20130703

இந்தக் கவிதை - எல்மா மிட்ச்செல்

இங்கிலாந்து நாட்டில் 1919ல் பிறந்து 2000ல் மறைந்தவர் எல்மா மிட்ச்செல். மிகக் குறைவான கவிதைகளைத் தான் எழுதினார் என்றபோதிலும் இங்கிலாந்தின் நவீனப் பெண் கவிஞர்களில் மிக முக்கியமானவர் எல்மா.   

இந்தக் கவிதை (This Poem)
எழுதியவர் - எல்மா மிட்ச்செல் (Elma Mitchell)
மொழி - ஆங்கிலம்
நாடு - இங்கிலாந்து

இந்தக் கவிதை

இந்தக் கவிதை மிக ஆபத்தானது
இதைக் குழந்தைகளின் கைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்
வயது வந்தோரிடமிருந்தும் இதைத் தொலைவில் வைக்கவும்
ஏன் எனில் அவர்கள் இதை முழுவதுமாக விழுங்கி
விரும்பத்தகாத பக்க விளைவுகளைச் சந்திப்பார்கள்
பொது இடத்தில் கவனக்குறைவாக வைக்கப்பட்ட
அடையாளம் தெரியாத ஒரு கவிதையை கண்டடைந்தால்
அதை நீங்களே கையாள முயலாதீர்கள்
மூடி முத்திரையிடப்பட்ட உறை ஒன்றில்
அடுத்துள்ள அறிவு மையத்திற்கு அனுப்பி வையுங்கள்
அங்கே நிபுணர்கள் அதைப் படித்து பொருள் விளக்கம் செய்வார்கள்
வினைகளில்லாமல், யாருக்குமே தீங்கில்லாமல்
மிக எளிமையான ஒரு கவிதை கூட
மனித உணர்வுகளுக்கு எதிரான உங்கள் தடுப்புத் தன்மையை
முற்றிலுமாகத் தகர்த்து விடும்
கவிதைகளுக்கு மேல் அரசு எச்சரிக்கை ஒன்று அவசியம்
சொற்கள் உங்களது இதயத்தை அபாயகரமாக பாதிக்கக் கூடியவை

தமிழில் : ஷாஜி