20150119

நஸீம் – நின்றுவிட்ட காலைத் தென்றல்


பார்க்காத படத்தின் கதை – 3

தரிசு நிலங்களுக்குமேல் பரவிக்கிடந்த நீலவானத்தைப் பார்த்து அமர்ந்திருந்தனர் பதினைந்து வயதான நஸீமும் அவளது எழுபத்தெட்டு வயதான தாத்தாவும்.
“என் பெயரின் பொருள் என்ன தாத்தா?”
நஸீம் என்றால் குளிர்ந்த அதிகாலைக் காற்று. நீ அந்த காற்றைப் போல் தூய்மையானவள்
வானத்தின் நிறம் நீலமானது எப்படித் தாத்தா?”
எனக்கு அதன் சாம்பல் நிறம் பிடிக்கவில்லை. அதனால் நீல வண்ணம் அடித்துவிட்டேன்”.

நஸீமுக்கு அடக்கமுடியாத சிரிப்பு. தாத்தா எப்போதுமே இப்படித்தான். முன்பின் முரணாகவே பேசுவார். ”வானத்தின் நிறம் நீலமானதன் அறிவியல் காரணம்தான் கேட்டேன் தாத்தா. வானத்தின் நிறம் நீலமோ மஞ்சளோ ஆகட்டும், நீ இப்போது அழகாகச் சிரித்தாயே! அதுபோதும். வண்ணங்கள் எதுவாகயிருந்தாலும் மனிதர்கள் சிரித்த முகத்துடன்  வாழவேண்டும்”.

தனது அன்புத் தாத்தாவின் வார்த்தைகளை நஸீம் கண்ணீருடன் நினைவு கூர்கிறாள். அவளது தாத்தா பலகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகக் கிடந்தார். வெளியே வரவோ ஏன் அடுத்த அறைக்குச் செல்லவோ கூட அவர் விரும்பவில்லை. ஓர் ஆசிரியராகவும் கவிஞராகவும் சுதந்திரப் போராட்டக்காரராகவும் தனது இளமைக்காலத்தை நிறைவுடன் வாழ்ந்தவர் அவர்.

மனைவிமேல் வைத்திருந்த ஆழ்ந்த அன்பின் காரணமாக மனைவிக்கு அடங்கி நடக்கும் குணம் தனக்கு இருந்தது என்றும் அது தனக்குப் பிடித்திருந்தது என்றும் பெருமிதமாகவே சொல்பவர். ஆழ்ந்த சிந்தனைகளையும் கவித்துவத்தையும் வெளிப்படுத்தி சுவாரசியமான தனது இளவயது அனுபவங்களைத் தனது பேத்தியிடம் தொடர்ந்து பகிர்வதுதான் முதுமைப் படுக்கையில் அவருக்கிருந்த ஒரே பொழுதுபோக்கு.

இஸ்லாம் மதத்தில் பிறந்து அந்த மதத்தை நன்கு அறிந்துவைத்தவராக இருந்தபோதிலும்  அதீதமான மதச் சார்பை அவர் வெறுத்தார். அவரது அநேகமான இளவயது நண்பர்கள் இந்துக்கள். இந்தியாபாகிஸ்தான் பிரிவினையின்போது மதவாதம் உருவாக்கிய கொடுமைகளைக் கண்ணால் கண்டு மனமுடைந்து போனவர் அவர். அதன் ஆறாத ரணங்களை  இதயத்தில் தாங்கி வாழ்ந்தவர். இனி ஒருபோதும் அப்படியொன்று இந்திய மண்ணில் நிகழாது என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்தவர்.

ஆனால் 1992ல் சூழல் மாறிவிட்டது. பாபர் மசூதியா? ராமன் பிறந்த இடமா? என்றமிகத் தேவையானசமூக ஆராய்ச்சியின் விளைவாக பாபர் மசூதியை இடிப்பதற்கான முழக்கங்கள் இந்தியாவின் மத நல்லிணக்கம் எனும் மூச்சுக்காற்றில் மீண்டும் நச்சைப் பரப்பியது. நாம் கடந்து வந்த வழிகளைப் பற்றிய புரிதல்களினாலும், சிந்தனைகளிலிருந்து உருவாகும் ஞானத்தினாலும் இதையும் கடந்து செல்லமுடியும் என்று நம்புகிறார் தாத்தா.

துவேஷத்தின் விஷப்புகைச் செய்திகளைத் தாங்கியவண்ணம் செய்தித் தாள்கள் வந்துகொண்டிருந்தன. தொலைக்காட்சிகள் இரவுபகலாக துவேஷத்தையே அறைகூவிக்கொண்டிருந்தன. தாத்தா அந்தச் செய்திகளை வெறுத்தார். புறக்கணித்தார். ஆனால் அவரது மகனும் மருமகளும் பேரனும் பேத்தியும் அடங்கிய அக்குடும்பம் அந்தச் செய்திகளை மிகுந்த பீதியுடன் பார்த்தது. எந்த நேரமும் இந்துக்களிடமிருந்து தங்களுக்கு ஆபத்து நிகழலாம் என்ற பயத்தில் அவர்களது வாழ்க்கை உறைந்தது. பள்ளிக்கு போகும் நஸீம் திரும்பி வரும் வரை அங்கு நிம்மதியின்மை நிலவியது.

நஸீமின் அண்ணன் முஷ்தாக் ஒரு நண்பனை வீட்டுக்கு அழைத்து வந்தார். இந்தியாவில் வளரும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் குறியீடானவர் அவர்! தாத்தாவின் ஞான வார்த்தைகளை அவர் விமர்சிக்கிறார். ”இந்தியத் தெருக்களில் இஸ்லாமியர்கள் நாய்களைப்போல் கொலை செய்யப்படுவது உங்களுக்குத் தெரியாதா?என்று தாத்தாவிடம் அவர் கோபமாகக் கேட்கிறார். “மதக்கலவரங்களில் கொல்லப்படுபவர்கள் இஸ்லாமியர்களோ இந்துக்களோ அல்ல! இந்த நாட்டின் ஏழை மக்கள். அதைப் புரிந்துகொள்என்று தாத்தா அவரிடம் நிதானமாக சொல்கிறார்.

1992ன் இறுதியில் மறுபடியும் ஏறத்தாழ இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு நிகரான ஒரு சூழல் இந்தியாவில் உருவாகிறது. ஆனால் அனைவருமே உறைந்த மனத்துடன் மௌனமாக இருக்கிறார்கள்! தாத்தா மிகுந்த வருத்தத்தில் விழுகிறார். இருந்தும் அவர் நஸீமுக்கு தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொண்டேயிருக்கிறார். பாபர் மசூதி இடிக்கப்படுவதற்குச் சிலமணிநேரம் முன்பே தாத்தா இவ்வுலகை விட்டுக் கடந்துபோகிறார். கலவரம் ஓயாத தெருக்களிலொன்றில் நான்கைந்துபேர் மட்டுமே சேர்ந்து தாத்தாவின் சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள்.

சயீத் மிர்சா எழுதி இயக்கிய உருது மொழித் திரைப்படம் நஸீம். நஸீம் எனும் பதின்பருவப் பள்ளி மாணவியின் பார்வையினூடாக அக்காலத்து இந்தியச் சமூகத்தின் அமைதியைக் குலைத்துவிட்ட விஷயங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறார் அவர். மீள்நினைவுகளாகக் காட்டப்படும் தாத்தாவின் அனுபவங்கள் வழியாக 1947க்கு முன்பிருந்த  இந்திய முஸ்லிம் வாழ்க்கையின் துணுக்குகள், அக்காலத்தைய மத நல்லிணக்கத்தின் சித்திரங்கள், சுதந்திரப்போராட்ட வரலாற்றில் எழுதப்படாத சில அனுபவங்கள் போன்றவற்றை நாம் காண்கிறோம்.

நஸீமின் நிகழ்கால அனுபவங்கள் வழியாக 1990களின் ஆரம்ப காலத்துப் பள்ளி வாழ்க்கை, கல்வியின் நிலைமை, அக்காலத்து பதின்பருவப் பெண்களின் எண்ணங்கள், மலிவான வணிக சினிமாவின்மேல் அவர்களுக்கு இருந்த மோகம் போன்றவை காட்டப்படுகிறது. முஸ்லிம்களுக்கு இடையே இருக்கும் ஒன்றுக்கும் அதிகமான திருமணங்கள் அக்குடும்பங்களின் குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை நஸீமின் பள்ளித் தோழியான சோயாவின் வாழ்க்கையினூடாகச் சொல்கிறார் சயீத் மிர்சா. அத்தியாவசியப் பொருட்களின் ஏறிக்கொண்டேயிருக்கும் விலைவாசி வரைக்குமான அக்காலத்தைய எண்ணற்ற சமூகப் பிரச்சினைகளை இந்தப் படம் பேசுகிது.

மதக் கலவரத்தைப் பற்றியான பீதி கனக்கும் நாட்களிலொன்றில் அப்பா, பிரிவினையின்போது நீங்கள் ஏன் பாகிஸ்தான் போகவில்லை? குறைந்த பட்சம் மதக்கலவரத்தில் சிக்காமல் தப்பித்திருக்கலாமே என்று தாத்தாவிடம் நஸீமின் அப்பா கேட்கிறார். அதற்குத் தாத்தா “உனது இளவயதில் நமது வீட்டின் முன்றிலில் வளர்ந்து நின்ற அரிதான மரம் உனக்கு நினைவிருக்கிறதா? நம் அனைவருக்கும் அந்த மரம் மிகவும் பிடித்திருந்தது. உன் அம்மா அந்த மரத்தின்மேல் உயிரையே வைத்திருந்தாள்என்று மட்டும் பதில் சொல்கிறார். நினைவுகள் மட்டுமேதான் மனித வாழ்க்கை. ஒருவன் எதையெல்லாம் நினைவில் வைத்திருக்கிறான் என்பதை வைத்து அவனது வாழ்க்கை எப்படிப்பட்டது என்று நாம் கண்டடையலாம்.

இந்தியாவின் மிக முக்கியமான உருதுக் கவிஞர்களில் ஒருவரும் நடிகை ஷபானா ஆஸ்மியின் தந்தையுமான கைஃபி ஆஸ்மிதான் இப்படத்தில் தாத்தாவாக வருகிறார். தனது 76ஆவது வயதில் ஒரு திரைப்பட நடிகராக அவர் இதில் அறிமுகமானார்! அவர் நடித்த ஒரே படம் நஸீம். அந்த நடிப்பு குறைகளற்றது அல்ல என்றாலும் ஒரு கவிஞனின் ஆளுமையும் உருவமும் அப்பாத்திரத்திற்குச் சிறந்த தனித்தன்மையை அளிக்கிறது.

களங்கமின்மையும் அறிவதற்கான ஆர்வமும் மட்டுமேயிருக்கும் ஒரு பதின்பருவப் பெண்ணின் தரப்புகளற்ற பார்வை இந்தப் படம். நஸீமாக நடித்தது அப்போது 14 வயது மட்டுமேயான மயூரி காங்கோ. அற்புதமாக அப்பாத்திரத்தைக் கையாண்டார். அவரது முகத்தில் தென்படும் உண்மையும் நன்மையும் களங்கமின்மையும் நஸீமை மறக்கமுடியாதவளாக்குகிறது. நஸீமுக்குப் பிறகு ஓரிரு வணிகப்படங்களில் நடித்த பின்னர் திரைத்துறையை விட்டு விலகினார் மயூரி.

அரவிந்த் தேசாயின் விசித்திரக் கதை (Arvind Desai Ki Ajeeb Dastan), ஆல்பெர்ட் பின்டோவுக்கு ஏன் கோபம் வருகிறது? (Albert Pinto Ko Gussa Kyun Aata Hai?), முடந்தன் சலீமுக்காக அழவேண்டாம் (Salim Langde Pe Mat Ro), இதோ! மோகன் ஜோஷி வந்து விட்டார் (Mohan Joshi Hazir Ho!) போன்ற வலுவான திரைப்படங்கள் வழியாக இந்திய நடுநிலை சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராகத் தன்னை நிலைநாட்டியவர் சயீத் மிர்சா. தனது முந்தைய படங்களில் இருந்த அறச்சீற்றத்தையும் கோபத்தையும் நஸீமில் அவர் முற்றிலுமாக கைவிட்டார்! இந்து முஸ்லிம் மதக்கலவரம் சார்ந்த ஒரு கதையாகயிருந்தும் மிகுந்த நிதானத்துடன்தான் இப்படத்தை அவர் எடுத்திருக்கிறார்.

நஸீமில் யாருமே சத்தமிட்டுக் கத்துவதில்லை. பெரிய பெரிய நிகழ்வுகள் எவையும் நேரடியாகக் காட்டப்படுவதில்லை. அதிரடித் திருப்பங்களோ பாடல் காட்சிகளோ இல்லை. சூழலில் கனத்து நிற்கும் இறுக்கத்தைப் பெரும்பாலான காட்சிகளில் பெய்துகொண்டிருக்கும் மழையும் மழைக்கு பின் நனைந்து காணப்படும் வீடுகளும் தெருக்களும் அடையாளப்படுத்துகின்றன. அமைதியின்மை ஒரு பெரும் மௌனமாக எங்கும் பரவிக்கிடக்கிறது. வீரேந்திர சைனி படமாக்கிய எளிமையானதும் நேர்த்தியானதுமான காட்சிகளும் சந்தூர் எனும் இசைக்கருவியை மையமாக வைத்து வனராஜ் பாட்டியா அமைத்த அற்புதமான பின்னணி இசையும் நஸீம் படத்தை வலிமைப்படுத்துகிறது.

தேசிய திரைப்பட மேம்பாட்டு அமைப்பின் (NFDC) 28 லட்சம் ரூபாயை வைத்து எடுக்கப்பட்ட நஸீம் 1995ல் வெளிவருவதற்கு தயாராபோது இந்தியாவின் நடுநிலை சினிமா மிக மோசமானதொரு காலகட்டத்தை எட்டியிருந்தது! சிறந்த இயக்கத்திற்கும் சிறந்த திரைக்கதைக்குமான இரண்டு தேசிய விருதுகள் கிடைத்த பின்னரும் நஸீமை வெளியிட யாருமே முன்வரவில்லை. பின்னர் NFDC இப்படத்தை மேம்போக்காக அங்குமிங்கும் ஓரிரு திரையரங்குகளில் வெளியிட்டது.

காலப்போக்கை மாற்றியமைத்த அந்த நாளிலேயே விதிவசமாக இறந்துபோகிறார் நஸீமின் தாத்தா. அங்கு இறப்பது ம் அனைவரின் வாழ்க்கையிலும் எப்போதும் நிலவ வேண்டிய கவிதை, பண்பு, வெறுப்பின்மை, பன்மைத்துவம், கருணை போன்ற குணங்கள். ஒரே அடியில் அவை எல்லாமே சரிந்து விழுந்த. இனி ஒருபோதும் அவை திரும்பி வரப்போவதில்லைஎன்று சொன்னார் சயீத் மிர்சா. தனது தனிமனித வாழ்க்கையில் எந்த மதச்சார்பும் பின்பற்றாத ஒரு தாராளவாதி சயீத் மிர்சா என்பதை நாம் மறக்கக் கூடாது.

நஸீமுக்குப் பின்னர் சயீத் மிர்சா எந்தத் திரைப்படத்தையும் இயக்கவில்லை. ஒரு திரைப்படக் கலைஞனாக இந்திய சமுதாயத்திடம் சொல்வதற்கு நஸீமைத் தாண்டி தன்னிடம் எதுவுமில்லை என்று சொல்லியவண்ணம் திரைப்படத் துறையைவிட்டு அவர் விலகிப்போனார். கலைகளிலும் திரைப்படங்களிலும் சாதிமத உணர்வுகளை விடாமல் கடைப்பிடித்துக் கொண்டேயிருக்கும் நமது இனவாத மனநிலையின் நெற்றிப்பொட்டில் அறைந்தபடியே.

Anthimazhai- January 2015