20110301

மலேசியா வாசுதேவன் - நின்றுவிட்ட கோடைக்கால காற்று

"என்ன பெரிய தீபாவளி? இந்த வாழ்க்கையில் எனக்கு கொண்டாட என்ன இருக்கு இனிமேல்? வாழ்க்கை ஒரே வெறுமையாக இருக்குப்பா". கடந்த தீபாவளியன்றைக்கு வாழ்த்துச் சொல்வதற்காக நான் வாசு அண்ணாவை தொலைபேசியில் அழைத்தபோது இப்படித்தான் சொன்னார் அவர். மனதளவிலும் உடலளவிலும் மிகவும் துயர்மிகுந்ததொரு வாழ்வைத் தான் கடந்த பலவருடங்களாக அவர் வாழ்ந்து வந்தார். வாழ்வதன் மீதான அனைத்து நம்பிக்கைகளையும் அவர் முற்றிலுமாக இழந்து விட்டதைப் போலவே இருந்தது.

அவர் மரணமடைந்த செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே, கடந்த 20 ஆண்டுகளாக அவரை முற்றிலுமாக உதாசீனப்படுத்தி புறக்கணித்த பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்த விரைந்தனர். இசை மாமேதைகளும் உச்ச நட்சத்திர நடிகர்களும் இதில் அடக்கம். யார் யாருடனெல்லாம் 30 வருடத்துக்கும் மேலாக பணிபுரிந்து வந்தாரோ, வாழ்ந்து வந்தாரோ அவர்களிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்புக்காக, எப்போதேனும் நிகழும் ஒரு சந்திப்புக்காக, ஒரு கனிவான வார்த்தைக்காக அவர் ஏங்கியிருந்த போதெல்லாம் இவற்கள் யாருமே அங்கு தென்படவில்லை.

மலேசியா வாசுதேவனைப் பற்றிய எனது கட்டுரை மிகுந்த வரவேற்பைப் பெற்றது என வாசகர்களுக்குத் தெரியும். அக்கட்டுரையின் வாயிலாக சட்டென்று வெகுஜன ஊடகங்களின் கவனம் மலேசியா வாசுதேவனின் மீது திரும்பியது. ஆனந்த விகடனும், குமுதமும் போட்டி போட்டு ஒரே வாரத்தில் அவருடைய நேர்காணலை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து மற்ற பல ஆங்கில, தமிழ் இதழ்கள் அவரைப்பற்றி எழுதின.

எனது புத்தக விழாவில் இயக்குநர் மணிரத்னம் மலேசியா வாசுதேவனை கௌரவிக்கும் ஒரு நிகழ்வும் நடந்தது. மலேசியா வாசுதேவனின் தற்போதைய உடல் மற்றும் பொருளாதார நிலையை அறிந்து கொண்டதாகவும், மலேசியா வாசுதேவனே தனது முதன்முதல் இசைத்தொகுப்புக்கு வாய்பு ஏர்ப்படுத்தி தனக்கு உதவி செய்தவர் என்றும் தான் அவருக்கு உதவ முன்வருவதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தார்.
பாடகி ஸ்வர்ணலதாவின் இறுதிச் சடங்கிற்கு அவர் வந்திருந்தபோது எல்லா ஊடகங்களும் மலேசியா வாசுதேவனை தற்போதைய பிரபலமான ஆளுமையைப் போல் சூழ்ந்துகொண்டனர். 20 வருட புறக்காணிப்புக்குப் பின்னர் கிடைத்த இத்தகைய சிறு அங்கீகாரங்களால் கொஞ்சம் மகிழ்ச்சியடைந்தார் அவர். ஆனால் அவருடைய ரசிகர்களிடமிருந்து வந்த ஏறாளமான கடிதங்களையும் தொலைபேசி அழைப்புகளையும் தவிர இதன்மூலம் அவருக்கு நிரந்தரமான எந்தவொரு ஆதரவும் கிட்டவில்லை.

மூளையில் ஏர்ப்பட்ட கோளாரினால் கைகால்கள் இயங்க முடியாமல் இருந்தார். ஆயினும் அவரது மனம் கூர்மையானதாக இருந்தது. அவரது பெரும்பாலான பாடல்கள் வரிகளுடன் அவரது நினைவில் இருந்தது. தனது 3 வயதிலிருந்து நிகழ்ந்த சின்னச் சின்ன நிகழ்வுகளையெல்லாம் நினைவில் வைத்திருந்தார். அவரது நினைவுகளே அவரை மிகவும் துயரத்தில் தள்ளியது. அந்த நினைவுகளின் காரணமாகத்தான் அவருக்கு நேர்ந்த அலட்சியங்களை அவரால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. ஒரு மனிதன் தனது கை கால்களால் தனக்கே உதவி செய்துகொள்ளவியலாமல், பழைய நினைவுகளிலிருந்து கொஞ்சம் கூடவிடுபட இயலாமல் இருப்பதைக் காட்டிலும் துயர்மிக்கது இந்த உலகத்தில் எதுவுமில்லை.

சாலிகிராமம் பேருந்து நிலையத்தின் பின்னிருக்கும் கம்பர் தெருவில் ஒரு குறுகிய வாடகை வீட்டின் கடினமான சூழலில் அவர் தனிமையில் உழன்றார். அவரது மனைவி மட்டுமே அவரின் துணையாக இருந்தார். அவரது கணங்கள் மிகவும் மெதுவாக, அவரது நாட்கள் மிகவும் நீளமாக,கடந்து சென்றது. அவ்வீட்டின் அருகே சுற்றிக்கொண்டிருந்த தெருநாய்களோடு பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் அவர் தன் நேரத்தை கழித்தார்.

"அவர் சம்பாதித்த எல்லாப் பணத்தையும் என்ன செய்தார்?" செல்வந்தர்களாகவும் புகழடைந்தவர்களாகவும் இருந்தவர்கள் பொருளாதார நசிவையடையும்போது பொதுவாக மனிதர்களுக்குள் எழும் கேள்வி இது. இதற்கான விடை அவ்வளவு எளிதானதல்ல. சிறந்த கலைஞனாக இருப்பது ஒருவகையான திறமை. அந்த கலைக்கான ஊதியத்தையும் வெகுமதிகளையும் முறையாகப் பெற்றுக்கொள்வது இன்னொரு திறன். அவற்றை கவனமாகச் செலவழிப்பது மற்றொரு திறன். அதைச் சேமிப்பதும் உரிய முறையில் முதலீடு செய்வதும் முற்றிலும் வேறான இன்னுமொரு திறமை. வெகுசிலரே இவையனைத்திலும் திறமையானவர்களாக இருக்கின்றனர்.

பெரும்பாலான கலைஞர்கள் மிகுவுணர்ச்சியுடையவர்கள், நுண்மையானவர்கள். சமனில்லாதவர்களாதலால் சரியாகத் திட்டமிடத்தெரியாதவர்கள். மற்றவர்களை எளிதில் நம்பி, சாமானியர்களின் பார்வையில் படுபாதகமாகத் தோன்றும் பொருளாதார தவறுகளைச் செய்துவிடுகிறார்கள். சிலசமயம் இவர்கள் தங்களது முன்முடிவுகளினால் மோசமானவர்களை நம்பிவிடடு நலம்விரும்பிகளை விலக்கிவிடவும் நேரிடுகிறது. அங்கு மொஸார்ட் முதற்கொண்டு இங்கு எம்.கே.டி பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் என இவர்களின் பட்டியல் மிக நீளமானது.

இப்போது இன்னுமொரு கேழ்வி எழுகிறது. "சிறந்த, புகழடைந்த கலைஞர்களாயிருந்தும் சுமுகமாக வாழ்ந்தவர்களைப் பற்றி என்ன சொல்வது”? அப்படியும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களது செயல்பாடுகளும், பொருளாதார முடிவுகளும் கலைஞர்களல்லாத மற்றவர்களால் திட்டமிடப்பட்டு வழிநடத்தப் பட்டதாகவே இருக்கும். பெரும்பாலும் அவர்களது மனைவியால், நண்பர்களால், நண்பிகளால், அறிவார்ந்த, நம்பகமான மேளாலர்களால், உதவியாளர்களால் கவனிக்கப்பட்டிருக்கும். ஆனால் சினிமா மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் இதுபோன்ற நேர்மையான, நம்பகமானவர்களைப் பெறுவது அரிதானதே.

சினிமாத்துறையில் பலசமயம் தமது கலைப்பயணம் தொய்வடையத் துவங்கும்போது பெரும்பாலானவர்கள் ஒரு சினிமா தயாரித்து தனது பொருளாதார நிலையைச் சரிசெய்து விடலாம் என்றும் அதன் மூலம் மீண்டும் தாம் பிரபலமானவர்களாக தொடர்ந்து இருக்க முடியும் என்றும் கருதிவிடுவர். இதுபோன்ற முயற்சிகள் பெரும்பாலும் பேரழிவையே தந்திருக்கிறது. குறிப்பாக சினிமாத் தயாரிப்பு என்பது உலகின் மிகப்பெரிய சூதாட்டக் களமாகும். சினிமாவில் பொருளாதார வெற்றி என்பது வெறும் ஐந்து விழுக்காட்டுக்கும் கீழேதான். ஏற்கனவே வீழ்ச்சியில் இருக்கும் ஒருவர் சினிமாவைத் தயாரிப்பது என்றால் இருக்கும் அனைத்தையும் இழந்துவிட்டு போகப்போகிறார் என்பதே அதன் அர்த்தம்.

ஒரு காலத்தில் பேர், புகழ், பணம், கார்கள், பங்களா என எல்லாம் மலேசியா வாசுதேவனிடம் இருந்தது. எண்பதுகளின் இறுதியில், சினிமா உலகத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றம் அவருடைய பாடல் வாய்ப்புகளையும் அரிதாக்கியது. நடிப்பிலும் அவர் சிறப்பான இடத்தை எட்டவில்லை. அவரது பொருளாதார நிலை சரிவடையத் தொடங்கியது. இத்தகைய பிண்ணனியிலேயே அவர் "நீ சிரித்தால் தீபாவளி" எனும் படத்தை தயாரித்தார். அப்படம் மிகப்பெரும் தோல்வியடைந்தது. மோசமான திட்டங்களினால் அதீத வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். வீடு உட்பட எல்லாவற்றையும் இழந்தார். அச்சரிவிலிருந்து அவர் ஒருபோதும் மீளவே இல்லை.

தொடர்ந்த தோல்விகளும், ஏமாற்றங்களுமே அவருக்கு மூளைத்தாக்குதல் ஏற்பபட்ததற்க்கு காரணம் என்றே நினைக்கிறேன். கடுமையான பக்கவாதம் மூலம் பேசும் திறனைக் கூட இழந்தார். அவசர சிகிச்சைப் பிரிவில் மாதக்கணக்கில் இருந்தார். பல பத்தாண்டுகள் அவர் பணியாற்றிவந்த துறையோ, அங்கு அவரது உதவிகளைப் பெற்றுக்கொண்டவர்களோ அவரை பொருட்படுத்தவே இல்லை.

புகழின் உச்சியில் இருந்தபோது உறவினர்களாலும், விருந்தினர்களாலும், ரசிகர்களாலும் நிரம்பியிருந்த அவரது வீட்டில் கொண்டாட்டங்கள், விருந்தோம்பல்கள் முடிவற்றதாயிருந்தது. அவர் சரிவடைந்தபோது அனைவரும் மாயமாய் மறைந்தனர். அவரது உடல்நலமும் மிக மோசமாக பாதிக்கப்பட்போது அவரைத் தனிமையின் முடிவற்ற வெளிகளில் விட்டுச் சென்றனர். ஒரு காலத்தில் உச்ச நட்சத்திரப்பாடகராக இருந்த மலேசியா வாசுதேவனுக்கு என்ன நிகழ்கிறதென்று யாருமே கண்டுகொள்ளவில்லை.

மீதமிருந்த அனைத்தையும் விற்றும் எல்லா வாய்ப்புகளிலுமிருந்து கடன் வாங்கியும் பாதி ஆரோக்கியத்தையே மீட்க முடிந்தது. தொடர்ந்த சிகிச்சையும் பயிற்சியும் பேசுவதற்கும் ஒரளவுக்கு நடப்பதற்கும் உதவி செய்தது. ஆயினும் ஒரு வரியைக் கூட பாடமுடியாதவராகவே இருந்தார். தனது வாழ்வு முழுவதையும் இசைக்காக அர்ப்பணித்த ஒரு பாடகனுக்கு இதைவிடத் துயரம் வேறென்னவாக இருக்க முடியும்? சிறப்பான மருத்துவம் மூலம் அவர் முழுமையான ஆரோக்கியத்தை அடைந்திருக்கக் கூடும். ஆனால் அதற்கான பணம் அவரிடம் இருந்ததில்லை. யாருமே உதவி செய்யவுமில்லை.

தற்போது பிரபலமாயிருக்கும் ஒரு பாடகர் கேட்டார். "ஏன் ரஜினிகாந்த் மலேசியா வாசுதேவனுக்கு உதவி செய்ய வேண்டும்? ஏன் இளையராஜாவோ, ஏ.ஆர்.ரஹ்மானோ அவருக்கு உதவி செய்ய வேண்டும்? அவர்களினால் மலேசியா வாசுதேவனே பலனடைந்திருக்கிறாரே தவிர அவர்களல்ல" என்றார். ஒரு படி மேலே போனால்,"ஏன் யாரும் யாருக்கும் உதவி செய்யவேண்டும்? என்றும் கேட்கலாம். எல்லோருக்கும் பொருளீட்டவும், பேர் புகழீட்டவும் ஒரு வாழ்வுதானே இருக்கிறது? மேலும் மேலும் சேர்த்துக் கொள்ள இருக்கிற நேரம் போதாது. மிக சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து, இன்னும் வரும் 5 தலைமுறைக்கு தேவையான வசதிகளை சேர்த்த பின்னும்கூட நாம் யாருக்கும் உதவி செய்ய வேண்டியதில்லை. உதவி, கனிவு, இரக்கம் போன்ற எல்லா வார்த்தைகளுமே நமது மொழியகராதிகளிலிருந்து அகற்றப்பட வேண்டியவையாகும்!

வாசு அண்ணா ஒருமுறை என்னிடம் சொன்னார். " எனது ஆன்மாவையும், உள்ளுணர்வுகளையுமே நான் இதுவரைக்கும் பின்பற்றிவந்தேன். யாரிடமும் எதையும் எதிர்பார்த்ததில்லை. பிறருடைய வாய்ப்புகளைத் தள்ளிவிட்டு எனக்கு கிடைக்கவேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஒன்றிரண்டு பாடல்கள் சினிமாவில் பாடிவிட்டால் போதும் என்ற கனவோடுதான் இந்தியா வந்திறங்கினேன். ஆனால் ஏறத்தாழ ஐயாயிரம் பாடல்களைப் பாடிவிட்டேன். 85க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் விட்டேன். வெற்றி, புகழ், பணம் எல்லாம் பார்த்து விட்டேன். பாடல்பதிவுக்காகவோ, மேடை நிகழ்ச்சிகளுக்காகவோ சன்மானமாகத் தரப்படும் பணத்தை நான் ஒருபோதும் எண்ணிப் பார்த்ததே இல்லை. நான் மனிதர்களை நம்பினேன். அதுவே நான் செய்த மிகப்பெரும் தவறு. இவ்வாழ்வில் மிதமிஞ்சி பெருமைப்படுவதற்கு யாருக்குமே பெரிதாய் ஒன்றுமில்லை, ஏனெனில் மனித வாழ்வென்பது அத்தனை மகத்தான விஷயமொன்றுமில்லை."

இரண்டு வாரத்திற்கு முன்பு நான் வெளியூர் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது வாசு அண்ணாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ஓய்வாய் இருந்தால் அவரை வந்து சந்திக்குமாறு கூறினார். நான் பயணத்திலிருந்து வந்ததும் நிச்சயம் வருவதாக சொன்னேன். நான் வெளியூரில் இருந்தபோது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக தகவல் வந்தது. அவரது ரசிகர்கள் பலரும் மருத்துவமனை சென்று பார்க்க முயன்றபோது அவசர சிகிச்சைப் பிரிவில் அவரை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. நான் ஊரிலிருந்து திரும்பி வந்த அதே நாள், யாருடைய உதவியும் தேவைப்படாத அந்த உலகுக்கு அவர் சென்றுவிட்டிருந்தார்.

அவருடைய இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள நான் செல்லவில்லை. உயிரற்ற அவரது உடலை காணவும் விரும்பவில்லை. சிறுகுழந்தைகளைப் போன்ற அவரது சிரிப்பும் பேச்சும் என்னுள் எப்போதும் நீடித்திருக்கும். அற்புதமாகப் பாடப்பட்ட அவரது பல பாடல்கள் ஒரு கோடைக்கால காற்றைப்போல் எனது துயரின் கணங்களில் எனக்கு ஆறுதலளிக்கும். எனது அன்பிற்குரிய வாசு அண்ணாவின் பாதத்தில் வைக்க ஒரு மௌனமான கண்ணீர்த்துளி மட்டுமே இனி என்னிடமிருக்கிறது.

தமிழில் : முபாரக்