துயரத்திற்கு ஒரு இரங்கல் கீதம் (Ode to Sadness)
பாப்ளோ நெரூதா
துயரம்
ஊனமுற்ற ஏழு கால்களால்
சாணிமேல் தவழும் அருவருப்பான வண்டு
விஷச் சிலந்திவலையில் தொங்கும்
முட்டை
மூளை சிதறிப்போன பெருச்சாளி
இரவு வேசியின்
எலும்புக்கூடு
உனக்கு இங்கே செல்வழி கிடையாது
உள்ளே நீ நுழையக் கூடாது
தூரம் போ
உனது கரிய குடையுடன் கிழக்கே
நோக்கிப் போ
உனது பாம்பு பற்களுடன் வடக்கே
நோக்கிப் போ
ஏன் எனில்
இங்கே ஒரு கவிஞன் வாழ்கிறான்
ஒரு துயரமும் இந்த வாசற்படி
தாண்டக்கூடாது
இந்த ஜன்னல்கள் வழியே உலகின்
சுவாசக்காற்று உள்ளே வருகிறது
புத்தம்புதிய ரோஜாப் பூக்கள்
மனிதர்களின் வெற்றிகளை
பூத்தையல் செய்த கொடிகள்
இல்லை
உனக்கு இங்கே செல்வழி இல்லை
உனது வௌவால் சிறகுகள் அசைத்துக்கொள்
உனது தோல் மடிப்புக்களிலிருந்து உதிரும் அசிங்கமான இறகுகளை
நான் மிதித்து துவைப்பேன்
காய்ந்து கறுத்துபோன உனது
பிணத்தின் தூசித் துரும்புகளை
காற்றின் நான்கு மூலைகளூக்கு
பெருக்கியகற்றுவேன்
உனது கழுத்தை நான் முறுக்கிப்
பிழிவேன்
உனது கண்களை ஊசி நூல்களால்
தைத்து மூடுவேன்
உனது சவப்போர்வைக்கு நான் தையலிடுவேன்
துயரமே
உனது எலும்பு நொறுக்குகளை
நான் குழிதோண்டிப்
புதைத்திடுவேன்
ஒரு ஆப்பிள் மரத்தின்
வசந்தகாலத்திற்கு கீழே....
தமிழில் : ஷாஜி