திறனாய்வாளனின் பிறப்புரிமை. ஆனால் ஆழமான புரிதலுடன் அது நிகழவேண்டும். நாடகத்தின் தாயான தெருக்கூத்துப் பாடல்கள் இவைகளையெல்லாம் கற்றுத்தரும். ஒரு பரபரப்பிற்காக ஷாஜி இதை எழுதியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. ஷாஜி ஜெயமோகனின் நன்பர் என்பதனால் அவ்வாறு நினைக்கத் தோன்றலாம். ஷாஜியின் இந்தக் கட்டுரையை ஜெயமோகன் தான் மொழிபெயர்த்திருக்கிறார் என்பது தர்செயல்!

எவ்வளவுதான் திறமை இருந்தாலும், பரிந்துரைகளும் சந்தர்ப்பங்களும் மட்டுமே திறமை வெளியுலகுக்கு அறிமுகமாகத் தேவைப்படுகின்றன. ரித்விக் கட்டக் விசயத்தில் இது மெத்தவே பொருந்தி வந்துவிட்டது. பிந்திவந்த சத்யஜித் ரே கட்டக்கை முந்தி விடுகிறார். கட்டக்கின் நாகரிக் (குடிமகன்) என்ற முதன்முதலான மாற்றுத்திரைப்படம் எடுத்துமுடித்து 25 ஆண்டுகளுக்குப்பின், அவர் இறந்த மறுவருடம் திரையிடப்படுகிறது. பண்டைய கிரேக்க ஈங்கைலஸ், சோபோக்கிளிஸ், யூரிப்பிடஸ் போன்று நடிகன், நாடகாசிரியன், இயக்குனர் என்று எல்லாத்தளத்திலும் திறமை பெற்றிருந்த கட்டக் வாய்ப்பு இன்றி மது அடிமையாகி, வறுமையுடன் காச நோயாளியாய் மடிகின்றார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் ஏன் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பதுதான். இதில் ஆகக்கொடுமை என்னவென்றால் கட்டக்கின் சமகாலத் திறனாய்வாளர்களும் அவரைக் கண்டுகொள்ளவேயில்லை. ஷாஜி அவரைக் கண்டுகொண்டிருக்கிறார்.

'நாம் சரியாகத்தான் இசை கேட்கிறோமா' என்ற கட்டுரை நமக்குச் சரியாகத்தான் இசை கிடைக்கிறதா என்பதைப் பற்றிய தொழில்நுணுக்கக் கட்டுரை. 'சிலரது காதுகள் மிக நுட்பமானவை'. எஃகுச் செவி என்று நம் முன்னோர் பதிவு செய்துள்ளனர். 'இவர்களால் எது துல்லியமான ஒலி என்பதை அடையாளம் கண்டு விடமுடியும்' ('குரல் இனி என்றி நரம்பின் ஒப்பக் கேட்கும் உணர்வினனாகி' என்று சிலப்பதிகாரம் இதனைப் பதிவு செய்துள்ளது. ஷாஜி எழுதிய இந்த ஆடியோஃபைல் (Audiophile) சமாச்சாரம் சுவாரசியமானது. 'நிசப்தத்தின் திரை ஒலி' என்ற கட்டுரையும் இவ்வாறானதே.

மார்வின் கயேவின் கறுப்பிசை பற்ரியான கட்டுரை, சாஸ்பல் இசை, ப்ளூஸ், ஜாஸ் இவைகளின் கூட்டான ரிதம் & ப்ளூஸ் (R&B) மற்றும் சோல் (Soul) இசை வகைகளை பற்றியான தகவல் களஞ்சியமாக நீள்கிறது. மதவெறியனான தந்தையாலேயே மகன் மார்வின் கயே சுட்டுக் கொல்லப்பட்டது அவலத்தின் அவலம். அவரது மகனின் இசை மதம் சாராததாக இருந்ததை அந்தப் பாதிரித் தந்தையால் ஏற்கமுடியாமல் போனது சோகத்தின் சோகம். ஃபிரான்ஸ் நாட்டின் தேசியப் பாடகி எடித் பியாஃபின் இசையும் அவளது வாழ்கையும் இதைவிட துயரமானது. (கட்டுரை: எடித் பியாஃப்- அழிவற்ற குரல்).

டி எம் சௌந்தரராஜன் - மக்களின் பாடகன் என்ற கட்டுரையில் 'டி.எம்.எஸ். பாடல்களின் முக்கியமான இயல்பு என்னவென்றால் அவற்றில் உணர்ச்சிகள் சீராகவும் தெளிவாகவும் வெளிப்பட்டிருக்கும் விதம்தான்' என்று எழுதுகிறார் ஷாஜி. இந்த உணர்ச்சி தான் சுவை (ரஸம்) என்பது. ஒரு கலையின் முக்கிய வெளிப்பாடே இந்த sentiment தான். பாரதி தனது 'சங்கீத விஷயம்' என்ற கட்டுரையில் இந்த உணர்ச்சி, பாவம், சுவை என்ற விசயங்களை 'ரஸம்' என்று கூறி விரிவாகவே இதைப் பற்றிப் பேசியுள்ளார். 'ரஸ ஞானமில்லாதபடி பல்லவிகளும் கீர்த்தனங்களும் பாடுவோர் ஸங்கீதத்தின் உயிரை நீக்கிவிட்டு வெற்றுடலை அதாவது பிணத்தைக் காட்டுகிறார்கள். இக்காலத்து ஸங்கீத வித்வான்களிலே பலர் 'ஸங்கீதத்திற்கு நவரசங்களே உயிர்' என்பதை அறியாதவர். முக்காலே மும்மாகாணி வித்வான்ருகளுக்கு இந்தக் கீர்த்தனங்களின் அர்த்தம் தெரியாது. அர்த்தமே தெரியாதவனுக்கு 'ரஸம்' தெரிய நியாயம் இல்லை'.

இந்த 'ரஸம்' பற்றி மிக ஆழமாகத் தெரிந்து பாடிய மிகச்சிறந்த பாடகர் நமது டி.எம்.எஸ். ஊனை உருக்கி, உள்ளொளி பெருக்கி, உணர்ச்சியைத் தேக்கி டி.எம்.எஸ். பாடிய பாடல்களைக் காட்சிப்படுத்திய விதம் பல படங்களில் மகா கொடுமையானது. 'அப்பாடல்களின் காட்சிகளைப் பார்த்தபோது அவற்றில் பல எனக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளித்தன (பக்கம்.89). சின்னப்பொண்ணுவின் 'நாக்குமுக்க' பாடலை இரண்டாம்முறை படமாக்கியும் அந்தப் பாடலின் வேகத்திற்கு ஏற்றபடி படமாக்க முடியவில்லை. ஆடலர், ஆடலாசிரியரின் திறமை போதாமையா?'

சென்னைப் பல்கலையில் ஷாஜி ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம் தான் 'துள்ளலும் துயரமும்'. 'ஜி.ராமநாதன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் எனத் தமிழ்த் திரையிசையின் காலகட்டங்கள் பெரும் இசையமைப்பாளர்களால் அடையாளப்படுத்தப்படுபவை'. (Trend-setters என்ற பெயரில் இந்த நால்வர் பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரையை அம்ருதாவில் நான் எழுதி இருக்கிறேன். ஷாஜியின் 'தமிழ்த் திரை இசையின் இசையமைப்பாளர்கள், பாடகர்கள்' எனக் கட்டுரையும் இவ்வகையானதே. ஷாஜியின் இந்த கட்டுரைகள் தகவல் களஞ்சியமாக இருக்கிறது.

பாஞ்சாலி சபத முகவுரையில் பாரதி இப்படி எழுதுகிறார். 'எளிய பக்தர்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், எனது ஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவேன். நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்'. ஷாஜியின் முந்தைய நூல் 'சொல்லில் அட்ங்காத இசை' ஆகட்டும், தற்போதைய இந்த நூலாகட்டும், இவற்றில் வரும் பல பல செய்திகள் புதியவை. முந்தைய நூலில் உள்ள 'போனி-எம் நடந்தது என்ன' என்ற கட்டுரையைப் படித்து நம்மில் பலர் ஆடிப்போய் விட்டோம். 'யதார்த்த இசை நிகழ்ச்சிகளும் இசையின யதார்த்தமும்' என்ற கட்டுரையின் 'கீதி சலிலா' குறித்த பதிவுகளில் நம் கண்களைக் குளமாக்கியவர் இந்த ஷாஜி.

மலையாள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். எட்டு மொழிகளில் பேச எழுதத் தெரிந்தவர். ஆனால் 'தமிழ் தான் எனக்கு, மனதுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது' என்று கூறுகிறார். இந்த இடத்தில் மறைவான செய்தி ஒன்றினைக் கூற விரும்புகிறேன். வானம் இடிந்து விழுந்து கடல் பொங்கி எழுந்து விடாது என்று நினைக்கிறேன். கடந்த உலகத் தமிழ் மாநாடுகள் யாவும் இயல் (இலக்கியம்) தமிழுக்கே முக்கியத்துவம் தந்து சென்றுள்ளன. இந்தக் கோவைச் செம்மொழி மாநாட்டிலாவது முத்தமிழின் மற்றிரு கூறான இசைத்தமிழ், நாடகத் தமிழுக்கு சரியான இடம் பெற்றுத்தர ஆவன செய்யுங்கள் என்று இத்துறைகளைச் சேர்ந்த ஐந்தாறு அறிஞர்கள் எனக்கு நெருக்குதல் தந்தார்கள். மேலிடத்திலுள்ள நாடகப் பேராசிரியர் மற்றும் துணைவேந்தருடன் தொடர்பு கொண்டதில் அவர்கள் சொன்ன செய்தியின் சாராம்சம்: "முத்தமிழ் ஆய்வுக்கோவைக்குக் கட்டுரைகள் கேட்டால், இயல் (இலக்கியம்) தமிழுக்கு 100 கட்டுரை வரும், இசைத் தமிழுக்கு 10 கட்டுரையும், நாடகத் தமிழுக்கு 5 கட்டுரையும் மட்டுமே கிடைக்கும்". யதார்த்தம், உண்மை, நடப்பு இதுவே. இசைத்தமிழ் பற்றி எழுத ஆட்களே இல்லை என்று கூறலாம். அதுவும் அதுபற்றித் திறனாய்வு எழுத!

'அம்சத்வனியின் 'ப நி ஸா' என்ற ப்ரயோகத்தில் போட்டார் பாருங்கோ ஒரு பிடி'! இவ்வாறுதான் நமது இசை விமர்சனம். ஆகவே அது சுருங்கி மழுங்கிப் போய்விட்டது. ஆனால் தமிழ் இசை, கர்நாடக இசை என்ற தெக்கை இசை மட்டுமின்றி இந்துஸ்தானி, சிம்பொனி, ஜாஸ், ப்ளூஸ், ரெகே என்றெல்லாம் வடக்கு மேற்காக இக்கட்டுரைகளில் ஷாஜி பயணம் செய்திருக்கிறார். Pan-Indian & Pan-Universal தளத்தில் பல கட்டுரைகள் அருமையாக எழுதுகிறார். காற்றுக்கு என்ன வேலி? கடலுக்கென்ன கட்டுப்பாடு? இசைக்கு ஏது வெளி?

தமிழரின் இசை நாடியை அறிந்துள்ள ஷாஜி ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: 'தமிழ்த் திரையிசை என்பது அடிப்படையில் கேளிக்கை மற்றும் கொண்டாட்ட நிலைகளையே அதிகமும் வெளிப்படுத்துகிறது. தமிழ்த் திரையிசையானது இங்குள்ள நாட்டுப்புற இசையுடன் அதிகமாக உறவு கொண்டுள்ளதும், தமிழ்த் திரை ரசிகர்கள் நாட்டுப்புற இசையைக் கேட்கும் மனநிலையைப் பொதுவாகக் கொண்டிருப்பதும் இதற்குக் காரணம் என்று ஊகிக்கலாம். நாட்டுப்புற இசையானது அதிகமும் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களைச் சார்ந்ததுதானே!'

நம் பண்டைய இசை முழுக்கப் பக்தி மயமாக இருந்ததில்லை. வள்ளுவனும் கம்பனும் காப்பாகப் பாடியிருக்கிறார்கள். இளங்கோ அப்படிக் கூடப் பாடவில்லை. ஆனால் கர்நாடக இசை 'பக்தி' என்ற ஒற்றைப் பரிமாண இசையாகவே இன்றுவரை உள்ளது. மக்களைப் பாடுவது என்பது 'நரஸ்துதி' என்று தீட்டு நிலையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. மக்களைப் பாடிய நம் இசை இன்று மகேசனை மட்டுமே பாடுகின்றது. மக்களைப் பாடுபொருளாகக் கொள்ளாத எந்தக் கலையும் மக்களைச் சென்றடையாது. கர்நாடக இசை பொதுமக்களிடம் அன்னியப்பட்டு இருக்கும் காரணம் இதுதான்.

பக்தியைக் கர்நாடக இசையிலிருந்து பிரிக்கவே முடியாது என்று கர்நாடக இசைக்காரர்கள் கூறுவதின் அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த பக்திதான் நம்மை 2000 ஆண்டுகாலமாக அடிமைத்தனத்தில் ஆழ்த்தியுள்ளது. 5ஆம் நூற்றாண்டு பக்தி காலத்திலிருந்து இந்த இசை அங்கேயே நின்று கொண்டிருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டுக்கு இழுத்துவர எத்தனையோ பேர் முயற்சித்திருக்கிறார்கள். பூதேவர்களின் தெருக்களிலிருந்து மக்கள் வாழும் சேரிக்கு அந்தத் தேர் நகரவே இல்லை. 'ஓர் இந்திய இசைக் கலைஞன் இசையில் இறைவனுடன் ஒன்ற நினைப்பானே ஒழிய, பக்கத்திலுள்ள இன்னொரு மனிதனுடன் இணைய விரும்ப மாட்டான் என்று ஒருமுறை யகுதி மெனுகின் சொன்னார்' என்று ஷாஜி தனது 'சொல்லில் அடங்காத இசை' நூலில் (பக்கம்.59) சரியாகவே பதிவு செய்கிறார்.

ஒரு கவிதையின் மொழிபெயர்ப்பில் முதல் பலி கவிதை என்பார்கள். அதுபோல் மொழிபெயர்ப்பில் பலியாவது மூல ஆசிரியன். ஆனால் ஷாஜியின் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு நன்றாகவே செய்யப்பட்டுள்ளது. ஷாஜியின் கட்டுரைகளை மொழிபெயர்த்ததில் 'கூற்றியல்' (Narratology) மூல ஆசிரியனின் கூற்றாகவே உள்ளது, சிறப்பாகப் பாராட்டப்பட வேண்டும். சிற்சில குறைபாடுகளை அடுத்த பதிப்பில் நீக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். 'Melodrama' என்பதற்க்கு 'உணர்ச்சி நாடகம்' என்பது சரியாக இருக்குமா? 'Stereo' என்றால் இருவழி பதிவு, நான்கு டிராக் ஸ்டீரியோஃபோனிக் (நால்வழிப் பதிவு), ஆறு டிராக் ஸ்டீரியோஃபோனிக் (ஆறுவழிப் பதிவு) போன்ற தவறான சொல்லாடல்கள் தவிர்க்கப்படவேண்டும்.

'எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது' போன்ற சொல்லாட்சிகள், சொல்தொகை ஆட்சி, சொல்தொடர்வண்டி ஆட்சி ('கவிஞர் வழங்கிய தேவரின்' - மூச்சு முட்டுகிறது), வாசகன் தாங்கமாட்டான். 'தலையைத் திருப்பினான்' என்பதை 'நிற்கும்போது உடலின் மிக மேலான இடத்தில் இருக்கும் உறுப்பைத் திருப்பினான்' என்று எழுதுவதை, மொழிபெயர்ப்பதை வாசகனின் நல்வாழ்வு கருதி நாம் தவிர்க்க வேண்டும். ஆனால் இசைத்தொகை (Muisc Album) போன்ற பெயர்ப்புகள் இனிதே அமைந்துள்ளன.

முடிவாக ஷாஜியின் வரிகளிலே சிலவற்றை நாம் பார்க்கலாம்: "யோசித்துப் பார்க்கிறேன், இசையின் யதார்த்தம்தான் என்ன? 'இனிய இசை துயரமானதே' என்று ஒரு பாரசீகப் பழமொழி. இனிய இசையில் பிரிக்க முடியாதபடி கலந்துள்ள அந்தச் சோகம்தான் அதன் இனிமை. இசையின் இனிமைக்குள் மனித வாழ்க்கையின் கையறுநிலை, தவிர்க்க முடியாத தனிமை, முடிவில்லாத, அர்த்தமில்லாத காத்திருப்பு, இனம் புரியாத ஏக்கம் என்று எத்தனையோ விஷயங்கள் பொதிந்துள்ளன. அருவமான மானுட துக்கத்தின் ஒலி வடிவமாக இருப்பதனால்தானே இசைக்குப் பண்பாட்டில் அழியாத முக்கியத்துவம் உருவாகிறது? எனக்கு வாழ்க்கை ஒருபோதும் இனிதாக இருந்ததில்லை. துயரம் மிக்க இளமைக் காலத்தைக் கழிக்க நேர்ந்த எனக்கு ஆறுதலாக அன்று ஏதும் கண்ணுக்குப்படவில்லை, இசையைத்தவிர. நான் அதை எப்படியோ இறுகப் பற்றிக்கொண்டேன். இசை வழியாகவே நான் என் அன்றாடத் துயரங்களைத் தாண்டிக்கொள்ளும் வலிமையையும் எதிர்காலம் குறித்த கனவுகளையும் உருவாக்கிக்கொண்டேன். அது இப்போதும் தொடர்கிறது."

"எந்த ஒரு இனிய இசையிலும் இயற்கையின் முன் மனிதன் கொள்ளும் தவிர்க்கவே முடியாத துயரமும் தனிமையும் உள்ளது. கூடவே மனிதன் அத்துயரங்களை வென்றடையும் மகத்தான முழுமையுணர்வும் உள்ளது. அங்கே அவனை எதுவும் தோற்கடிக்க முடியாது. அதுதான் இசையின் யதார்த்தம் என்பது"

"பண்பாட்டுக் கூறுகள் விதைகளைப் போன்றவை. அவை ஒரு மண்ணின் ஆழத்தில் உறங்குகின்றன. இசை வானத்து மழைபோல வந்து அவற்றைத் துயிலெழுப்பி வளரச் செய்கிறது. மொழி போன்ற பல்வேறு வேலிகளால் மண் எல்லை வகுத்துப் பிரிக்கப்படலாம். ஆனால் இசை வானத்தைப் போல பிரிவற்ற ஒரு மாபெரும் வெளி"

நா.மம்மதுவுடன் தொடர்புக்கு