20110228

பூங்காற்று திரும்புமா?- மலேசியா வாசுதேவன் - இந்தியா டுடே கட்டுரை


நள்ளிரவு கடந்திருக்கும்... மலை அடிவாரத்திலுள்ள ஒரு பண்ணை வீட்டின் முன்புறத்தில் நண்பர்கள் கூட்டம் ஒன்று நடந்துகொண்டிருந்தது. 3 நாட்களுக்கு முன்பு இறந்துபோன பாடகர் மலேசியா வாசுதேவனைப் பற்றி சில வார்த்தைகள் பேசி அவருக்கு நாம் இப்போது அஞ்சலி செலுத்துவோம் என்று எழுத்தாளர் நண்பர் பவா செல்லதுரை திடீரென்று என்னிடம் சொன்னார். எனக்கு ஒருகணம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

மலேசியா வாசுதேவனின் தனித்துவம் மிக்க, மிக இயல்பான பாடும்முறையைப் பற்றி சொல்வதா? அவரது பல பல பாடல்களுக்கும் எனக்குமான நெடுநாள் உறவைப் பற்றிச் சொல்வதா? குறைவான ஆனால் அரிதான சில பாடல்களுக்கு அவர் அமைத்த இசையைப் பற்றி சொல்வதா? கபடம் இல்லாத குழந்தைகள் போன்ற அவரது குணத்தைப் பற்றி சொல்வதா? தொடர்ந்து தொடர்பில் இருந்தும்கூட கடைசியாக ஒருமுறை அவரை சந்திக்க முடியாமல்போனதின் வலியைப் பற்றி சொல்வதா?

ஐய்யாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் அவர். எண்பத்தியஞ்சுக்குமேல் படங்களில் நடித்தார். பல வருடங்கள் தமிழ் திரை இசையில் ஒரு உச்ச நட்சத்திரமாக விளங்கியவர். ஆனல் கடந்த பல ஆண்டுகளாக முற்றிலுமாக மறக்கப்ப்ட்டு, புறக்கணிக்கப்பட்டு வாழ்ந்து வந்தவர்.

எண்பதுகளின் இறுதியில், சினிமா உலகத்தில் ஏற்பட்ட பல மாற்றங்களால் அவருடைய பாடும் வாய்ப்புகள் குறைந்துபோனது. நடிப்பிலும் அவருக்கு சொல்லும்படியான வாய்புகள் இல்லாமலாயிற்று. அவரது பொருளாதார நிலை மோசமானபோது 'நீ சிரித்தால் தீபாவளி' எனும் படத்தை தயாரித்தார். அப்படம் பெரும் தோல்வியடைந்தது. தனது வீடு உட்பட எல்லாவற்றையும் இழந்தார். அந்நிலையிலிருந்து அவர் ஒருபோதும் மீளவே இல்லை.

2003 ல் மூளையில் ஏர்ப்பட்ட கோளாரினால் கடுமையான பக்கவாதத்துக்கு ஆளானார். அதன் மூலம் பேசும் திறனைக் கூட இழந்தார். அவசர சிகிச்சைப் பிரிவில் மாதக்கணக்கில் இருந்தார். பல பத்தாண்டுகள் அவர் பணியாற்றிவந்த திரைத் துறையோ அங்கு அவரது உதவிகளைப் பெற்றுக்கொண்டவர்களோ அவரை பொருட்படுத்தவே இல்லை. மலேசியா வாசுதேவன் என்ற ஆளுமை நமது மறதியில் கரைந்து போனார்.

தொடர்ந்த சிகிச்சையின் காரணமாக பேசவும் சிரமத்துடன் நடக்கவும் முடிந்தது அவருக்கு. ஆனால் அவரால் பாடவே முடியவில்லை. தன் வாழ்க்கையே இசைக்கு அர்ப்பணித்த ஒரு பாடகனுக்கு இதைவிட என்ன பெரிய துயரம் நிகழ முடியும்? உயர் சிகிட்ச்சைகள் மீண்டும் நலத்தை கொண்டுவந்திருக்கலாம். ஆனால் அதற்க்கான பொருளாதார வசதிகள் அவரிடம் இருந்ததில்லை. யாருமே உதவவுமில்லை.

அவரைப் பற்றி சில மாதங்களுக்குமுன் நான் எழுதிய கட்டுரை நிறைய எதிர்வினைகளை ஏற்படுத்தியது. அதைப் படித்துவிட்டு மலேசியா வாசுதேவனின் மேதமையை இதுநாள் வரை உணர்ந்து கொள்ளாமலிருந்த தங்களின் அறியாமையை வருத்தத்தோடு ஒப்புக் கொண்டனர் பலர்.
செப்டம்பர் 18 க்கு நடந்த எனது புத்தக விழாவில் இயக்குநர் மணிரத்னம் மலேசியா வாசுதேவனை கௌரவித்தார். தொடர்ந்து பல தமிழ், ஆங்கில இதழ்களில் அவரைப்பற்றியான குறிப்புகள் வெளியாயின. பாடகி ஸ்வர்ணலதாவின் இறுதிச் சடங்கிற்கு மலேசியா வாசுதேவன் வந்திருந்தபோது தற்போது பிரபலமான நட்சத்திரம் ஒன்றைப் போல் ஊடகங்கள் அவரை சூழ்ந்துகொண்டன! புறக்கணிப்பின் பல ஆண்டுகளுக்குப் பின் நிக்ழ்ந்த இந்த சின்னச் சின்ன அங்கீகாரங்கள் அவரை சந்தோஷப்படுத்தியது. ஆனால் இதனாலும் சொல்லும்படியான எந்த உதவிகளும் அவருக்குக் கிடைக்கவில்லை.

மனதளவிலும் உடலளவிலும் மிகவும் துயரமானதொரு வாழ்வை பலவருடங்கள் கழித்தபின், சமீபகாலமாக வாழ்வதன் மீதான அனைத்து நம்பிக்கைகளையும் அவர் முற்றிலுமாக கைவிட்டிருந்தார் என்றே நினைக்கிறேன். கடைசியில் கடந்த ஃபிப்ரவரி 20க்கு தனது கஷ்டங்களிலிருந்து நிரந்தரமாக விடுதலைப் பெற்றார் மலேசியா வாசுதேவன்.

அவர் இறந்த செய்தி கேட்டவுடன் விரைந்து அவருக்கு அஞ்சலி செலுத்திய பல இசையமைப்பாளர்களும் நடிகர்களும் பாடகர்களுமெல்லாம் உயிருடனிருந்த நாட்களில் அவரை முற்றிலுமாக புறக்கணித்தவர்களே. ஒரு தொலைபேசி அழைப்பையோ ஒரு சந்திப்பையோ தவிர இவற்களிடமிருந்து எதையுமே அவர் எதிர்பார்த்த்தில்லை என்றபோதிலும் கூட!

மிதமிஞ்சிச் செல்லாத உணர்ச்சிகளோடு ஆச்சரியகரமான முறையில் தனது பாடல்களை பாடிய அந்த பாடகனைப்பற்றிய சிறிய நினைவுரையை நான் முடித்தவுடன் அங்கிருந்த இயக்குநர் மிஷ்கின், டி எம் எஸுக்கு பின் தோன்றிய உண்மையான ஒரே ஒரு தமிழ்ப்பாடகர் மலேசியா வாசுதேவன் தான் என்று சொல்லி 'பூங்காற்று திரும்புமா, ஏன் பாட்டெ விரும்புமா” என்று பாட ஆரம்பித்தார். பின்னிரவின் ஆழ்ந்த அமைதியில் மலேசியா வாசுதேவனின் என்றும் இறவாத அந்த பாடல் எல்லாயிடமும் ஒலித்து கொண்டேயிருப்பதுபோல் தோன்றியது.