20110224

மலேசியா வாசுதேவன் - ஜெயமோகன்


முந்தாநாள் சென்னையில் இருந்தபோது ஷாஜி ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். மலேசியா வாசு அண்ணா உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருப்பதாகவும், கவலைக்கிடம் என்றும். சிறிதுநேரத்தில் பாலாவைப் பார்க்கச்சென்றேன். பாலாவுக்கும் சொல்லியிருந்தார். பாலா யாரையோ அனுப்பி விசாரிக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். நான் அன்று மதியமே விமானத்தில் நாகர்கோயில் திரும்ப வேண்டியிருந்தது.

நேற்று காலை மலேசியா வாசுதேவன் இறந்த செய்தியை அறிந்தேன். நடுவயதில் இளமை கனவுத்தோற்றம் கொண்டு பின்னுக்குச் சென்றபடியே உள்ளது. என் இளமையின் ஒளிகளுடன் பின்னியது அவரது குரல். நெகிழ்வும் கம்பீரமும் குறும்பும் மாறிமாறி தொற்றிக்கொள்ளும் குரல்.

மலேசியா வாசுதேவனின் மரணத்தை நினைக்கும்போது ஒரேசமயம் பல பாடல்கள் வந்து நினைவை அதிரச்செய்கின்றன. எதிர்பார்த்திருந்த மரணம். ஆனாலும் கனமாக உணர்கிறேன்.

அவரை ஒட்டுமொத்தமாக அனைவருமே மறந்த கட்டத்தில் விடாப்பிடியாக ஆதரித்து நின்ற, தனியொருவராக அவரைக் கௌரவிக்க முன்முயற்சி எடுத்து நிகழ்த்திய ஷாஜி எளிய ரசிகனாக என் நன்றிக்குரியவர். அவரைச் சந்திக்க எனக்கு அவ்விழாவில் வாய்ப்பு கிடைத்தது.

மலேசியா வாசுதேவனுக்கு வாழ்நாளின் கடைசியில் ஒருவேளை ஷாஜியின் நட்பும் மதிப்பும் அவரது தன்னம்பிக்கையை மீட்டளித்திருக்கலாம். எந்தத் தொடர்பும் இன்றி, எந்த எதிர்பார்ப்பும் இன்றி, தன் கலைக்காக மட்டுமே தன் இசையை நோக்கி வந்த ஒருவன் அவருக்கு அவரது கலைத்திறன் மீதிருந்த நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தினார். மலேசியா வாசுதேவனுக்கு அஞ்சலி.
---------------------------------------------------------------------------
இந்த இதழ் ஆனந்த விகடனில் வாசு அண்ணாவைப் பற்றிய எனது சிறு அஞ்சலிக் குறிப்பு ஒன்று வெளிவந்துள்ளது.
வரும் இந்தியா டுடே மற்றும் உயிர்மை இதழ்களில் அவரைப்ப்ற்றியான எனது விரிவான குறிப்புகள் வெளிவரவுள்ளது.
- ஷாஜி-