20110228

பூங்காற்று திரும்புமா?- மலேசியா வாசுதேவன் - விகடன் கட்டுரையின் முழு வடிவம்

” வாசு பேசறேன்ப்பா.. எங்கேப்பா இருக்கே? நலம்தானே? ஃப்ரீயா இருக்கும்போது இந்தப்பக்கம் வாப்பா..” இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒருநாள் வாசு அண்ணா எனக்கு ஃபோன் பண்ணினார். ஊருக்கு புறப்படுகிறேன், பத்துநாள் கழித்து திரும்பி வருவேன் என்று சொன்னேன். “நல்லபடியா போயிட்டு வாப்பா” என்றார். ”வந்தவுடன் அவசியம் வந்து சந்திக்கிரேண்ணே” என்றேன். நான் திரும்பி வந்த நாளிலேயே வாசு அண்ணா யாருக்குமே தெரியாத அந்த ஊருக்கு நிரந்தரமாக போயிவிட்டார். அவரை நான் இனி எங்கு போயி சந்திப்பது?

என்றைக்குமே மலேசியா வாசுதேவனின் அசாத்தியமான பாடும்முறயின் தீவிர ரசிகன் நான். அவரது காலகட்ட்த்தின் மிக உன்னதமான பாடகர் அவரே என்று எந்த சந்தேகமும் இன்றி சொல்லுவேன். அவரைப் பற்றி சில மாதங்களுக்குமுன் நான் எழுதிய கட்டுரை ஒன்று நிறைய எதிர்வினைகளை ஏற்படுத்தியது. மலேசியா வாசுதேவனின் மேதமையை இதுநாள் வரை உணர்ந்து கொள்ளாமலிருந்த தங்களின் அறியாமையை வருத்தத்தோடு ஒப்புக் கொண்டனர் பலர்.

தொடர்ந்து ஆனந்த விகடன் வெளியிட்ட மலேசியா வாசுதேவனின் நேர்காணலில் பலவருடங்களாக யாருமே பொருட்படுத்தாத நிலையில் உடல்நலக்குறைவுடனும் மனவருத்தங்களுடனும் தான் வாழ்ந்து வருவதைப் பற்றி அவர் தெரிவித்திருந்தார். தனக்கு முதன்முதலாக ஒரு ஆல்பத்துக்கு இசையமைக்க வாய்பு வாங்கித் தந்தவர் மலேசியா வாசுதேவன் தான் என்றும் தான் அவருக்கு உதவ முன்வருவதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார்!

பின்னர் பல தமிழ் ஆங்கில இதழ்கள் அவரை பேட்டி கண்டு அவரைப் பற்றியான குறிப்புகள் வெளியிட்ட்து. செப்டம்பர் 18 க்கு நடந்த எனது புத்தக விழாவில் இயக்குநர் மணிரத்னம் மலேசியா வாசுதேவனை கௌரவித்தார். பாடகி ஸ்வர்ணலதாவின் இறுதிச் சடங்கிற்கு மலேசியா வாசுதேவன் வந்திருந்தபோது தற்போது மிகப் பிரபலமாக இருக்கும் ஆளுமை ஒன்றைப் போல் ஊடகங்கள் அவரை சூழ்ந்துகொண்டனர்! புறக்கணிப்பின் பல ஆண்டுகளுக்குப் பின் நடந்த இவ்விஷயங்கள் அவரை மிகவும் சந்தோஷப்படுத்தியது என்றே நினைக்கிறேன்.

முன்பு ஒரு பேட்டியின் போது "யாரிடமும் நான் எதையும் எதிர்பார்த்ததில்லை. பிறருடைய வாய்ப்புகளைத் தள்ளிவிட்டு எனக்கு கிடைக்கவேண்டும் என்று நினைத்ததுமில்லை. ஒன்றிரண்டு பாடல்கள் சினிமாவில் பாடிவிட்டால் போதும் என்ற கனவோடுதான் ம்லேசியாவிலிருந்து இந்தியா வந்திறங்கினேன். ஆனால் ஐயாயிரம் பாடல்களைப் பாடிவிட்டேன். 85க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தேன். வெற்றி, புகழ், பணம் எல்லாம் பார்த்து விட்டேன்” என்று சொன்னார் அவர்.

2003 ஆம் ஆண்டில் மூளையில் ஏர்பட்ட கோளாறினால் கடுமையான பக்கவாதத்தால் தாக்கப்பட்டு அவரது உடம்பு செயலிழந்தது. நடக்கவோ, பேசவோ இயலாத நிலைக்கு தள்ளப்பட்டார். மாதக்கணக்கில் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே இருந்தார். சொல்லும்படியாக சினிமாத் துறையினரிடமிருந்து ஆதரவான எந்த ஒரு குரலும் அவரை அழைக்கவில்லை. நலம் விசாரிக்கக் கூட எவரும் முன் வரவில்லை! மலேசியா வாசுதேவன் என்ற உச்சநட்சத்திரப் பாடகர் மறக்கப்பட்ட ஒருவராக ஆகிவிட்டார்.

தொடர்ந்த சிகிச்சையின் காரணமாக சிரமத்துடன் நடக்கவும், சிரமமில்லாமல் பேசவும் முடிந்தது. ஆனால் ஒரு சுரத்தைக் கூட அவரால் பாட முடியவில்லை. தன் வாழ்க்கையே இசைக்கு அர்ப்பணித்த ஒரு மகத்தான பாடகனுக்கு இதைவிட என்ன பெரிய துயரம் நிகழ முடியும்? உயர் சிகிச்சைகள் மீண்டும் நலத்தை கொண்டுவந்திருக்கலாம் தான் ஆனால் அதற்க்கான பொருளாதார வசதிகள் அவரிடம் இருந்த்தில்லை. யாருமே உதவவுமில்லை.

நோயினால் மோசமாக பாதிக்கப்பட்ட பின்னரும் அவரது நினைவுகள் கொஞ்சம் கூட ஒளிமங்கவில்லை. தான் பாடிய ஏறத்தாழ அனைத்து பாடல்களும் அவரது நினைவில் இருந்த்து. தன் வாழ்வின் ஒவ்வொரு சின்னச் சின்ன நிகழ்வுகளும் கூட அவரது ஞாபகங்களில் எப்போதுமே உலவிக்கொண்டிருந்த்து. அதனால் தான் புறக்கணிப்பு ஒரு பெரும் வலியாக அவரது மனதை கவ்வியது என்றே நினைக்கிறேன்.

கடந்த தீபாவளியன்று அவருக்கு வாழ்த்துக்கள் சொல்ல அழைத்தபோது ”என்ன தீபாவளி? வாழ்க்கை ஒரே வெறுமையா இருக்குப்பா” என்று சொன்னார். இன்று அவர் இறந்த செய்தி கேட்டவுடன் போட்டி போட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய இசைமேதைகள், பல பல பாடல்களில் அவரது குரலுக்கு வாயசைத்த் திரை நட்ச்த்திரங்கள் போன்ற ஏறத்தாழ அனைவருமே கடந்த இருபது ஆண்டுகளாக அவரை முற்றிலுமாக புறக்கணித்தவர்கள். எப்போதாவது நிகழும் ஒரு தொலைபேசி அழைப்பையோ ஒரு சந்திப்பையோ தவிர இவற்களிடமிருந்து எதையுமே அவர் எதிர்பார்த்த்தில்லை.

மிதமிஞ்சிச் செல்லாத உணர்ச்சிகளோடும், இசையின் மீதான தீராத வேட்கையுடனும் ஆச்சரியகரமான முறையில் தனது பாடல்களை பாடிய பாடகர் மலேசியா வாசுதேவன். திரைப்படப்பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருக்கும் நமது கலாச்சாரத்தில் எப்போதுமே கொண்டாடப்பட வேண்டியவர். ஆனால் உயிருடன் இருக்கும்போது நாம் அவரை கொண்டாடவேயில்லை.

நான் அவரது உடலை பார்க்கவோ அவரது இறுதி சடங்குக்கு போகவோ இல்லை. உயிரற்ற அவரது உடல் பார்க்க எனக்கு விருப்பமில்லை. குழந்தகளைப் போன்ற அவரது களங்கமற்ற பேச்சும் சிரிப்பும் அவரை நேரடியாக தெரிந்தவர்களின் மனதில் என்றும் உயிருடன் இருக்கும். அவரது அருமையான பாடல்கள் ஒரு கோடைக்கால காற்றின் ஈறம் போல் நம் வலிகளில் நம்மை ஆறுதல் படுத்தும். ’இவ்வாழ்வில் மிதமின்ஞ்சி பெருமைப்படுவதற்கு யாருக்கும் பெரிதாய் ஒன்றுமில்லை’ என்று சொன்ன எனது வாசு அண்ணாவின் பாதங்களில் இந்த தீவிர ரசிகனின் ஒரு மௌனக் கண்ணீர்த்துளி.