20130109

ரவி ஷங்கரின் பிரிய சிஷ்யன்



ஏ ஆர் ரஹ்மான் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா? இல்லையேல் பாலமுரளீகிருஷ்ணா கிடைக்குமா? எஸ் பி பாலசுப்ரமணியமாவது? பண்டிட் ரவி ஷங்கர் மறைந்துபோன டிசம்பர் 11 காலையில் ஒரு முக்கிய மலையாளத் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து அதன் இசைத்துறை மேலாளர் என்னை அழைத்து கேட்ட கேள்விகள் இவை! சில முக்கிய  இசைப் பிரபலங்களை ரவி ஷங்கரைப்பற்றி பேசவைத்து அதை ஒளிபரப்பணும்! அது தான் நோக்கம்! ரவி ஷங்கரைப் பற்றி பேச இவர்களையெல்லாம் விட தகுதியான ஒருவர் சென்னையில் இருக்கிறார் என்று சொன்னேன். யார் அவர்? இளையராஜாவா? என்றார். இல்லை அவர் தான் பண்டிட் ஜனார்தன் மிட்டா என்றேன். எனக்கே அவரை தெரியாதே! அப்போது மற்ற யாருக்குமே அவரைத் தெரிய வாய்ப்பில்லையே என்றார். உங்களுக்கு விலாயத் கான் யார் என்று தெரியுமா? என்று கேட்டேன். எங்கேயோ கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் சரியாகத் தெரியாது என்றார். அன்னபூர்ணா தேவியைத் தெரியுமா? என்று கேட்டேன். இல்லை என்றார். நிகில் பானர்ஜி? இல்லை! ஷாஹித் பர்வேஸ்? அதுவும் இல்லை! அப்போது பண்டிட் ஜனார்தன் மிட்டாவை உங்களுக்கு தெரியாததில் எந்த ஆச்சரியமுமில்லை என்று சொல்லி நான் அழைப்பைத் துண்டித்தேன்.

சிதாரின் ஒரு மாபெரும் சிகரம் ரவி ஷங்கர் என்றால் அதன் இன்னொரு மாபெரும் சிகரம் உஸ்தாத் விலாயத் கான். நிகில் பானர்ஜி சிதாரின் மற்றொரு சிகரம். அன்னபூர்ணா தேவியும் சிதாரில் அசாத்தியமான மேதமை கொண்டவர். அவர் ரவி ஷங்கரின் முதல் மனைவியாக இருந்தவர்!  அன்னபூர்ணா தேவியின் அப்பா உஸ்தாத் அலாவுதீன் கான் இவர்கள் அனைவருக்குமே குரு! ஷாஹித் பர்வேஸ் தான் நிகழ் காலத்தின் சிதார் அதிசயம் என்றால் பண்டிட் ஜனார்தன் மிட்டா தென்னிந்தியாவின் ஆகச்சிறந்த சிதார் கலைஞன்.

ரவி ஷங்கரின் குறைவான சீடர்களில் முக்கியமானவர் பண்டிட் ஜனார்தன் மிட்டா. கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ரவி ஷங்கருடன் நெருக்கமாக பழகியவர். ஆனால் அவரது வாழ்க்கையின் முக்கியமான 45 ஆண்டுகள் திரை இசையிலேயே கழிக்க நேர்ந்தமையால் இசையமைப்பாளர்களையும் இசைக்கலைஞர்களையும் தவிர இசை ரசிகர்களுக்கோ பொதுமக்களுக்கோ அவரைத் தெரியாமல் போய் விட்டது.

பண்டிட் ஜனார்தனின் இசையுடனான எனது தொடர்பு ஆரம்பித்தது சலில் சௌதுரி இசையமைத்த மலையாளப் படமான மதனோல்ஸவம் வழியாகத்தான். அதில் வரும் ‘ சாகரமே சாந்தமாக நீஎன்ற பாடல் பின்னர் தமிழிலும் காலமகள் மேடைநாடகம்என்று மொழிமாறி வெளிவந்தது. எனது வாழ்க்கையில் நான் கேட்ட மிக உணர்ச்சிகரமான பாடல்களில் ஒன்று அது. அதில் ஒலிக்கும் சிதார் இசையின் துயரம் ததும்பும் பகுதிகளை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. மலையாளத்தின் எனது இன்னுமொரு ஆதர்ச இசையமைப்பாளரான பாபுராஜ்ஜின் பல பாடல்களில் ஜனார்தனின் சிதார் இசை இடம்பெற்றது. ஹிந்துஸ்தானி இசையில் பெரும் மோகம் கொண்டிருந்தவர் பாபுராஜ். கஸல், தும்ரி, தாத்ரா பாணிகளிலான பல பாடல்களைத் தந்தவர். அத்தகைய பாடல்களில் ஜனார்தனின் சிதாரை எப்போதுமே அழகாக அவர் பயன்படுத்தினார்.

ஒரு சென்னைவாழ் மனிதனானதன் பின் எனது பிரியத்திற்குரிய பல பாடல்களில் அசாத்தியமான கருவி இசைகளை வாசித்த பல இசைக்கலைஞர்களை தேடிப்போய் பார்த்து அவர்களுடன் பலமணிநேரங்களை கழித்திருக்கிறேன் நான். புல்லாங்குழல் அதிசயம் குணசிங், வயலின் மேதை ராமசுப்பு போன்றவர்கள் அவர்களில் முக்கியமானவர்கள். பண்டிட் ஜனார்தனையும் அவ்வாறு தான் நான் முதலில் சந்தித்தேன். அந்த தொடர்பு இன்றும் தொடர்கிறது.

சலில் சௌதுரியின் பிரியத்திற்குரிய சிதார் கலைஞனாக இருந்த பண்டிட் ஜனார்தனுக்கு, அவரது குருஜி ரவி ஷங்கருக்கும் சலில் சௌதுரிக்கும் இடையே ஏற்பட்ட இசைக் கருத்து மோதலைப் பற்றி தெரியவில்லை. பரக் எனும் படத்தின் ஓ ஸஜ்னா பர்கா பஹார் ஆயீபோன்ற தனது பல பாடல்களில் சலில் சௌதுரி மேற்கத்திய இசை உத்தியான சமாந்தர மெட்டு அல்லது ஓப்லிகாடோ (Obligato) வை சிதாரில் தான் அமைத்திருந்தார். அதற்கு கடும் எதிர்பை தெரிவித்த ரவி ஷங்கர் இந்திய இசையின் பொக்கிஷமான சிதாரை இப்படி மாசுபடுத்த சலில் சௌதுரிக்கு உரிமை இல்லை என்று கோபமடைந்தார்.

இசையில் இந்தியனாக இருப்பது எப்படியென்றோ வெளிநாட்டிற்கு செல்வது எப்படியென்றோ ரவி ஷங்கரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நிலமையில் நான் இல்லை என்று பதிலளித்தார் சலில் சௌதுரி. தனது நிலைபாடு தவறாகயிருந்தது என்றும் சலில் சௌதுரி அமைத்த அவ்விசை பெரும் படைப்பூக்கத்தால் ஆனது என்றும் பின்னர் தன்னை திருத்திக் கொண்டார் ரவி ஷங்கர். சலில் சௌதுரி, மதன் மோகன், எஸ் டி பர்மன் போன்றவர்களைப் போல் தன்னால் ஒருபோதும் திரையிசை அமைக்க முடியாது என்றும் அவர் சொன்னார்! 
  
பண்டிட் ரவி ஷங்கர் மறைந்த நாள் மாலையில் பண்டிட் ஜனார்தன் என்னை அழைத்தார். அவரது எண்ணை பார்த்ததும் ‘குட் ஈவ்னிங் பண்டிட்ஜிஎன்றேன். இந்த மாலை எனக்கு எப்படி இனியதாக இருக்கும் ஷாஜி? என்று சோர்வாகக் கேட்டார். அவரது குரல் சோகபாரத்துடன் இருந்தது. தன் உயிருக்கு நிகராக அவர் நினைத்து வணங்கிய அவரது ‘குருஜிபண்டிட் ரவி ஷங்கரைப் பற்றிய நினைவுகளில் அவரது இதயம் அழுதுகொண்டிருப்பதை என்னால் உணரமுடிந்தது.

உத்தரபிரதேச மானிலம் பெனாரஸில் பிறந்தவர் ரவி ஷங்கர். அவரது தாய்மொழி பெங்காலி. அவரது அப்பா ஒரு வழக்குறைஞர். அண்ணன் உலகப்புகழ் பெற்ற இந்திய செவ்வியல் நடனமேதை உதய ஷங்கர். தனது 10 வயதில் அண்ணனின் நடனக்குழுவில் ஒரு நர்த்தகராக தனது கலை வாழ்க்கையை ஆரம்பித்தார் ரவி ஷங்கர். அப்போதிலிருந்தே வெளிநாடுகளில் பயணமும் ஆரம்பித்தார். 14 ஆவது வயதில் உஸ்தாத் அலாவுதீன் கான் சிதார் இசைப்பதைக் கேட்டு அதில் மயங்கிப்போன ரவி ஷங்கர் நடனத்தை விட்டுவிட்டு உஸ்தாதின் சீடராக மாறினார். இசைக்காகவே தன்னை அர்ப்பணித்தார். 20 வயதிற்குள்ளே அவர் ஒரு இசை மேதையாக உருமாறினார். இந்தியா முழுவதும் புகழ்பெற்றார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் எண்ணற்ற இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

ஜனார்தன் மிட்டா ஹைதராபாதில் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தவர். அவரது அப்பாவும் வழக்கறிஞர். அக்காவுக்கு இசை சொல்லிக்கொடுக்க ஒரு இசை ஆசான் அவரது வீட்டில் வந்து போய்க்கொண்டிருந்தார். அவரிடமிருந்து அவ்வப்போது அக்கா சிதாரும் பயின்று வந்தார். அதை கவனிக்க ஆரம்பித்த ஜனார்தன் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சிதாரை எடுத்து சுயமாக இசைப் பயிற்சி செய்தார். வெகு விரைவில் சிதார் நன்றாக இசைக்க ஆரம்பித்தார்.

வானொலி நிகழ்ச்சிகளில் சிதார் இசைக்க அவர் அழைக்கப்பட்டார். யாரிடமிருந்தும் முறையாக இசை கற்றுக்கொள்ளாத அவர் ஹைதராபாத் வானொலியின் ஆஸ்தான சிதார் கலைஞராக மாறினார்! 1955ல் ரவி ஷங்கர் ஒரு இசை நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் வந்தபோது அவரை சந்திக்க ஜனார்தனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு எளிய உள்ளூர் சிதார் கலைஞன் என்று அவரை ரவி ஷங்கருக்கு அறிமுகம் செய்து வைத்தனர். எதாவது ஒன்றை வாசித்து காட்ட அவர் ஆசைப்பட்டார் ஆனால் இப்போது வேண்டாம். அடுத்த முறை அவசியம் கேட்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார் ரவி ஷங்கர்.

விரைவில் ரவி ஷங்கர் மீண்டும் ஹைதராபாத் வந்தார். பதற்றத்துடன் ஏதோ சிலதை அவருக்கு வாசித்து காட்டினார் ஜனார்தன். அதைக் கேட்டு ரவி ஷங்கர் உனக்கு சிதார் இசைப்பதன் அடிப்படைகள் அறவே தெரியாது! ஆனால் அதன் முதுநிலை விஷயங்கள் பலவற்றை அனாயாசமாக வாசிக்கிறாய்என்று சொல்லி ஆச்சரியத்துடன் சிரித்தார். ஜனார்தன் அவரது காலில் விழுந்து நமஸ்கரித்து எனக்கு யாரும் சொல்லித் தந்ததில்லை. என்னை உங்கள் சீடனாக ஏற்றுக்கொண்டு எனக்கு இசையில் நல்வழி காட்டவேண்டும் குருஜீ“ என்று வேண்டினார். தடைகள் எதுவுமே சொல்லாமல் அதை ஏற்றுக்கொண்டார் ரவி ஷங்கர். தில்லியில் தான் ரவி ஷங்கர் அப்போது வாழ்ந்து வந்தார். 1956 இல் இருந்து அவ்வப்போது தில்லி சென்று ரவி ஷங்கரிடமிருந்து சிதார் பயின்றார் ஜனார்தன்.

ரவி ஷங்கர் அந்த காலகட்டத்திலிருந்தே இந்தியாவில் குறைவாகத் தான் இருந்து வந்தார்! அவர் வெளிநாடுகளில் பயணம் செய்து உலகின் முக்கியமான அரங்குகளில் சிதார் இசைக்க ஆரம்பித்திருந்தார். அமெரிகாவில் பீட்டில்ஸ் இசைக்குழுவின் கிதார் கலைஞரும் பாடகருமாகயிருந்த ஜார்ஜ் ஹாரிசனின் நண்பராக மாறிய ரவி ஷங்கர் அவரது சிதார் குருவாகவும் மாறினார். ரவி ஷங்கரின் பாதிப்பினால் நார்வீஜியன் வுட்போன்ற சில பீட்டில்ஸ் பாடல்களில் சிதாரை பயன்படுத்தினார் ஹாரிசன். உலக இசையின் தந்தைஎன்று ரவி ஷங்கரை அழைத்தவர் ஜார்ஜ் ஹாரிசன்.

மேற்கத்திய செவ்வியல் வயலின் இசை மேதை யஹூதி மெனூகினுடன் சேர்ந்து இசைத்து அவர் வெளியிட்ட கிழக்கு மேற்கை சந்திக்கிறது (East Meets West) என்ற தொகுப்பு உலகம் முழுவதும் பிரபலமானது. பல ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக செவ்வியல் இசையமைப்பாளர் ஃபிலிப் க்ளாஸுடன் சேர்ந்து அவர் வழங்கிய நடைவழிகள் (Passages) தொகுப்பும் மிகப்பிரபலம். வெகுஜென இசையின் உச்ச நட்சத்திரங்களான பாப் டிலன், எரிக் க்ளாப்டன் போன்றவர்களுடன் சேர்ந்தும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார் ரவி ஷங்கர். உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு இந்திய இசைக்கலைஞனாக மாறியது மட்டுமல்லாமல் இந்திய செவ்வியல் இசையை மேற்கத்திய உலகிற்கு அறிமுகம் செய்தவர் என்கிற புகழும் அவருக்கு சொந்தமாயிற்று.

தென்னிந்தியாவில் குறிப்பாக ஹைதராபாதில் செவ்வியல் சிதார் இசைக்கு எந்த வாய்ப்புகளும் அப்போது இருக்கவில்லை. இசையில் தொடரவா இல்லை வேறு எதாவது வேலைக்கு போகவா என்று முடிவெடுக்க முடியாமல் ஜனார்தன் தத்தளித்த காலம் அது. 1958ல் ஹைதராபாதின் சாரதி ஒலிப்பதிவகத்திலிருந்து ஒரு திரைப்படத்துக்கு சிதார் இசைக்க அவருக்கு அழைப்பு வந்தது. அதை அவர் எளிதாகச் செய்து முடித்தார். நல்ல ஊதியமும் கிடைத்தது.

தொடர்ந்து திரைத்துறையிலிருந்து பல வாய்ப்புகள். திரைத்துறையில் சிதார் இசைப்பது தான் இனிமேல் தனது வேலை என்று முடிவெடுத்த அவர் 1959 ஜனவரியில் அப்போது தென்னிந்திய சினிமாவின் மைய நகரமாகயிருந்த சென்னைக்கு இடம் பெயர்ந்தார். இங்கிருந்து கொண்டு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா மொழித் திரைப்படங்களிலும் பக்திப்பாடல்களிலும் அவர் பணியாற்றினார். அவ்வப்போது ஹிந்தி, பெங்காலி, ஒரியா மொழிப்படங்களிலும் சிதார் இசைத்தார்.

மாஸ்டர் வேணு, ராஜேஸ்வர ராவ், சலபதி ராவ், கண்டசாலா போன்றவர்களின் இசையில் சிதார் இசைக்க ஆரம்பித்த அவர் சலில் சௌதுரி, லக்‌ஷ்மிகாந்த் ப்யாரேலால், விஸ்வநாதன் ராம்மூர்த்தி, கே வி மகாதேவன், பாபுராஜ், இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான் என இந்தியாவின் ஏறத்தாழ அனைத்து இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியிருக்கிறார். சொல்லப்போனால் தென்னிந்திய வெகுஜென இசையில் நாம் கேட்கும் 90 சதவிகித சிதார் இசைப்பகுதிகளுமே இசைத்தவர் ஜனார்தன் தான்! சினிமாக்காட்சிகளின் உணர்வுகளை மேம்படுத்தும் வகையில் பின்னணி இசைப்பகுதிகளை வழங்குவதில் அவருக்கு தனித்திறன் இருந்தது. வசனங்களே இல்லாத ‘பேசும் படம் சினிமாவை ஒரு முறை கவனித்துப் பாருங்கள். அதில் ஒலிக்கும் உணர்ச்சிகரமான சிதார் இசையின் அழகுகளை நம்மால் ஆழமாக உணரமுடியும்.

ஒரு இந்திய இசைஞனால் அடையக்கூடிய அத்தனை உயரங்களையும் ரவி ஷங்கர் அடைந்தார். பாரத் ரத்னா வரைக்குமுள்ள அனைத்து இந்திய அரசு வெகுமதிகளும் அவருக்கு கிடைத்தது. பெரும்பாலும் அமெரிகாவிலேயே தங்கினார். ஆண்டில் இரண்டு மாதம் மட்டுமே அவர் இந்தியாவில் இருந்தார். அப்போது அவர் எங்கிருப்பாரோ அங்குபோய் அவரிடமிருந்து இசைப்பயிற்சியை தொடர்ந்தார் பண்டிட் ஜனார்தன். தனது சொந்த ஊரான பெனாரஸில் ரவி ஷங்கருக்கு இருந்த மூன்று ஏக்கர் பண்ணை வீட்டில் ஒவ்வொரு ஆண்டும் பத்துநாள் தங்கி இசை பயின்றார். கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் ரவி ஷங்கரிடமிருந்து சிதார் பயின்றவர் பண்டிட் ஜனார்தன்!

ஜனார்தனும் பல உலக நாடுகளுக்கு சென்று செவ்வியல் இசைக் கச்சேரிகளும் திரையிசை கச்சேரிகளும் நடத்தியிருக்கிறார். இந்தியாவிலும் பல இடங்களில் அவரது செவ்வியல் இசை கச்சேரிகள் இடம் பெற்றிருக்கிறது. தென்னிந்தியாவில் நடந்த ரவி ஷங்கரின் சில கச்சேரிகளில் அவருடன் இணைந்து மேடையில் தோன்றி சிதார் இசைத்திருக்கிறார் ஜனார்தன். ஃபிலிப் க்ளாஸ் – ரவி ஷங்கரின் நடைவழிகள்இசைத்தொகுப்பில் ஜனார்தன் இசைத்த சில பகுதிகளும் இடம்பெற்றன. தனது செவ்வியல் இசையின் சில இசைத்தட்டுகளையும் ஒலிநாடாக்களையும் அவர் வெளியிட்டுமிருக்கிறார். சில தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார்.

தென்னிந்திய திரை இசைக்கலைஞர்கள் அமைப்பின் தலைவராக பல ஆண்டுகள் இருந்திருக்கிறார். அப்போது இசைக்கலைஞர்களின் ஊதிய உயர்வுக்கான நடவடிக்கைகள், ஏழ்மையில் வாழும் இசைக்கலைஞர்களுக்காக பல புதிய திட்டங்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்தியவர் அவர். இப்போது முழுநேரமும் ஹிந்துஸ்தானி செவ்வியல் இசைக்காக உழைத்து வருகிறார். ஹிந்துஸ்தானி இசைக்கென்றே விஸ்வ கலா சங்கம எனும் சபாவை சென்னையில் நடத்தி வருகிறார். ரிம்பா சிவா எனும் இளவயது பெண் தபலா கலைஞருடன் சேர்ந்து இசைக் கச்சேரிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

இந்தியக் கருவி இசையை உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கச் செய்தவர் எனது குருஜி. இங்குள்ள இசைக்கலைஞர்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தியதிலும் அவர்களுக்கு இந்த சமூகத்தில் உரிய மரியாதை கிடைக்க வைத்ததிலும் எனது குருஜி ஆற்றியது வரலாற்று சிறப்பு மிக்க பங்கு”  என்று சொல்கிறார் ஜனார்தன் மிட்டா. இசையில் ஒருபோதும் வஞ்சம் காட்டக் கூடாது என்று சொல்லி ஹிந்துஸ்தானி இசையின் நுட்பங்களையும் ரகசியங்களையும் தனக்கு சொல்லித்தந்த தனது குருவை ஒரு அவதாரமாக வழிபடுகிறவர் ஜனார்தன் மிட்டா.

பண்டிட் ரவி ஷங்கர் இன்று நம்முடன் இல்லை. பண்டிட் ஜனார்தன் மிட்டா இருக்கிறார். உலகில் இன்று உயிருடனிருக்கும் பத்தோ பதினைந்தோ மிகச்சிறந்த சிதார் கலைஞர்களில் ஒருவர் தான் அவர் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? பண்டிட் ஜனார்தன் மிட்டாவின் அதிசய வல்லமைகொண்ட சிதார் இசையையும் அவரது வாழ்நாள் இசைச் சேவையையும் என்றைக்கு தான் நாம் உறிய மரியாதைகளுடன் கௌரவிக்கப் போகிறோம்?