20130727

கடலோரக் காற்றின் நடன இசை - பைலா


கொழும்பின் லாவினியா மேடு கடற்கரை ஓரத்திலுள்ள சிங்கம் எனும் உணவு விடுதியின் திறந்த வெளியில் இரவு உணவுக்காக சில வாசக நண்பர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது விடுதியின் உள்ளே இருந்து நடுத்தர வயதைச் சேர்ந்த இரண்டு பேர் கையில் கிட்டார்களுடன் வந்தனர். தர்பூகா எனும் அராபிய-ஆஃப்ரிக குவளை முழவுடன் ஒரு இளைஞனும் வந்தான். ஒவ்வொரு உணவு மேஜைக்கருகிலும் சென்று நின்று அங்கிருப்பவர்களிடம் சிங்களத்தில் அவர்கள் சிந்துக் கின்ன?’ (பாட்டு பாடட்டுமா?) என்று கேட்டார்கள். யாருமே அவர்களைப் பாடச் சொல்லவில்லை.

நான் நண்பர் இன்சாபிடம் அவர்களை அழைத்துவரக் கேட்டேன். உற்சாகமாக எங்களுக்கு அருகில் வந்து நின்று இசைக்குறிப்புகளை எடுத்து வைத்து கிட்டார்களில் சுருதி மீட்டினார்கள். எந்த பாட்டு வேண்டும்? என்று குழுவின் இசை நடத்துனரான மிந் கேட்டார். நல்லதாக எதாவது ஒரு சிங்கள பைலா பாடலை பாடச் சொன்னேன். நான் ஒரு இந்தியன் என்று தெரிந்தவுடன் அவர் ‘சுராங்கனி சுராங்கனி பாடட்டுமா என்று கேட்டார். ஐயோ! வேண்டாம்என்றேன். மாறாக அவர்கள் பாடிவரும் முக்கியமான பைலா பாடல்களில் ஏதாவது ஒன்றை எடுத்து விடும்படியாக கேட்டேன். சுருதி சுத்தமான கிட்டார் இசையின் துணையுடன் அற்புதமான பைலா பாடல் ஒன்று பீறிடத் துவங்கியது.

சுரலியக வகே ருவீனா
முது கதி குண ஹரி அகனா.........

சொர்க்க லோகத்துப் பெண் போன்றவள் நீ
மிருதுவான குணஇயல்புகள் கொண்டவள்
நதிகளிலும் வயல்வெளிகளிலும் நிரம்பியிருக்கும்
இனிமையான பாடல்களைப்போல் அழகானவள்....

இனிமையும் அழகும் துள்ளலும் ஒருங்கே இணைந்த அந்த அதிசயப்பாடலை எனக்கு மொழிபெயர்த்துச் சொன்னார் இன்சாப். பைலா இசையின் அடிநாதமான, தமிழில் டப்பான் என்று அழைக்கப்படும் ஆறு/எட்டு தாளத்தில் அமைந்த பாடல். அந்த மூன்று எளிய கலைஞர்கள் சேர்ந்து மிகக் குறைவான கருவிகளை இசைத்தபடியே பொருத்தமான இசை ஒருமிப்பில் (Harmony) அதைப் பாடி வெளிப்படுத்திய விதம் இருக்கே! உணர்ச்சிகரம்...உலகத்தரம்..!

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சோமசிரி ஃபெர்னான்டோ எனும் பாடகர் முதலில் பாடியது அப்பாடல் என்று தெரிய வந்தது. பல நூற்றாண்டுகள் பழமையான பைலா இசையின் எக்காலத்திற்குமுரிய பாடகரில் ஒருவரான எம் எஸ் ஃபெர்னான்டோ என்பவர் பிறந்து வளர்ந்ததுமே அப்போது நாங்கள் அமர்ந்திருந்த லாவினியா கடலோரப் பகுதியில் தான் என்பதும் அறிய நேர்ந்தது. பைலா இசையின் தலைநகரம் என்றே அழைக்கப்படும் மொறட்டுவை பகுதியும் அங்கிருந்து வெகுதூரமில்லை. எண்ணற்ற பைலா இசைக் கலைஞர்களுக்கு பிறவி அளித்த இடங்கள்தான் கொழும்பின் அப்பகுதி.  

உலகின் பெரும்பாலான கடலோரங்களிலிருந்து உயரும் மக்கள் இசை வடிவங்களுக்கு பல ஒற்றுமைகள் இருப்பது அவ்விசை வடிவங்களை கூர்ந்து அவதானிக்கும்போதெல்லாம் எனக்கு விளங்கியிருக்கிறது. இலங்கை, இந்தியா, பிரேசில், ஜமைக்கா, அர்ஜன்டீனா, ஆஃப்ரிகா என எந்த பேதமும் அதற்கு இல்லை. முதலில் இதை நான் உணர்ந்தது பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் மஹாராஷ்டிரா, கோவா கடலோரப் பகுதிகளில் இருக்கும் மராத்திய, கொங்கணி மொழிகளிலான சில பாடல்களைக் கேட்டபோது தான். இலங்கை நாட்டாரிசை என்று உலகம் முழுவதும் அறியப்படும் பைலாவிற்கும் கோவாவின் சில நாட்டார் இசை வடிவங்களுக்கும் இருப்பது ஒற்றுமைகள் அல்ல! அவை கிட்டத்தட்ட ஒன்றே தான்.

உதாரணமாக மறாத்தி மொழியில் ஒலிக்கும் கால்யான் ஸாக்லி ஸோண்யாச்சி, ஹி போரி கோணாச்சிஎன்கின்ற பாடல். கழுத்தில் தங்கச் சங்கிலியுடன் உலாவரும் இந்த அழகான பெண்கொடி யார் மகளோ?என்று அர்த்தம் வரும் அப்பாடலின் இசையும் தாளக்கட்டும் அப்படியே இலங்கை பைலா இசை தான்! இந்த வகையில் முன்பு கேட்ட சொர்க்க லோகத்துப் பெண் போன்றவளும் இந்த கழுத்தில் தங்கச் சங்கிலி மின்னும் பெண்ணும் சகோதரிகளே! ஆனால் அடிப்படையில் பைலா ஒரு இலங்கை இசை வடிவம் தானா என்கிற சந்தேகம் அந்த மறாத்தியப் பாடல் எனக்குள் ஏற்படுத்தியது. பைலாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றான ஒருமிப்பு இசை ஆசியக்கண்ட நாடுகளிலிருந்து உருவான எந்தவொரு இசைவடிவத்திலும் இருந்ததில்லை என்பது இன்னொன்று.   

கூட்டம் சேர்ந்து நடனமாடும் நடன நிகழ்ச்சிகளுக்கு ஆங்கிலத்தில் ‘பால்’ (Ball) என்று பெயர் சொல்வதுண்டு. ‘பாலரெ’ (Ballare) என்கின்ற லத்தீன் மொழி வார்த்தையிலிருந்து தான் அதன் பிறவி. பாலெரீனா (Ballerina) என்றால் பாலே (Ballet) என்கின்ற நடனத்தை சிறப்பாக ஆடும் பெண்மணி என்று பொருள். அடிச்சொல் வரலாற்றின்படி நடனத்திற்காக என்று பொருள் வரும் பைலார் என்கின்ற போர்த்துகீசிய வார்த்தையும், நாம் நடனமாடுவோம்என்று பொருள் வரும் பைலாமோஸ் என்கின்ற ஸ்பானிய மொழி வார்த்தையும் அந்த ‘பாலரெஎனும் சொல்லில் இருந்து தான் பிறந்திருக்கிறது. ஆகையினால் பைலா என்பது நடனத்தைக் குறிக்கும், லத்தீன் பின்புலம் கொண்ட ஒரு போர்த்துகீசிய மொழி வார்த்தை. பைலா இசையுமே போர்த்துகீசிய பின்புலத்திலிருந்து வந்த ஒரு இசை வடிவம்.

இந்தியாவில் கொங்கணி, மறாத்திய மொழிகளில் மட்டுமே தான் பாரம்பரிய பைலா பாடல்கள் இருக்கின்றன. அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வந்திறங்கிய போர்த்துகீசியர்கள் அதற்கும் கால் நூற்றாண்டு முன்பு கோவாவை பிடித்திருந்தனர். அடிமை வர்த்தகத்தையே தங்களது நாட்டின் பொருளாதார அடிப்படையாகக் கொண்டிருந்த போர்த்துகீசியர்கள் அந்நாட்டின் பெரும்பங்கு வரும் கடலோரப் பகுதிகளிலிருந்து ஏழை எளிய மக்களை அடிமைகளாக பிடித்து பாய்க் கப்பல்களில் ஏற்றி, தாங்கள் கீழ்ப்படுத்தியதோ கீழ்ப்படுத்தப் போவதோ ஆன வெவ்வேறு நாடுகளுக்கு கொண்டு சென்றனர்.

கிட்டத்தட்ட மாதங்களும் வருடங்களும் நீளும் கடல் பயணங்கள் அவை! உயிர் தப்பிப்பதே அரிதாகயிருந்த அப்பயணங்களுக்கு பலவந்தமாக கொண்டுவரப்பட்ட அம்மக்களின் ஒரே ஆறுதல் தங்களது மண்ணின் இசையாகத்தானே இருந்திருக்கக் கூடும்? காப்பிலிகள் என்று அழைக்கப்பட்ட ஆஃப்ரிக்கர்கள் பெருமளவில் இந்த அடிமை கூட்டத்திற்குள்ளே சேர்க்கப்பட்டனர். அவர்களும் அந்த துயரப் பயணங்களில் துணையாக தங்களது இசை வடிவங்களை கூடவே கொண்டுவந்தனர்கள். பின்னர் ந்த ஆஃப்ரிக இசை வடிவங்களின் தாக்கம்தான் பைலா இசையில் அதிகமும் மேலோங்கியது.

ஆசியாவில் இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் தான் ஆஃப்ரிக அடிமைகளை போர்த்துகீசியர்கள் அதிகமாக இறக்கினர். இந்தியாவில் அவர்கள் மிகக் குறைவாகத்தான் இறக்கப்பட்டனர். பைலா இசை இந்தியாவில் பரவாதமைக்கு இதுதான் ஒரு காரணம் எனப்படுகிறது. இன்னொன்று இந்தியப்பகுதிகளில் பலவகையான இசைகள் அப்போதே பிரபலமாக இருந்தன என்பது. கிருத்துவ தேவாலய இசையின் பாணியில் மக்களுக்கான இசையை உருவாக்கினால் அது மதப் பிரச்சாரத்திற்கு உதவும் என்று அறிந்த போர்த்துகீசிய பாதிரியார்கள் ஏற்கனவே அங்கிருந்த இசை வடிவங்களுடன் தங்களது பக்தி இசையைக் கலந்து ஜெலோ, தேவாச்சிய கீதம், கேல் போன்ற புது வகை கலப்பு இசைகளை உருவாக்கினார்கள். பின்னர் அவையுமே கோவாவின் ’நாட்டார்’ இசை வடிவங்களாக மாறின.  

கோவாவை ஒரு சின்ன இலங்கை என்றே குறிப்பிடலாம். ஒரே காலகட்டத்தில் போர்த்துகீசிய ஆட்சியின் கீழிருந்த இடங்கள். அந்த காலத்தில் ஆண்டுக்கு ஒரு முறை பிரம்மாண்டமான துடுப்புக் கப்பல்களின் தொடரணிகள் இலங்கைக்கும் கோவாவிற்கும் இடையே பயணித்தன. யானைகள், தேங்காய், இலவங்கப்பட்டை போன்றவற்றுடன் பைலாவும் அக்கப்பல்களில் அங்கும் இங்கும் பயணித்திருக்கக் கூடும். அறுநூறு ஆண்டுகள் தாண்டிய பின்னரும் கொங்கணி, மறாத்தி மொழிகளில் நேரடி பைலாவாகவோ அதன் மாறுபட்ட வடிவங்களாகவோ இன்றும் பைலா உயிருடன் இருக்கிறது என்பது அந்த இசையின் வலிமையைத் தானே உணர்த்துகிறது?

போர்த்துகீசியர்கள் தந்த கிட்டார், யுகுலேலே, மேன்டலின் போன்ற இசைக்கருவிகளுடன் ஆஃப்ரிக பழங்குடி இசை தாளக்கருவிகளும், ஆப்ரிகாவின் ஒருமிப்பு இசையும் இலங்கை கடலோரங்களில் இணைந்தபோதுதான் உயிர் துடிப்புடன் பைலா பிறந்தது. அந்த இசை கடலோரப் பகுதிகளில் நெருப்பு போல் பரவியது. நடனத்திற்கேற்ற வேகமான தாளக்கட்டைக் கொண்டிருந்தபோதிலும் உள்ளுக்குள் எங்கோ புதைந்திருக்கும் அடிமை வாழ்க்கையின் ஆழ்ந்த துயரம் தான் அவ்விசையின் பெரும் ஈர்ப்பு. பெரும்பாலான பைலா பாடல்களை வேகம் குறைத்து மெதுவாக பாடிப்பார்த்தால் இது நமக்குப் புரியும்.

மீனவர்களின் இசை வடிவங்கள் அவர்களது அன்றாட வாழ்க்கையை நேரடியாக பிரதிபலிப்பவை. எவ்வளவு வேகமான நடன இசையாகயிருந்தாலும் அதனுள் ஒரு சோகமும் அத்துடன் ஒரு சாந்தமும் புதைந்திருக்கும். கடலுக்கு போனால் ஒருபோதும் திரும்பி வர முடியாமல் போகலாம் என்ற தத்துவார்த்த சிந்தனைதான் இதன் காரணம் என்றே படுகிறது. உப்புக் கடல்நீருக்கு போய் வந்து வாழ்பவர்களின் இசைக்கும் நதிகளிலோ ஏரிகளிலோ படகுகளிலேயே வாழ்பவர்களின் இசைக்கும் அவரவர் வாழ்க்கையை சார்ந்த நுண்ணிய வேறுபாடுகள் இருக்கின்றன என்றபோதிலும் உலகம் முழுவதுமே நீர்க்கரை பாடல்களும் மீனவப் பாடல்களும் எளிமையான, குறுகிய இசைத் துணுக்குகளால் தான் உருவாக்கப்படுகிறது. இந்த இசைக் கூற்றுகள் அனைத்துமே நாம் பைலாவில் காணலாம்.

போர்த்தூகீசிய ஆஃப்ரிக மொழிகள் கலந்து பதினைந்தாம் நூற்றாண்டில் உருவான ஸ்ரீலங்கா போர்த்துகீசிய கிரியோல் (Creol) எனும் மொழி இலங்கையில் இப்போதும் ஒருசிலரால் பேசப்படுகிறது அல்லவா? அதுபோலவே உருவான ஒன்று தான் பைலா இசையுமே என்று சொல்லலாம். போர்த்துகீசிய, ஆஃப்ரிக, சிங்கள இனங்கள் ஒன்று கலந்து புதிய சமுதாயங்களும் சமூகங்களும் உருவானபோது பைலா அவர்களது தனித்துவமான இசையாக மாறியது.

ஆஃப்ரிகா மற்றும் கரீபிய நாடுகளின் கடலோர இசைகள் கலர்ந்து உருவான கேலிப்ஸோ (Calypso) எனும் இசையுடன் ஸ்கா, ராக் ஸ்டெடி போன்ற ஜமைகா இசை வகைமைகள் சேர்ந்தபோது தான், இன்று உலகம் முழுவதும் பிரபலமான ரேகே எனும் இசை பிறந்தது. தீவுகளின், நீர்க்கரைகளின் உணர்வையும் மனப் படத்தையும் கேட்பவர்களுக்குள் உடனுக்குடன் உருவாக்கும் இசை வடிவம் ரேகே. ரேகே பிரபலமடையும் வரை கரீபியன் தீவுகளில் வசிக்கும் மக்களின் முக்கியமான இசையாக இருந்தது கேலிப்ஸோ தான்.

அமேரிக்கப் பாடகர் ஹாரி பெலாஃபோண்டேயின் (Harry Belafonte) சூரிய ஒளியில் குளித்த தீவு (Island in the Sun), வாழைப்பழ ஓடம் (Banana Boat), பிரியாவிடை ஜமைக்கா (Farewell Jamaica) போன்ற பாடல்கள் தான் கேலிப்ஸோவை உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தது. இன்றும் தீவு வாழ்க்கையின் தேசிய கீதங்களாக திகழ்பவை அப்பாடல்கள். அந்த இசையின் தாக்கமும் நவீனகால பைலாவில் நாம் கேட்கலாம். நெவில் ஃபெர்னான்டோ, ஆனெஸ்லி மலேவானா, க்ளாரென்ஸ் விஜேவர்தனா போன்ற இசைஞர்கள் இவ்வகையான பைலாவை முன்னெடுத்தவர்கள். ஆங்கில மொழியில் சிறந்த பாடல் வரிகளை உருவாக்கி உலக அளவில் அதைக் கொண்டு செல்லக்கூடிய பாடகர்கள் ந்திருந்தால் கேலிப்ஸோவைப் போலவே பைலாவும் புகழ்பெற்ற ஒரு உலக நடன இசை வடிவமாக மாறியிருக்கக் கூடும்.

பாரம்பரிய பைலா இசையில் பயன்படுத்திய இசைக்கருவிகள் அனைத்துமே ஸ்பானி, போர்த்துகீசிய, ஆஃப்ரிக பின்புலம் கொண்டவை. வயலின், மேன்டலின், ஹாலோ கிட்டார், பாங்கோ, கோங்கா முழவு, தொனி மாற்றியமைத்த பியானோ போன்றவை தான் பரம்பரையாக பைலா இசைக்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால் இன்று அனைத்து மின் இசைக் கருவிகளும் பைலா இசையிலும் பயன்படுத்தப்படுகிறது. கூட்டு பைலா, வாத பைலா என்ற இரண்டு பைலா வடிவங்களில் கூட்டு பைலா தான் இசைக்கு முக்கியத்துவம் அளிப்பது. நகைச்சுவை, நக்கல் வரிகளுக்கு இடத்தைக் கொடுக்கும் வாத பைலா, இசையை விட வரிகளை நம்பியிருப்பது.

இருபதாம் நூற்றாண்டில் நவீன பைலா இசையின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் வாலி பாஸ்டியன். அவர் பாடிய ஐரீன் ஜோசஃபீன், மதகை அம்மெ, நர்ஸ் நோனா, லே கிரி கரலா ரதக் வதினவா போன்ற பாடல்கள் முக்கியமானவை. ஜே ஏ சத்தியதாசன் எனும் இசைக் குருவின் சீடரான எம் எஸ் ஃபெர்னான்டோ பைலாவின் சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்டவர். நவீன பைலா இசையின் மிக முக்கியமான பாடகராக கருதப்படுபவர் அவர். அவரது ஒபகே அம்மத போன்ற பாடல்களில் பைலாவின் துயர வெளிப்பாட்டை நாம் தெளிவாக கேட்கலாம். மற்றுமொரு முக்கிய பைலா பாடகரான சி டி ஃபெர்னான்டோவின் மேவதயகி ஜீவிதே போன்ற பல பாடல்கள் துள்ளலானது என்றாலும் அவற்றின் இசைக்கும் பாடும்முறைக்கும் உள்ளே இருக்கும் இனம்புரியாத துயரம், வரிகளின் அர்த்தம் சற்றுமே புரியாதபோதிலும் என்னால் உணரமுடிகிறது. மங்கோ களுனெந்தே எனக்கு மிகவும் பிடித்த மற்றுமொரு பைலா.

நான் இதுவரை கேட்ட பைலா பாடகர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் ஆன்டன் ஜான்ஸ். அவரது பாடும்முறை மிகவும் தனித்துவமானது. தனது இதயத்தின் துயரங்களனைத்தும் நேரடியாக வெளிப்படுவதுபோன்ற பாடும்முறை அது. அதேபோல் கிளாட் டி ஜோய்ஸாவின் பாடும் பாணியில் கேட்கக் கிடைக்கும் உணர்ச்சி வெளிப்பாடுகளும் உன்னதமானவை. அவரது குரலின் நாட்டுப்புறத் தன்மை அலாதியானது. ஸமன் டி ஸில்வாவின் மாகெ பொட்டொ தனகொல பொட்டொ போன்ற பல பைலா பாடல்கள் இந்திய இசையில் பலமுறை நகலெடுக்கப்பட்டவை.

டெஸ்மன்ட் டி ஸில்வா ஒரு மிகச் சிறப்பான பைலா பாடகர். இலங்கையின் எக்காலத்திற்குமுறிய கேளிக்கையாளர் என்று அவர் அரியப்படுகிறார். நிஹால் நெல்சன் சிறப்பாக ஆடிப்பாடக் கூடியவர். தமிழக நாட்டார் இசையின் தாளக்கருவிகளை சேர்த்து அவர் உருவாக்கிய காவடி பைலா ஒரு புகழடைந்த வடிவம் என்று தெரிகிறது. பால் ஃபெர்னான்டோ, மேக்ஸ்வெல் மென்டிஸ், தனபால உடவத்த போன்றவர்களின் பாடல்களையும் கேட்டிருக்கிறேன். சிறந்த குரல்கொண்ட ராஜீவா செபாஸ்டியன், மாரிசெல் குணதிலகே போன்றவர்களும் கேட்கக்கூடிய பாடகர்களே. ஆனால் சமகாலத்தில் கோலோச்சும் ஜிப்ஸி போன்ற இசைக் குழுக்களின் பாடும் தரம் என்னைக் கவரவில்லை. சமகால பைலா இசையில் நான் கேட்டவர்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடகி டார்லீன் சுபி. ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் பாடும் இவரது பாடும்முறை உலகத்தரமானது என்றே சொல்வேன்.

பல நூற்றாண்டுகள் கிரியோல், சிங்கள மொழிகளில் மட்டுமே உருவான பைலாப் பாடல்கள் தமிழிலும் வர ஆரம்பித்தது இருபதாம் நூற்றாண்டில் தான். நித்தி கனகரத்தினத்தின் சின்ன மாமியே உலகெங்கும் பிரபலமானதொரு தமிழ் பைலா. தமிழ் பைலாவின் தந்தை என்று அழைக்கப்படுபவரும் அவரே. எம் பி பரமேஸின் உனக்கு தெரியுமா நான் உன்னை அழைப்பதை எனும் பெரும் புகழ் பெற்ற காதல் பாடல் வேகமாகப் பாடினால்  சிறப்பான ஒரு பைலா பாடலே! அமுதன் அண்ணாமலையின் மிஸ்ஸா மிஸ்ஸிஸ்ஸா போன்ற பாடல்களும் ரசிக்க வைப்பவை.

சிலோண் மனோகர் என்று அழைக்கப்படும் ஏ இ மனோகரன், சின்ன வயதில் திரையில் பார்த்து எனக்கு பரிச்சயமான ஒரு நடிகர். பல மலையாளப் படங்களில் விசித்திரத் தோற்றம் கொண்ட வில்லனாக நடித்திருக்கிறார். அவர் பாடிய சுராங்கனி சுராங்கனி தான் இந்தியாவில் அனைவருக்கும் தெரிந்த ஒரே பைலா பாடல்! தமிழில் அவர் எனக்கே சொந்தம் (இசை இளையராஜா) போன்ற படங்களிலும், பரமாத்மா போன்ற இந்திப் படங்களிலுமெல்லாம் அப்பாடல் இடம்பெற்றிருக்கிறது! அப்பாடலின் அசல் வடிவத்திற்கும் மனோகரின் மற்ற பல தமிழ் பைலாக்களுக்கும் இசையமைத்தவர் மறைந்த சிங்கள பாடகர் க்ளாரென்ஸ் விஜேவர்தெனா தான் என்று சொல்லப்படுகிறது. மனோகர் இலங்கையில் பிரபலமான ஒரு தமிழ் பைலா பாடகர் என்பதை நான் அறிந்ததே பல ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் அவருடன் பழகியபோது தான். அவரது ஏமாற்றாதே என்னை ஏமாளியாக்காதே போன்ற பல பைலாப் பாடல்களை என்னைக் கேட்க வைத்தார். அவரது பாடல்களின் ரசிகனாக மாற என்னால் முடியவில்லையென்றாலும் அவரது பணிவான குணம் இன்றும் என் நினைவில் இருக்கிறது.

இலங்கையின் புத்தளம், மட்டக்களப்பு கடலோரங்களில் வாழ்ந்து வந்த அடிமை வம்சாவளியினரான காப்பிலி மக்கள் தான் பைலா இசையை பேணி வளர்த்தவர்கள். ஆனால் காலப்போக்கில் அவர்களுக்கும் அந்த இசைக்கும் எந்த தொடற்புமே இல்லாமலாகியது! இன்று அந்த இனமே ஏறத்தாழ அழிந்து விட்டது. இனம் எதுவாகயிருந்தாலும் பைலா இசை ரசிகனின் மனநிலையை மாற்றும் வல்லமை கொண்டது. அதன் மெட்டு நெஞ்சைத் தொடுவது. அதன் தாளக்கட்டு உடல் முழுவதும் பரவி நம்மை நடனமாடத் தூண்டுவது.

மொழி, இனம், கலாச்சாரம் போன்றவற்றையெல்லாம் வெகுதூரம் தாண்டி நிற்கும் உலகளாவிய உணர்வு இசை. அது யார் யாரிடம், எங்கெங்கெல்லாம் உருவானதென்பதும் தொலைதூரங்களிலிருக்கும் நாடுகளுக்கெல்லாம் அது எப்படியெல்லாம் வந்து சேர்ந்தது என்பதும் மனித வரலாற்றின் ஆச்சரியங்களல்லாமல் வேறென்ன? எனக்கு சிங்களம் தெரியாது. இலங்கையின் கலாச்சாரமோ அங்குள்ள உள் அரசியல்களோ எதுவுமே தெரியாது. ஆனால் இசையினூடாக அலாதியான மனித உணர்வுகளை உணர முடியும் என்று ஆழமாக நம்புகிறவன் நான். எனது மனம் மறுபடியும் லாவினியா கடற்கரையில் கேட்ட அந்த அதிசயப் பாடலுக்கு திரும்புகிறது.

மகே ஜீவன மல் உயனே ஒப வெய் பிபி பெம் குஸுமே…..

என் வாழ்க்கைப் பூங்காவில் உனது காதல் மலர் பூத்திருக்கிறது
எனது இதயம் போல் நான் உன்னைப் பாதுகாப்பேன்
மகிழ்ச்சியும் துயரமும் ஒன்றுதான் என் அன்பே
நாம் இருவரும் என்றைக்குமாக சேர்ந்திருப்போமே